உலகின் லேசான ஐபோன்

உலகின் மிக மெல்லிய திறன்பேசியாக ஐபோன் 17 ஏர் உருவாக இருப்பதாக இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும், தொழில்நுட்ப ஆர்வலர்களும் விமர்சகர்களும் அதுகுறித்த பல்வேறு ஆரூடங்களைக் கூறி வருகின்றனர். 

apple air

ஆப்பிள் தங்கள் திறன்பேசிகளில் ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு புதுமையை, மேம்படுத்தலை, அறிமுகத்தைச் செய்துகொண்டே வருகிறது. செப்டம்பர் வந்தாலே புது ஐபோன் வெளியாகும் என்ற வழக்கத்திற்கு மக்கள் பழகிவிட்டார்கள். இதுவே ஆண்டுதோறும் ஆப்பிளின் அடுத்த அறிமுகம் என்ன என்று சந்தைக்குள் சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில்தான் 2025-ம் ஆண்டுக்கான ஐபோன் எது என்ற விவாதத்தில் ஆர்வத்தைத் தூண்டும் பல வதந்திகள் இணையதளத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

மிக மெல்லிய ஐபோன் 

ஆப்பிள் நிறுவனம் 2025-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப் போகும் திறன்பேசி வரிசை ஐபோன் 17. அது மிக மெல்லிய திறன்பேசியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, இதுவரை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 6 மற்றும் ஐபோன் எஸ்.ஈ (Iphone SE) ரகங்களை விட மெல்லியதாக இருக்கும் எனப் பேசப்படுகிறது. ‘ஐபோன் 17 ஏர்’ (Iphone 17 Air) என்று அந்த மாதிரிக்கு பெயர் வைக்க வாய்ப்புள்ளதாம். வெறும் 5.5 மில்லிமீட்டர் தடிமன் மட்டுமே கொண்ட லேசான திறன்பேசியாக அதை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வருகிறதாம். 

புதிய, பலமான வடிவமைப்பு 

ஐபோன் 17 ஏர் மாதிரியில் யுஎஸ்பி சி (USB C) வசதியுடன் மின்னேற்றி வழங்கப்படுகிறது என்றும், நீடித்து உழைக்கும் மின்கலம் இதில் பொருத்தப்படும் என்றும் சொல்கிறார்கள். அதனால் ஐபோன் 16 வரை உள்ள மாடல்களின் அதே திறன் மற்றும் அதிகப்படியான மின்கல ஆயுளுடன் ஐபோன் 17 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெல்லிய கணிப்பொறிகளின் புதிய அத்தியாயம்

ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் மடிக்கணினி உலகில் மிக மெல்லியதான மேக்புக் ஏரை அறிமுகப்படுத்தி தனியிடம் பிடித்திருக்கிறது. இப்போது திறன்பேசியிலும் மெல்லிய மாதிரியைக் கொண்டு வந்து புதிய அத்தியாயத்துக்கு வித்திடும் என்கிறார்கள் தொழில்நுட்ப ஆர்வலர்கள். இந்த ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 மேக்ஸ் என 3 விதமாகஅறிமுகமாகும் என்பது வரைக்கும் இவர்கள் அடித்துக் கூறுகிறார்கள். மேலும் தற்போதுள்ள தகவல்கள்படி இதன் விலை 900 யூரோ முதல் 1,300 யூரோ வரை இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. 

கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு என்பார்கள். அந்த உலகளவையும் கைப்பிடிக்கும் மெல்லியதாய்ச் சுருக்கப் போகும் ஐபோனின் அடுத்த படைப்புக்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்புகள் அதிகரித்தவண்ணம் இருக்கிறது.

  • விவேக்பாரதி

மெல்லிய ஐபோன் – தொழில்நுட்ப ஆர்வலர்களின் விமர்சனங்கள்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now