இந்தியாவில் அதிகரிக்கும் ஐபோன் உற்பத்தி

அமெரிக்காவின் புதிய வரித் திட்டத்தால் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவிலிருந்து அதிகமான ஐபோன்களை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.

Iphone-Tata-India

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 54% முதல் 108% வரையில் வரி விதித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய வரித் திட்டங்களை அறிவித்தார். இந்த அறிவிப்பு, ஆப்பிள் நிறுவனத்தை அதன் உற்பத்தி மற்றும் விநியோகத் திட்டங்களை மாற்றி அமைக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இதனால் ஐபோன்களின் விலை உயரும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. 

ஆப்பிளுக்கு என்ன நெருக்கடி? 

உலக திறன்பேசிச் சந்தையில் தனியிடம் பிடித்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் பல்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு, உலகம் முழுவதும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதில் சீனா மட்டும் 80-90% திறன்பேசிகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறது. இந்த இறக்குமதிகளுக்கு 108% வரை வரி விதிக்கும் புதிய சட்டத்தை அமெரிக்க அரசு அறிவித்திருக்கிறது. இந்த வரி விகிப்பு, ஆப்பிள் நிறுவனத்தை நேரடியாக பாதித்துள்ளது. இதனால் ஐபோன் விலை உயரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதுள்ள திறன்பேசி வகைகளின் விலையை விட 46% விலை உயரலாம் எனக் கணிக்கப்படுகிறது. இதையடுத்து அமெரிக்காவில் பலர் ஐபோன்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறைந்த விலையில் இருக்கும்போதே அதிக திறன்பேசிகளை வாங்கிக் கொள்ளலாம் என மக்கள் நினைப்பதாக அவை தெரிவிக்கின்றன. இதுவும் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆப்பிள் நிறுவனத்தைத் தள்ளியுள்ளது. 

ஆப்பிளுக்கு இந்தியா உதவிக்கரம்

ஆப்பிள் நிறுவனம் தனது மொத்த உற்பத்தியில் இந்தியாவிலிருந்து மட்டும் ஆண்டுக்கு 10% முதல் 15% உற்பத்தியைச் செய்து வந்தது. டாடா மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்களின் உதவியுடன் உற்பத்தியாகும் ஐபோன்கள், பல நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்காவில் இந்திய உற்பத்தி ஐபோன்களுக்கு 26% மட்டுமே இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே புதிய வரித் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், இந்தியாவின் உற்பத்தியை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது. இந்தாண்டு இந்திய உற்பத்தியை 20% -க்கு உயர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்திய அரசுடன் இணைந்து உற்பத்தி வசதி மற்றும் மூலப்பொருள்களுக்கான இறக்குமதி வரிச்சலுகை கோருதல் உள்ளிட்ட முயற்சிகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 

இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகளில் உற்பத்தியை அதிகரித்து, சீனாவிலிருந்து விநியோகச் சங்கிலியை முழுவதுமாக விலக்கிக் கொள்ளும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதன்மூலம் வரி தாக்கங்களிலிருந்து தப்பி, உலகளாவிய சந்தையில் ஆப்பிள் நிறுவனம் மீண்டும் நிலைத்தன்மையை உறுதி செய்யும் வழி வகைகளைச் செய்து வருகிறது. 

இந்தியாவுக்கு என்ன பயன்? 

ஆப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிப்பதன் மூலம், தொழில்நுட்ப தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படுகிறது. இந்திய அரசின் வருவாய் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகிறது. இந்தியாவிலிருந்து அதிகமான ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்படுவது, இந்தியா உற்பத்தி மூலம் உலகளாவிய சந்தையில் பொருளாதார நிலைத்தன்மைக்கு ஆதரவாக இருக்கும். இதனால், இந்தியாவின் தொழில்நுட்ப உற்பத்தி திறன் உலகளாவிய சந்தையில் உயர்ந்ததாக மதிக்கப்படும். மேலும், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தித் தொழில்நுட்பம் அத்துறையில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

  • விவேக்பாரதி
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now