விளம்பரத்தை நம்பாதே! 

நாம் அன்றாடம் சமூக வலைதளங்களில் உலவும்போது அழகான பல விளம்பரங்கள் நம் கண்களைக் கவரும். குறைந்த விலை, அதிக சலுகை போன்ற சொற்றொடர்கள் கருத்தை இழுக்கும். எச்சரிக்கை! அவை இணைய மோசடிக்காரர்களின் வலையாக இருக்கலாம். சிங்கப்பூரில் அப்படி நடந்த மோசடி ஒன்றில் பல மில்லியன் டாலர்களை மக்கள் இழந்துள்ளனர்.

scam

இணைய வர்த்தகம் உலகம் முழுவதிலும் இயல்பானது மட்டுமன்றி முக்கியமானதும் கூட. ஆனால் அதில்தான் நம்ப முடியாத அளவு மோசடிகள் நிறைய நடக்கின்றன. சிங்கப்பூரில் சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் மூலம் நடத்தப்பட்ட அப்படி ஒரு மோசடி குறித்து இதுவரை 128-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியிருப்பதாக காவல்துறை தெரிவிக்கிறது. 

என்ன நடந்தது? 

சிங்கப்பூரில் பேஸ்புக், எக்ஸ், டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சில விளம்பரங்கள் அடிக்கடி தலைதூக்கியுள்ளன. அவற்றில், “செயலியில் விளையாடி பணம் பெறுங்கள்; சலுகை விலை விற்பனை, பகுதி நேர வேலை, அமேசான் டெலிவரி” போன்றவை இடம்பெற்றுள்ளன. பார்வைக்கு உண்மை போலவே அமைக்கப்பட்ட அவற்றில், மேலதிக தகவல்களுக்கு அலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை உள்ளிடவும் என்றும் கேட்கப்பட்டுள்ளது. அதை நம்பி விவரங்களைக் கொடுத்தவர்களிடம்தான் மோசடி நடந்துள்ளது.

எப்படி நடந்தது? 

விவரங்களை உள்ளிட்ட பயனர்களைத் தொடர்பு கொண்ட மோசடிக்காரர்கள், முதற்கட்டமாக சிறிய தொகையைச் செலுத்தக் கூறி, இணையதள சுட்டி ஒன்றைக் கொடுத்துள்ளனர். அதற்குள் சென்று பயனர்கள் தங்கள் வங்கி விவரங்களை உள்ளிட்டதும், பரிவர்த்தனை நிராகரிப்படுவது போல்  காட்டியுள்ளாது. அதைப் பற்றி புகாரளித்தால், சரி செய்ய கூகுள் பிளே ஸ்டோரில் இல்லாத, சந்தேகத்துக்கு உரிய செயலியைத் தரவிறக்கக் கூறியுள்ளனர். அதைத் தரவிறக்கியதும் அதில் உள்ள தீம்பொருள் (Malware) வழியாக, பயனர்களின் திறன்பேசிக்கு வரும் அனைத்து செய்திகள் மற்றும் ஓடிபிகளையும் (OTP) மோசடிக்காரர்களால் படித்துவிட முடிகிறது. இவற்றைக் கொண்டே மென்பொருள் தாக்கும் நிரலாளர்கள் (Hackers) இப்பெரும் மோசடியை நிகழ்த்தியுள்ளனர்.

பாதிப்பும் எச்சரிக்கையும்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்தாண்டு மார்ச் மாதம் வரை இந்த மோசடியில் பலர் சிக்கி, பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுவரை சிங்கப்பூரில் மட்டும் 750 ஆண்டிராய்டு பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சிங்கப்பூர் மதிப்பில் 2.4 மில்லியன் டாலர்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது இந்திய மதிப்பில் 14 கோடிக்கு மேல் ஆகும். இதையடுத்து மோசடிக்காரர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இணைய தீம்பொருள் மோசடி குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 

நாம் என்ன செய்யலாம்? 

நம்பகரமாக இல்லாத விளம்பரங்களை அணுகாமல் இருக்க வேண்டும். அப்படி ஏதேனும் கண்ணில் பட்டால், குறிப்பிட்ட நிறுவனங்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்துள்ளதா என பரிசோதித்துக் கொள்ள வேண்டும். 

சந்தேகத்துக்கு உரிய வலைதள முகவரிக்குள் நுழைவது, செயலிகளைப் பதிவிறக்கம் செய்வது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். திறன்பேசியில் உள்ள பிளே ஸ்டோரில் கூகுள் பிளே ப்ரொடக்ட் (Google Play Protect) என்ற அம்சம் உள்ளது. அதை இயக்குவதன் மூலம் சந்தேகத்துக்கு உரிய செயலிகள் நம் அனுமதியின்றி திறன்பேசியில் தரவிறக்கப்படுவதைத் தவிர்க்க முடியும். 

நன்றாகத் தெரிந்த, மக்கள் அதிகம் பயன்படுத்தும், அதிகாரப்பூர்வ செயலிகளை மட்டுமே தரவிறக்க வேண்டும். தேவையில்லாத செயலிகளைத் திறன்பேசியிலிருந்து உடனே நீக்கிவிட வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால் இத்தகைய மோசடிகளிலிருந்து தப்பலாம் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

  • விவேக்பாரதி

சிங்கப்பூர் மோசடி குறித்த செய்தி

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now