ஐபோன் பயனர்கள் இனி இயல்புநிலைச் செயலியாக வாட்சாப் மூலம் அழைப்பு விடுக்கலாம், தகவல் அனுப்பலாம் என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சில பயனர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ள இவ்வசதி விரைவில் அனைத்து பயனர்களுக்கும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதிலும் சுமார் நூறு கோடிக்கும் அதிகமானோர் ஐபோன் பயன்படுத்தி வருகின்றனர். திறன்பேசி சந்தையில் ஐபோன்கள் உச்சத்தில் உள்ள நிலையில், நிறுவனங்களுக்கு இடையிலான போட்டிகளைச் சீர்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் புதிய தொழில்நுட்பச் சந்தைச் சட்டத்தை (Digital Markets Act) கடந்த 2022-ம் ஆண்டு கொண்டு வந்தது. தொழில்நுட்ப நிறுவனங்கள் சுதந்திரத்தோடு சந்தைப் போட்டியில் ஈடுபடுவதை உறுதிப்படுத்த கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டமே, ஆப்பிள் நிறுவனத்திற்கு புதிய நெருக்கடியைக் கொடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது.
ஆப்பிள் ஐபோனில் இதுவரை அழைப்பு மற்றும் தகவல் பகிர்வுகளுக்கு தன் சொந்த செயலியையே இயல்புநிலைச் செயலியாக (Default Apps) பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இதில் மாற்றம் கொண்டு வரும் வகையில், திறன்பேசிகளில் இயல்புநிலை செயலிகளைப் பயனர்கள் தேர்வு செய்யும் வசதி வழங்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்நுட்பச் சட்டம் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. இதனால் வாட்சாப் செயலியையும் இயல்புநிலைக்குத் தேர்ந்தெடுக்கும் வசதியை வழங்க ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு வாட்சாப்பின் புதுப்பிப்பு அம்சங்களில் ஒன்றாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சம் ஐஓஎஸ் 18.2 பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதைச் செயல்படுத்த, வாட்சாப் செயலியை 25.8.74 பதிப்புக்குப் புதுப்பிக்க வேண்டும். பின்னர் ஐபோனின் கட்டமைப்புக்குள் நுழைந்து, இயல்புநிலை செயலியில் வாட்சாப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதன்மூலம் ஐபோனில் உள்ள தொடர்புகளில், யாருக்கு அழைப்பு விடுத்தாலும் அது தானாகவே வாட்சாப் அழைப்பாக நிகழும். தகவல்களைப் பகிரும்போதும் இயல்பாகவே வாட்சாப் செய்தியாக அனுப்பப்படும்.
இந்த வசதி பயனர்களுக்கு தேர்வுகளும் சுதந்திரமும் வழங்குகிறது என்று கூறப்படும் நிலையில், கலவையான எதிர்வினைகளையும் பெற்றுள்ளது. பல பயனர்கள் ஐபோனின் இயல்புநிலைச் செயலியைப் பயன்படுத்தவே விரும்புகின்றனர். வாட்சாப்பை இயல்புநிலைக்கு மாற்றுவதில் வெகுசிலர் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கிடையில் சிலர், வாட்சாப்பை இயல்பு நிலைக்கு மாற்றுவதால் வரும் அழைப்புகளை எடுப்பதில் குழப்பம் ஏற்படுவதாகவும் பதிவு செய்துள்ளனர்.
மொத்தத்தில், இந்த புதுப்பிப்பு ஐபோன் பயனர்களுக்கு அழைப்பு மற்றும் செய்தி அனுப்புதலில் அதிக சலுகையை வழங்குகிறது, மேலும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயலிகளை அமைக்க உதவுகிறது.
இந்த அம்சம் முதற்கட்டமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உட்பட்ட நாடுகளின் பயனர்களுக்கு மட்டும் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், விரைவில் உலகம் முழுவதிலும் உள்ள பயனர்களுக்கும் விரிவாக்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
