பயணம் எளிதாகும்

பயணத் திட்டமிடலுக்காக எடுத்துவைக்கப்படும் திரைபிடிப்புப் (screenshot) படங்களை ஆய்வு செய்யும் அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் வரைபடங்கள் செயலி.

Google maps

கோடைக்காலம் வேறு ஆரம்பித்துவிட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, விடுமுறையைக் கழிக்க பல்வேறு சுற்றுலாத்தலங்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம். இந்த தேடல் பயணக்கட்டுரைகள், யூடியூப் காணொளிகள், இன்ஸ்ட்டாகிராம் குறுங்காணொளிகள் எனப் பல வகைகளில் நீள்கிறது. ஒவ்வொருமுறையும் நாம் பார்க்கும் இடங்களை ஞாபகம் வைத்துக்கொள்வது கொஞ்சம் கடினம்தான். ஒருவேளை அவற்றை திரைபிடிப்பு செய்துவைத்துக்கொண்டால் இந்த வேலை எளிதாகும் வாய்ப்புள்ளது.

ஆனால் அதிகமான இடங்களை திரைபிடிப்பு செய்துவைத்தால் குழப்பம்தான் ஏற்படும். இந்த குழப்பத்தையெல்லாம் தீர்த்து நமது பயணத் திட்டமிடலை எளிமைப்படுத்த புதிய அம்சம் ஒன்றைக் கொண்டுவந்திருக்கிறது கூகுள் வரைபட செயலி. இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் எடுத்த திரைபிடிப்பு படங்களை ஆராய்ந்து அதில் உள்ள இடத்தை குறித்துவைத்துக்கொள்ள முடியும்.

இதனைப் பயன்படுத்தக் கூகுள் வரைபட செயலிக்குள் சென்று, அதில் உள்ள “நீங்கள்” பக்கத்தைத் தொடவேண்டும். அதில் திரைப்பிடிப்புகள் என்ற பக்கம் காணப்படும். அதனைத் தொட்டால் இந்த அம்சம் செயல்படும் விதம் தொடர்பான காணொளி ஒன்று ஒளிபரப்பப்படும். அதனைப் பார்க்கும்பொழுது இந்த அம்சத்தைப் பற்றிய எளிமையான புரிதல் உங்களுக்குக் கிடைக்கும்.

காணொளியைப் பார்த்தபிறகு கூகுள் வரைபட செயலி உங்கள் புகைப்படங்களைப் பயன்படுத்துவதற்கான அனுமதியைக் கேட்கும். நீங்கள் அனுமதியளித்துவிட்டால் போதும். அடுத்த முறை நீங்கள் செய்யும் பயணம் தொடர்பாக திரைபிடிப்பு செய்தால் அந்த படத்தைக் கூகுள் வரைபடங்கள் ஆராயத் தொடங்கிவிடும். அந்த படமானது நீங்கள் செல்ல விரும்பும் இடத்தைப் பற்றிய குறைந்தபட்சத் தகவல்களையாவது கொண்டிருக்க வேண்டும்.

படம் ஆராய்ந்து முடிக்கப்பட்ட பிறகு மறுபார்வை (Review) என உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதைத் தொட்டால் நீங்கள் விரும்பிய இடத்தைப் பற்றிய தகவல்கள் தோன்றும். உங்களுக்குப் பிடித்திருந்தால் அதனைப் பதிவு செய்துவைத்துக்கொள்ளலாம். இவை அனைத்துமே தானாகவே நடக்கும். ஒருவேளை உங்கள் திரைபிடிப்பு படங்களைக் கூகுள் ஆராய்வதை நீங்கள் விரும்பாவிட்டால் அதற்கும் வழி இருக்கிறது. நீங்கள் உங்களுக்குத் தேவைப்படும் திரைப்பிடிப்புகளை மட்டும் கூகுள் வரைபட செயலியில் பதிவு செய்துவைத்துக்கொள்ளலாம்.

இது பற்றிய மேலதிகத் தகவல்களைக் கூகுள் வெளியிட்டுள்ள வலைப்பதிவைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

  • மு. இசக்கிமுத்து.

கூகுள் வலைப்பக்கம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now