மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணிகள் தேர்வுகளில் இந்த ஆண்டு (2024-2025) தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இதில், 50 பேர் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெற்றவர்களாவர். இவர்களில் 18 மாணவர்கள் ‘நான் முதல்வன்’ உறைவிடப் பயிற்சி மையங்களின் பயனாளிகள். இத்திட்டத்தில் பயன்பெறுவோர்க்குத் தனித்துவமான வலைத்தளம் ஒன்றுள்ளது.

மாணவர்களுக்கு தொழில்துறை சார்ந்த பயிற்சிகள், வேலைவாய்ப்பு தகவல்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல்களை ‘நான் முதல்வன்’ திட்டத்தின் இணையதளம் வழங்குகிறது. இந்த வலைத்தளத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்துக் காண்போம்.
மாணவர்களின் இயல்பான திறனைக் கண்டறிந்து அவரவர் விரும்பும் துறையில் சிறந்து விளங்க அவர்களை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதே ‘நான் முதல்வன்’ திட்டம். தமிழ்நாடு அரசு இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள மாணவர்களுக்கு, தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகளை, அரசு அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்களின் மூலம் வழங்குகின்றது. இந்த பயிற்சிகள், பொறியியல், கலை, அறிவியல், மருந்தியல் மற்றும் மருத்துவ அறிவியல் போன்ற பல துறைகளில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. காணொளிப் பயிற்சியாக இக்கல்வி கற்பிக்கப்படுகிறது.
மேலும், “நான் முதல்வன் ஹேக்கத்தான்” எனப்படும் நிரல் திருவிழா, மாணவர்களின் தொழில்நுட்ப சிந்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில், தமிழகம் முழுவதும் நடைபெறும் பெரும் நிகழ்வாகும். இது கல்வி மற்றும் தொழில்துறைக்கு இடையிலான பாலமாக செயல்படுகிறது.
இளங்கலை இறுதி ஆண்டு பொறியியல் மாணவர்களும், பேராசிரியர்களும் இதில் பங்கேற்கலாம். இது தொழில்துறை சிக்கல்களுக்குத் தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கும் வாய்ப்பு இருக்கிறது.
பொதுவாக, வேலைவாய்ப்புக்காக நடத்தப்படும் தேர்வுகளில், உளவியல் திறனை அளவிடும் சைக்கோமெட்ரி (Psychometry) பரிசோதனை முக்கியப் பங்கு வகிக்கிறது. தொழில்நுட்பத் திறன்கள் மட்டுமல்லாமல், குழுவோடு வேலை செய்யும் திறன், மனத்திறன், அழுத்த நிலை, நடத்தை போன்ற அம்சங்களையும் இந்தத் தேர்வு மூலம் நிறுவனம் மதிப்பீடு செய்ய முடிகிறது. சரியான பணியாளரை தேர்வு செய்வதற்காக இந்தத் தேர்வுகள், நேர்முகத் தேர்விற்கு முந்தைய கட்டமாக நடத்தப்படுகின்றன. அத்தகைய சைகோமெட்ரி பரிசோதனைகளை மாணவர்கள் இந்தத் தளத்தில் பதிவு செய்வதன் மூலம் பயன்படுத்தி பலன் பெறலாம்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைமுறையில் உள்ள ஒரு முக்கியமான கல்வி மேம்பாட்டு முயற்சியாக “நான் முதல்வன் பள்ளிகள்” திட்டம் கருதப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து தெளிவான வழிகாட்டுதல்களையும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் வழங்குகிறது.
மேலும் “நான் முதல்வன் ஃபினிஷிங் ஸ்கூல்” (Naan Mudhalvan Finishing School) என்ற புதிய திட்டத்தின் மூலம், தொழில்நுட்பப் படிப்புகளை முடித்த மாணவர்களுக்கு, தொழில்முனைவோர் மற்றும் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்தும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல்கள், 2023ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி தொடங்கப்பட்டன. இந்தத் திட்டத்தின் மூலம் தேர்வான 1000 மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 7500 வீதம் பத்து மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மேலும், முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகளுக்கான (மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் – குடிமை பணிகள்) ஊக்கத்தொகை வழங்கும் திட்டமும் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் தேர்வுக்கான பயிற்சி மற்றும் வல்லுநர்களின் வழிகாட்டுதல் (Mentoring) பெறுகின்றனர்.
அரசுக் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் தகவல்களின் வழியாக மாணவர்கள் இத்தளத்தில் தங்களைப் பதிந்துகொள்ள முடியும். கல்லூரி கொடுக்கும் தகவல்களை வைத்து பயனர் கணக்கை உருவாக்கி மாணவர்களுக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பிவைக்கின்றனர். உதவி மையத்தினைத் தொலைப்பேசி வழியாக அழைத்தும் (9962220528) தகவல்களையும் உதவிகளையும் பெறவியலும். இணையத்தளத்தின் கீழ்ப்பகுதியில் தொலைப்பேசி எண்கள், முகவரி உள்ளிட்ட விவரங்கள் உள்ளன.
- நவீனா
தொடர்புடைய இணையப் பக்கங்கள்
