எழுத்தைச் சேமிக்கும் விதத்துக்கு (encoding), யூனிகோடு தகுதரம் அறிவிப்பு வருவதற்கு முன்பே உள்ளிடு முறைக்கான தகுதரத்தை தமிழ்நாடு அரசு வகுத்துவிட்டது. தனக்கு வந்த கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து ஆய்வின் அடிப்படையில் உருவான தமிழ்99 விசைப்பலகையை அறிமுகப்படுத்தியது. இதுவே அனைவரும் பயன்படுத்தவேண்டிய விசைப்பலகைத் தகுதரம் என்று அறிவித்தது. ஆனால் சட்டமியற்றிக் கட்டாயமாகப் பயன்படுத்தியே தீரவேண்டும் என்று வலியுறுத்தவில்லை. இன்ஸ்கிரிப்ட் பயன்படுத்துவாரில்லை என்பதால் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெருநிறுவனங்கள் தமிழ்99 உள்ளிடு முறையை தாமாகவே இணைத்துக் கொண்டன. சிக்கலானவை தாமாகவே வழக்கொழிந்து சில உள்ளிடு முறைகளே எஞ்சின.
தமிழ்99 விசைப்பலகை, உள்ளிடு முறையில் முக்கியமான சிறப்பு ஷிப்ட் விசை பயன்படுத்தாமல் பெரும்பாலான தமிழ்ச் சொற்களைத் தட்டெழுதிவிட முடியும். கிரந்த எழுத்துகள் போன்ற சிலவற்றுக்கே ஷிப்ட் விசையைத் தொடவேண்டி வரும். அது அரிதான பயன்பாடே.
உயிர் எழுத்துகள் ஒரு பக்கமும், மெய் எழுத்துகள் ஒரு பக்கமும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழைப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் விதத்தில் அப்படியே தட்டெழுதிவிடலாம். க உடன் இ சேர்ந்தால் கி. வ உடன் உ சேர்ந்தால் வு. விரல்களுக்குப் பயிற்சி தேவையே தவிர மனத்துக்கு எந்தப் பயிற்சியும் கிடையாது. இப்படி தனித்தனிப் பக்கத்தில் உயிர், மெய் எழுத்துகளைப் பிரித்து வைப்பது, வலது, இடது கைகளுக்குச் சமமான வேலை கொடுக்கும் தட்டெழுத்தின் அடிப்படைத் தத்துவத்திற்கும் இது பொருந்துகிறது.
இணைந்து வரும் எழுத்துகளை அருகருகே வைத்திருப்பது தமிழ்99 உள்ளிடு முறையின் மற்றொரு சிறப்பு. இந்த வரியின் கடைசிச் சொல்லில் ப்பு வருகிறதல்லவா. சிரிப்பு, துடிப்பு, காழ்ப்பு, செருப்பு, இனிப்பு. அனைத்திலும் ப்பு எழுத்துகள் அடுத்தடுத்து வருவதைப் பாருங்கள். மண்டபம், கண்டம், தண்டம். இவற்றில் ண்ட அடுத்தடுத்து வரும். ஞ்ச, ந்த, த்த என இப்படி அடிக்கடி அடுத்தடுத்து எழுத்துகள் வரும் சொற்களை ஆய்வு செய்து, பட்டியலிட்டு அவ்வெழுத்துகளை விசைப்பலகையிலும் அருகருகே இருக்கும்படி அமைத்தனர். இதனால் தட்டெழுதும்போது விரல்கள் எம்பிக் குதித்துத் துன்புறாமல் வேகமாகத் தட்டெழுத முடியும்.
