செய்தியைச் சுருக்கித் தரும் வாட்சாப்

வாட்சாப்பில் நிரம்பி வழியும் செய்திகளால் அவதிப்பட்டது உண்டா? முக்கியமான தகவல்களைப் பெற பல மணி நேர உரையாடல்களில் தேடி அலைய வேண்டிய அவசியம் இனி இல்லை என்கிறது வாட்ஸ்ஆப்பின் இந்த புதிய அம்சம்.

whatsapp

நம்மில் பலரிடம் வீட்டு ஜன்னல்களைக் காட்டிலும் அதிக அளவில் வாட்ஸ்ஆப் குழுக்கள் இருக்கும். முக்கியத் தகவல் பரிமாற்றம், அரட்டை, செய்திப் பகிர்வு, சமூக நல்லிணக்கம் என அனைத்தையும் நாம் அதன் மூலம் செய்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் சில குழுக்களை நாம் முதன்மையாக (Pinned) வைத்திருக்கிறோம், சிலவற்றை நிரந்தரமாக அமைதி (Mute) ஆக்குகிறோம். ஆனால் அவற்றிலிருந்து முக்கியத் தகவல்களை நாம் தேட நேர்ந்தால், பல செய்திகளைத் தொட்டு நகர்த்தித் துழாவ வேண்டியிருக்கும். இந்தச் சவாலை எதிர்கொள்ள வாட்சாப் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 

வாட்சாப்பின் செய்திச் சுருக்கம் 

பலநாள் திறக்கப்படாத உரையாடல்கள், குழுக்களில் ஒளிந்திருக்கும் முக்கியமான தகவல்களை இனி எளிதில் கண்டுபிடித்து விடலாம். செயற்கை நுண்ணறிவை அதற்காக மெட்டா நிறுவனம் பணியமர்த்தி இருக்கிறது. தேவையான தகவல் இருக்கும் என நினைக்கும் (அல்லது) படித்தறிந்து கொள்ள வேண்டிய குழுவின் செய்திகளை செயற்கை நுண்ணறிவு முற்றிலுமாகப் படித்துவிட்டு, ஒரே செய்திச் சுருக்கமாக (summary) கொடுக்கும் அம்சம் வாட்சாப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கெனவே வாட்சாப்பில் செயல்பாட்டில் இருக்கும் மெட்டா செயற்கை நுண்ணறிவுதான் இந்த வேலையை நமக்காகச் செய்து தருகிறது. இந்தப் புதிய அறிமுகம், அதிக செய்திகளைப் படித்தறிய நேரமில்லாதவர்களுக்குப் பயனளிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

எப்படி இயக்குவது? 

செய்திகளைச் சுருக்கும் அம்சம் இப்போதைக்கு ஆண்டிராய்டு வாட்சாப் முன்னோட்டப் (Android Whatsapp Beta) பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஒவ்வொரு உரையாடலின் அடிப்பகுதியிலும் சிலருக்கு “மெட்டா உதவியுடன் சுருக்கவும்” (Summarize using Meta AI) என்ற அமைப்பு காட்டும். அதைச் சொடுக்கினால் நொடியில் நம் தகவல்களைச் செயற்கை நுண்ணறிவு சுருக்கிக் கொடுத்துவிடும். இது மேம்பட்ட தனியுரிமை (Advanced Privacy) அம்சத்தை வைத்திருக்கும் உரையாடல்களில் வேலை செய்யாது. இதை பயனர்களின் விருப்பப்படி இயக்கவோ முடக்கவோ முடியும்.

செய்திகளை மெட்டா படிக்குமா? 

மெட்டா நிறுவனம் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியதும், நமது செய்திகளை செயற்கை நுண்ணறிவு படிக்க ஏன் அனுமதிக்க வேண்டும் என்ற கேள்வி பயனர்களிடையே எழுந்தது.  இது பயனர்களின் தனியுரிமையைப் பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் கருதுகின்றனர். ஆனால், செய்திகள் அப்படி வாசிக்கப்படாது என்று மெட்டா நிறுவனம் உறுதி அளிக்கிறது. செயற்கை நுண்ணறிவில் தனிப்பட்ட செயலாக்க முறைப்படி இந்த அம்சம் செயல்படுத்தப்படுகிறது. அது அனுப்புநர் மற்றும் பெறுநருக்கு முற்றிலும் குறியாக்கம் (Encrypted) செய்யப்பட்ட வகையில்தான் பரிமாறப்படும் என்றும், அதை யாராலும் வாசிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு சுருக்கம் செய்யும் தகவல்களும் பாதுகாப்பான இடைமுகத்தில் செயல்படுகிறது என்று மெட்டா உறுதி அளிக்கிறது. 

எங்கும் செயற்கை நுண்னறிவு

இந்த அம்சத்தை மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசெஞ்சர் போன்ற செயலிகளிலும் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தச் சுருக்க அம்சம் மூலம் தகவல்களை விரைவில் புரிந்து கொள்ள முடியும். பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்தி, பயன்பாடு அனுபவத்தை உயர்த்த முடியும். ஆக்கப்பூர்வமான பணிகளை விரைவில் முடிக்க முடியும். தொழில்நுட்ப உலகின் புதிய தாரகச் சொல்லான “எங்கும் செயற்கை நுண்ணறிவு” என்ற நோக்கத்திற்கு இம்முயற்சி வலு சேர்க்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர். 

  • விவேக்பாரதி

வாட்ஸ்ஆப் செய்திச் சுருக்கம் குறித்த செய்தி

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now