யூடியூப் தரும் வசந்தகாலப் பரிசு

யூடியூப் செயலி குறுங்காணொளிகளை எளிதாகத் திருத்துவதற்கான ஐந்து புதிய அம்சங்களை வெளியிட்டுள்ளது.

Youtube

டிக்டாக் போன்ற செயலிகள் அறிமுகமாகி குறுங்காணொளிகள் என்ற புதிய உலகத்தை உருவாக்கிவிட்டன. இந்த உலகத்தில் தாமும் எதையாவது செய்து முன்னேறிவிட வேண்டும் என எண்ணும் பலருக்கு ஏதோ ஒரு நம்பிக்கையை இவை வழங்கி வருகின்றன. தொடக்கத்தில் இத்துறையில் பெரும் வளர்ச்சியைக் கண்ட டிக்டாக், அதன்பிறகு பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டது. டிக்டாக் விட்டுச்சென்ற இடத்தைப் பிடிக்க பல்வேறு செயலிகளும் போட்டி போட்டு வருகின்றன. அதே துறையில் வேறொரு பரிணாமத்தில் இருந்த யூடியூப், தன்னை வெகு சீக்கிரமாகவே இதற்கேற்றார்போல் மாற்றிக்கொண்டது. அதுவரை யூடியூப் பயனர்கள் பெரிய காணொளிகளுக்கு மட்டுமே பரிட்சயமாக இருந்தனர்.

அவர்களை குறுங்காணொளிகளைப் பார்க்கவும், உருவாக்கவும் பழக்கப்படுத்தியது யூடியூப். இதில் குறுங்காணொளிகளுக்கு தற்போது அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. எனவே அவ்வப்போது இதில் புதிய மேம்பாடுகள் வழங்கப்படுவது வழக்கம். இப்போது குறுங்காணொளிகளுக்கெனவே ஐந்து புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

முதல் மேம்பாடாக குறுங்காணொளிகளை எளிதாகத் திருத்துவதற்கான வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இனிமேல் ஒவ்வொரு சிறிய பகுதியையும் பெரிதாக்கவோ, சிறிதாக்கவோ, மாற்றியமைக்கவோ முடியும். உங்கள் காணொளி நீங்கள் விரும்பியதைப் போன்று வந்திருக்கிறதா என்பதைப் தெரிந்துகொள்ள முன்னோட்டம் (Preview) பார்க்கும் வசதியும் வந்துள்ளது.

குறுங்காணொளி உருவாகிவிட்டது, அடுத்து என்ன? நீங்கள் விரும்பும் ஒலியோடு அதனைப் பொருத்துவதுதானே. அந்த வேலையை எளிமையாக்குவதுதான் இரண்டாவது அம்சம். இனிமேல் நீங்கள் தேவையான ஒலியைத் தேர்ந்தெடுத்தால் மட்டும் போதும். தானாகவே அந்த ஒலியைப் பொருத்தி இறுதி காணொளியை உங்கள் கையில் தந்துவிடும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

அடுத்த அம்சம் புதுவித போகுக்குகளை (trends) உருவாக்க வேண்டும் என ஆசைப்படுபவர்களுக்கானது. இதற்கு வார்ப்புருக்கள் (Template) மிகவும் அவசியமானவை. இனிமேல் அவற்றை எளிதாக உங்கள் புகைப்படத் தொகுப்பிலிருந்தே எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள முடியும். நீங்கள் ஒரு வார்ப்புருவை பயன்படுத்துகிறீர்கள் எனில், அதனை முதல் முறையாக உருவாக்கியது யார் என்பதைக்கூட அறிந்துகொள்ள முடியும்.

அடுத்த அம்சமாக ஒட்டுப்படம் (Sticker) வருகிறது. ஒட்டுப் படங்களை இனிமேல் குறுங் காணொளிகளில் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதனையும் உங்கள் புகைப்படத் தொகுப்பிலிருந்தே எடுத்துக்கொள்ளலாம். இதே ஒட்டுப்படங்களை செயற்கை நுண்ணறிவு உருவாக்கித் தருவதுதான் அடுத்த அம்சம். உங்கள் மனத்தில் தோன்றும் சிந்தனைகளை ஒட்டுப்படங்களாக மாற்றிக்கொள்ள வழிவகை செய்கிறது இந்த அம்சம். சில வரிகளில் உங்களுக்குத் தேவையான விதத்தில் விவரித்தால், உடனடியாக ஒட்டுப்படம் தயாராகிவிடும்.

இது தொடர்பான அறிவிப்பை யூடியூப் தனது வலைப்பதிவில் வெளியிட்டுள்ளது.

  • மு.‌ இசக்கிமுத்து
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now