தமிழ்99 கணினி மென்பொருள் அடிப்படையில் செயல்படும் விசைப்பலகை என்பதால் எளிமைப்படுத்துவதை இன்னும் சில படிகள் மேம்படுத்தினர். தங்கம் என்பதில் தஙக என்று புள்ளி வைக்காமல் அடித்தாலும் கூட பொட்டு வைத்த தங்கக் குடம்தானே நம் மரபு என்று மென்பொருளே புள்ளி வைத்து தங்க என மாற்றிக்கொள்ளும். இவ்வெழுத்துக்கள் இப்படித்தான் வரும் என்கிற இலக்கண விதிகளை மென்பொருளில் ஏற்றியிருப்பார்கள். க்க என்பதை கக எனத் தட்டினால் க்க எனத் தானாகேவே மாறிவிடும். லல, ல்ல என்றாகும். ஏனெனில் ல்ல என்பதுதான் நாம் தட்டெழுத விரும்புவது என மென்பொருளுக்குத் தெரியும். இப்படி நுட்பமாகப் பல ஆய்வுகள் மேற்கொண்டு பல சிறப்புகளை தமிழ்99 உள்ளிடு முறையில் சேர்துள்ளனர்.
இதன் மூலம் விரைவாகவும் எளிமையாகவும் தட்டெழுத முடிகிறது. இவை அனைத்தையும்விட, வேறொரு முக்கியமான பண்பும் தமிழ்99ல் உண்டு.
கால், கொம்பு, கொக்கி எல்லாம் எப்படி வேண்டுமாலும் அடிக்கலாம். கொாக்கிிி போன்று பொருளற்று எழுதவும் கூகுள் உள்ளிடு முறை அனுமதிக்கிறதல்லவா. தமிழ்99 இப்படிப் பொருளின்றி தட்டெழுதுவதை அனுமதிக்காது. தமிழுக்கென்று இருக்கும் சிறப்பு இலக்கண விதிகளைக் கருத்தில் வைத்து உருவாக்கப்பட்டது தமிழ்99. இதனால் தப்புத்தப்பாகத் தமிழை எழுதும் வாய்ப்பு குறைகிறது.
கூகுள் நிறுவனம் தோன்றுவதற்கு முன்பு, 1993ல் வெளியான முரசு அஞ்சல் உள்ளிடு முறையும் தமிழ்99 போலவே மென்பொருளில் இலக்கண விதிகளைப் பின்பற்றியே உருவாக்கப்பட்டுள்ளது. அ் -போன்ற தவறுகளைக்கூட அனுமதிக்காத, இன்னும் சில கூடுதல் விதிகளைத் தன் மென்பொருளில் வைத்துள்ளது.
எத்தனை வகை உள்ளிடு முறைகள் இருந்தாலும் இவை இரண்டு மட்டுமே இன்று பெரும்பான்மையினரால் பயன்படுத்தப்படுகின்றன. மலேசியாவில் அரசு அங்கீகாரம் பெற்ற உள்ளிடு முறையாக முரசு அஞ்சல் இருக்கிறது. சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் அதிகம் ஆங்கிலத்துடனே புழங்குகின்றனர். எனவே அஞ்சல் உள்ளிடு முறை அவர்களுக்கு ஏற்றதாகிறது. தனிப்பட்ட பயிற்சி ஏதும் தேவையில்லை என்பதால் இளைய தலைமுறையின் தேர்வாக இதுவே இருக்கிறது.
தமிழ்நாட்டில் நகரவாசிகள் ஆங்கிலத்தோடு நெருக்கம் காட்டுவதால் அவர்களும் பெரும்பாலும் அஞ்சல் உள்ளிடு முறையையே தேர்ந்தெடுக்கின்றனர். அஞ்சல் அல்லாது, என்எச்எம் ரைட்டர், அழகி, கூகுள் உள்ளீட்டு முறை என எதைப் பயன்படுத்தினாலும் இதே வகைப்பாட்டில்தான் வரும். இதைத் தமிழில், ஒலிப்புமுறை உள்ளிடு முறை எனலாம். சென்னைத் தமிழில், தங்கிலிஷ் என்பர். தங்கிலிஷ் தமிழில் சொல்வதானால் டிரான்ஸ்லிட்ரேஷன், பொனடிக் டைப்பிங் எனலாம். எந்தப் பெயரைச் சொல்லி அழைத்தாலும் விஷயம் ஒன்றுதான். ஆங்கில ammaa, தமிழ் அம்மாவாகத் திரையில் தெரியும்.
இன்னமும் தமிழ்த் தட்டச்சு முறையில் தட்டெழுதும் அரிய வகைத் தமிழர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்கள் சிறுபான்மையினரே.
தொடரும்
தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 1
தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 2
தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 3
தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 4
தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 6
