தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 1

தட்டச்சுப் பயிலகங்கள் இனிமேல் தமிழ்99 விசைப்பலகையைத்தான் சொல்லித்தர வேண்டுமென அண்மையில் உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. தமிழ்99 என்பது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட விசைப்பலகை. இந்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட விசைப்பலகை இன்ஸ்கிரிப்ட். மக்கள் இவை இரண்டையும் விடுத்து, முரசு அஞ்சல், அமுதம், அழகி, மயிலை, பாமினி எனப் பல விதங்களில் தமிழை உள்ளீடு செய்கிறார்கள்.

தமிழ்99 விசைப்பலகையில், 99 என்பது அது வெளியிடப்பட்ட ஆண்டைக்குறிக்கிறது. அறிவிப்பை வெளியிட்டுச் சுமார் இருபத்தைந்து ஆண்டுகாலமாக அதை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு எதுவும் செய்யாதது ஏன் என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இப்போது எதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றும் சிலருக்குச் சந்தேகம் வருகிறது. ஒன்றிய அரசின் இன்ஸ்கிரிப்டுக்கும் தமிழ99க்கும் என்ன வித்தியாசம் என்றொரு விவாதமும் தொடங்கியுள்ளது. எது சிறந்தது? எது எளிமையானது? கற்றுக்கொள்வதில் எளிமையாக இருக்கும் முறை, பயன்படுத்தும் போது விரைவாகத் தட்டெழுதவும் உதவுமா? இதுபோன்ற கருத்தாடல்கள் நடக்கின்றன.

இவை அனைத்தையும் அலசி விளக்கும் வகையில் செல்லினம் தளத்தில் தொடர் கட்டுரைகள் வெளியிட உள்ளோம்.

தொடங்குவதற்கு முன்பு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வோம். உள்ளீடு செய்யும் விதமும் (input method), அந்த எழுத்துகள் சேமிக்கப்படும் முறையும் (encoding) வெவ்வேறு விஷயங்கள்.

நீங்கள் எந்த உள்ளிடு முறையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அஞ்சல், தமிழ்99, பாமினி என எந்த வழியில் தட்டெழுதி உள்ளீடு செய்தாலும் அந்த எழுத்துகள் சேமிக்கப்படுவது யூனிகோடு ஆக இருக்கும்பட்சத்தில் எந்தச் சிக்கலும் இல்லை. நீங்கள் உள்ளீடு செய்த அதே வழியில்தான் அந்தக் கோப்பில் திருத்தம் மேற்கொள்ளமுடியும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் முரசு அஞ்சல் பயன்படுத்தி தட்டெழுதிய கோப்பினை மற்றொருவர் தமிழ்99 பயன்படுத்தி திருத்திக்கொள்ள முடியும். எழுத்து எவ்வகையில் சேமிக்கப்பட்டிருக்கிறது என்பதே முக்கியம். அது யூனிகோடு எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட குறியீட்டு முறைதான். 

பல ஆண்டுகளுக்கு முன்பு சில சிக்கல்கள் இருந்தன. அடோப் போட்டோஷாப் போன்ற பல செயலிகள் யூனிகோடு எழுத்துருவை ஆதரிக்காத நிலை எல்லாம் கூட ஒரு காலத்தில் இருந்தது. அம்மாதிரி சிக்கல்கள் படிப்படியாகக் களையப்பட்டு தற்போது யூனிகோடு எழுத்துருக்களே பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளது. குறிப்பாகத் திறன்பேசி பயன்படுத்துவோர் அனைவருமே அதில் உள்ள யூனிகோடு எழுத்துகளையே புழங்குகின்றனர். மற்ற இந்திய மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் யூனிகோடு பயன்படுத்த எளிதாகவும் இருக்கிறது.

முரசு அஞ்சல், மருதம், தமிழ்99, என்எச்எம், கூகுள் உள்ளீட்டுக் கருவி போன்று பல ஆண்டுகளாகப் பயன்படுத்தும் முறையும் சரி, தற்போது புதிதாக அறிமுகமாகும் உள்ளிடு முறையும் சரி, எதைப் பயன்படுத்தினாலும் தவறில்லை. அந்த உள்ளிடு முறையினால் உருவாகும் எழுத்து யூனிகோடாக இருந்தால் போதும்.

தற்போது நாம் இத்தொடர் கட்டுரைகளில் படிக்கப்போவது உள்ளிடு முறைகளைப் பற்றித்தான். யூனிகோடு பற்றி அல்ல.

இத்தனை இருக்கிறதே, எது சிறந்தது என்றொரு கேள்வி எழுவது நியாயமே. தமிழின் இயல்பை உணர்ந்த நுண்ணறிவுடன், பிழைகள் தவிர்க்கும்படி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். பயன்படுத்த எளிதாக இருக்கவேண்டும். அப்படி இருக்கும் உள்ளிடு முறைகளில் நமது பழக்கம், சூழ்நிலைக்கு ஏற்ற ஒன்றை நாம் தேர்ந்தெடுக்கலாம்.

அப்படித் தேர்ந்தெடுக்க இவற்றுக்குள் என்னென்ன வித்தியாசம் இருக்கிறது என்றறியவேண்டும். அச்சிடும் வழக்கம் தோன்றிய காலத்திலிருந்து என்னவாக பரிணமித்து எப்படியெல்லாம் மாறி இன்றைய நிலையை அடைந்துள்ளது என்று தெரிந்து கொள்வதும் பயனுள்ளதே. இத்தொடரின் அடுத்தடுத்த பகுதிகளில் அவற்றைப் பார்ப்போம்.

தொடரும்

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 2

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 3

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 4

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 5

தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 6

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now