மொழியோடு விளையாடு

கூகுள் மொழிபெயர்ப்புச் செயலியில் தேடுதலை எளிமைப்படுத்தவும் , தெரியாத மொழியை எளிதாகக் கற்றுக்கொள்ளவும் புதிதாக இரு அம்சங்கள் வரவுள்ளன. 

Google Translate

கூகுள் மொழிபெயர்ப்பு என்பது இலவசமாகக் கிடைக்கும் இணையதளம் மற்றும் கைப்பேசி அடிப்படையிலான மொழிபெயர்ப்பு சேவையாகும். இது உலகளாவிய தகவல் தொடர்பை எளிமையாக்கிவருகிறது. ஒவ்வொரு பதிப்பிலும் இதன் தரம் மேம்பட்டுக்கொண்டே வருகிறது. கூகுளிடம் பலமான மொழிபெயர்ப்பு கட்டமைப்பு இருந்தாலும், அதன் மூலம் ஒரு தெரியாத மொழியை எளிதாகத் தெரிந்துகொள்வது கொஞ்சம் கடினம்தான். இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தித்தான் டியோலிங்கோ போன்ற செயலிகள் பயனர்களை விளையாட்டு அனுபவத்திலேயே வைத்துக்கொண்டு மொழியைக் கற்க உதவிபுரிந்தன. புரிகின்றன.

ஒரு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு அதன் எளிமைப்படுத்துதல் மிக அவசியம். அதனால் டியோலிங்கோவைப் போன்றே அம்சம் ஒன்றைக் கொண்டுவரவுள்ளது கூகுள். பயிற்சி (Practice) என்ற பொத்தானின் மூலம் அதனைச் சாத்தியப்படுத்த விரும்புகிறது. பொதுவாக கூகுள் மொழிபெயர்ப்புச் செயலியில் நீங்கள் ஒரு சொல்லை உள்ளிட்டு அதன் பொருளை உங்களுக்குத் தேவையான மொழியில் தெரிந்துகொள்கிறீர்கள். அப்போது அந்த மொழிபெயர்ப்புப் பக்கத்தின் அருகே பயிற்சி என்ற புதிய பொத்தான் காண்பிக்கப்படும்.

அதனைத் தொட்டால் அந்த மொழியைக் கற்றுக்கொள்வதற்கான புதிய பக்கம் ஒன்று திறக்கும். அதில் சிறு சிறு செயல்பாடுகள், சொல் விளையாட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் எளிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள முடியும். இதனைப் பயன்படுத்துவதற்கு உங்கள் கூகுள் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழைந்திருக்க வேண்டும். அதோடு கூகுள் மொழிபெயர்ப்பு செயலிக்கு ஒலிவாங்கிக்கான அனுமதியையும் வழங்க வேண்டும். இது மட்டுமில்லாது இன்னும் ஒரு மாற்றமும் வரவுள்ளது. 

தேடுதலை எளிமைப்படுத்தும் விதத்தில் இருக்கிறது இந்த அம்சம். ஒரு சொல்லைக் கூகுள் மொழிபெயர்ப்புச் செயலியில் உள்ளிடுகிறீர்கள். அப்போது அதைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் உங்களுக்குத் தேவைப்படுகிறது எனில், அதே சொல்லை மீண்டும் தேடுதல் பொறியிலும் உள்ளிடுவீர்கள். இப்போதைய புதிய அம்சத்தில் உங்கள் மொழிபெயர்ப்புப் பக்கத்திற்கு அருகிலேயே கூகுளின் குறியீடு தோன்றும். அதைத் தொட்டால், நேரடியாகத் தேடுதல் பொறி வழங்கும் முடிவுகள் தோன்றும்.

இந்த இரு புதிய அம்சங்கள் பற்றிய குறிப்புகள் கூகுள் மொழிபெயர்ப்புச் செயலியின் புதிய பதிப்பான 9.7.102 வில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்பதிப்பு பயனர்களின் கைகளை வந்து சேரும்போதுதான் இதனைப் பற்றிய அனைத்து தகவல்களும் தெரியவரும்.

  • மு.‌இசக்கிமுத்து.

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now