வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஆண்டிராய்டு ஆட்டோ செயலில், ஆங்கிரிபேட்ஸ் 2, பீச் ஃபக்கி ரேசிங், கேண்டி கிரஷ் போன்ற காணொளி விளையாட்டுகளை விளையாடும் அம்சம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஆண்டிராய்டுஆட்டோ செயலி கடந்த 2015ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஆண்டிராய்டு திறன்பேசியோடு இணைத்துப் பயன்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது . ஆண்டிராய்டு திறன்பேசி செயலிகளை வாகனங்களின் திரை மூலமாகவே இயக்க முடியும் என்பது பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அழைப்புகளை மேற்கொள்வது, வழிகாட்டும் செயலிகளைப் பயன்படுத்துவது, பிடித்த பாடல்களைக் கேட்பது என நமது பயணத்தை எளிதாக்கியுள்ளது.
ஆண்டிராய்டுஆட்டோ, திறன்பேசியுடன் வாகனத்தை இணைக்கும் பாலம் போன்றது. ஆண்டிராய்டு ஆட்டோமேட்டிவ் இயங்குதளம் என்பது மூளையைப் போன்றது. வாகனத்திலேயே நிறுவப்பட்டிருக்கும். காலநிலை, வானொலி, வழிகாட்டுதல் உடன் வாகன இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் சில வசதிகளும் உண்டு. இதில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் காரின் திரையில் காணொளி விளையாட்டுகளை விளையாடும் அம்சம் கொண்டுவரப்பட்டது. முதற்கட்டமாக அவதார்வேல்டு, ரோப்லாக்ஸ் போன்ற விளையாட்டுகள் பயனர்களுக்கு வழங்கப்பட்டன.
இதைப் பார்த்த ஆண்டிராய்டு ஆட்டோ பயனர்கள் எங்களுக்கும் விளையாட்டுகள் வேண்டுமெனக் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை இப்போதுதான் நிறைவேற்றியிருக்கிறது கூகுள் நிறுவனம். ஆண்டிராய்டுஆட்டோ பயனர்களுக்கும் காணொளி விளையாட்டுகள் வழங்கப்படவுள்ளன.
இதனை 9டூ5கூகுள் தளம் முதலில் கண்டறிந்துள்ளது. ஆண்டிராய்டுஆட்டோவின் புதிய 14.1 பதிப்பில் இந்த அம்சம் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆங்கிரிபேட்ஸ் 2, பீச்ஃபக்கிரேசிங், கேண்டிகிரஷ், சோடா சாகா, ஃபார்ம்ஹீரோஸ் என நான்கு விளையாட்டுகள் இதில் உள்ளன. பயனர்களின் வரவேற்பைப் பொறுத்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
இந்த விளையாட்டுகளை வாகனம் ஓட்டும்போது விளையாட முடியாது. மாறாக ஓய்வு நிலையில் இருக்கும்போது மட்டுமே விளையாட முடியும். வாகன ஓட்டியின் கவனச்சிதறலைத் தவிர்ப்பதற்காகவே இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது. வாகனம் எப்போது நகரத் தொடங்குகிறதோ, அப்போது தானாகவே விளையாட்டுகள் மூடப்படும். அதோடு அதற்கான குறியீடும் சாம்பல் நிறத்தில் திறக்க முடியாதபடி மாறிவிடும்.
கசிந்துள்ள தகவல்கள் பெரும் எதிர்பார்ப்பைத் தந்தாலும், இது பற்றிய எந்த அறிவிப்பையும் கூகுள் நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் வெகு விரைவில் இந்த புதிய அம்சத்தை எதிர்பார்க்கலாம்.
- மு.இசக்கிமுத்து
