கூகுள் டாஷ்கேம் செயலி

வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஆண்டிராய்டு ஆட்டோமோட்டிவ் (Android Automotive) இயங்குதளத்துடன் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய ஒரு டாஷ்கேம் செயலியை உருவாக்கியுள்ளது, கூகுள் நிறுவனம்.

Google Dashcam

அண்மையில் பெங்களூருவில் எடுக்கப்பட்டதாக காணொளி ஒன்று இணையத்தில் சுற்றிவந்தது. வாகனத்தின் முன்னே ஒருவர் வந்து விழுகிறார். அவரை மோதாமல் வண்டி நிற்கிறது. விழுந்தவரை நோக்கி வாகனம் ஓட்டுபவர் “வண்டியில் டாஷ்கேம் இருக்கிறது” என்று சொல்லும் ஒலி கேட்கிறது. விழுந்தவர் எழுந்து ஓரமாக நிற்க வண்டி சாலையில் பயணத்தைத் தொடர்கிறது. வேண்டுமென்றே மோதி அடிபட்டதாகச் சொல்லிப் பணம் பறிக்க நினைத்த நபர், அது சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்து ஒதுங்கி நின்றதும் தன்னை ஏமாற்ற முயன்றவரைத் தன் தொழில்நுட்ப வசதியால் சமாளித்து சண்டைபோடாமல் வாகனஓட்டி இயல்பாக இந்நிகழ்வைக் கடந்ததையும் வேடிக்கையாகப் பலர் பகிர்ந்திருந்தனர்.

இம்மாதிரி மோசடிகளுக்கு மட்டுமின்றி காப்பீட்டு மோசடிகளைத் தவிர்க்கவும் வாகன முகப்பில் பொருத்தப்படும் காணொளிக்கருவிகள் உதவுகின்றன. விபத்து நேரும்போது சரியான இழப்பீடு வாங்க சான்றாகவும் இக்காணொளிகள் பயன்படுகின்றன. ஓட்டுநர் நடத்தையைக் கண்காணிக்கவும் சில நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பயணத்தின் போது இப்படிக் காணொளியைப் பதிவு செய்வது பாதுகாப்புச் சிக்கல்களுக்கும் தீர்வாக உள்ளது.

இவை வாகனத்தின் கண்களாகவும் செயல்படுகின்றன என்றால் மிகை இல்லை. 1980களில் ரஷ்யாவில் முதல்முறையாக இவை பாதுகாப்பு கருவியாக பயன்படுத்தப்பட்டன. பின்னர், சீனாவில் இவை  பரவலாக பயணிகள் பாதுகாப்புக்காகப் பயன்பட்டன. இப்போது, உலகளவில் பாதுகாப்பு சிந்தனையுடன் வாகனங்களை வடிவமைக்கும் அனைத்து நிறுவனங்களும் வாகனத்தின் முகப்பில் காணொளிப்பதிவுக் கருவியை வைப்பதை முக்கியமான, தேவையான வசதியாகக் கருதுகின்றன.

ஆண்டிராய்டு ஆட்டோமோட்டிவ் என்பது, ஆண்ட்ராய்டு ஆட்டோ போல திறன்பேசியில் இருந்து காட்சியைக் காட்டும் முறையல்ல. இது, வாகனங்களின் உள்ளேயே இணைக்கப்பட்டு நேரடியாக இயங்கும் முழுமையான ஆண்டிராய்டு இயங்குதளமாகும். குரல் கட்டுப்பாடுகள், மூன்றாம் தரப்பு செயலிகள், ஓடிஏ(OTA) அப்டேட்கள் போன்றவை இதன் முக்கியமான அம்சங்களாகும். இதன் மூலம் விளையாடவும் முடியும் என்கிற செய்தியே முன்னரே செல்லினம் தளத்தில் வெளியிட்டிருந்தோம். இந்த இயங்குதளத்தின் மற்றொரு சிறப்பாக டாஷ்கேம் செயலியும் இருக்கிறது.

வாகனத்தின் முகப்பில் பொருத்தப்படும் காணொளிப்பதிவுக் கருவிகளில், கம்பி இல்லா தரவு பரிமாற்றம், இரவு நேர பதிவு திறன், வேகக் கணிப்பு மற்றும் இடம் குறித்த தகவல் சேமிப்பு போன்ற பல அம்சங்கள் உள்ளன. நவீன வாகனங்களில், பல்வேறு மின்னணு கருவிகள் மற்றும் பல காணொளிக்கருவிகள் உள்ளன. இவை, வாகனத்தின் பின்புறத்தில் உள்ள நபர்கள் அல்லது பொருள்களை கண்டறிவதற்கும், மோதல்களைத் தவிர்ப்பதற்கும் பயன்படுகின்றன.

எனினும், சில வாகனங்களில் மட்டுமே சுற்றியுள்ள சூழலைப் பதிவு செய்யும் வசதி உள்ளது. பெரும்பாலான வாகனங்களில் (ஆண்டிராய்டு ஆட்டோமோட்டிவ் இயங்கும் கார்களும் கூட) வாகனத்தின் முகப்பில் காணொளிப்பதிவு செய்யும் கருவியை தனியாக வாங்கிப்பொருத்த வேண்டியுள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்காகவே  கூகுள், வாகனங்களில் எளிதாக இணைக்கக்கூடிய திறந்த மூல  டாஷ்கேம் செயலியை உருவாக்கியுள்ளது.

வாகன உற்பத்தியாளர்கள், தங்களுக்கேற்றவாறு இதை மாற்றி வடிவமைத்து, ஆண்டிராய்டு ஆட்டோமோட்டிவ் இயங்கும் வாகனங்களில் எளிதாக ஒருங்கிணைக்க முடியும். இதன் மூலம், பாதுகாப்பு மட்டுமல்ல, தொழில்நுட்ப ரீதியாகவும் வாகனங்கள் மேலும் சிறப்படைய வாய்ப்பு உள்ளது.

தொழில்நுட்பமும் பாதுகாப்பும் இணைந்து பணயம் செய்யும் இந்த நவீன உலகில், கூகுள் டாஷ்கேம் செயலி ஒரு பயனுள்ள முன்மாதிரியாகத் திகழும். எதிர்காலத்தில் இது பல வாகனங்களில் இயல்பான அம்சமாக மாறும் என்றும் நம்பலாம்.

  • நவீனா
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now