ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் ஒரு சொகுசு வாழ்க்கை முறை அடையாளமாகத் திகழ்வது நாம் அறிந்ததே. அதில் உள்ள நம்பகமான, பயனர் விரும்பும் அழகான வன்பொருள்கள் முதன்மையான காரணம். ஆப்பிள் கருவிகள் என்றாலே கலைநயம், நாகரிகம் எனப் போற்றப்படும் நிலையில் ஆண்டிராய்டு கருவிகள் வெறுமனே வேலைக் கருவிகளாகவே பார்க்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக ஆண்டிராய்டு பயனர்கள், ஆப்பிள் நிறுவன பயனர்களுடன் ஒப்பிடப்பட்டு குறைவாக மதிப்பிடப்படுவதும் உண்டு. இந்த எண்ணத்தை மாற்றியமைக்க கூகுள் நிறுவனம் ஒரு முயற்சியில் இறங்கியுள்ளது எனப்படுகிறது.

ரேன்ஞ் மீடியா பார்ட்னர்ஸ் எனப்படும் புகழ்பெற்ற மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து ‘100 சுழியங்கள்’ எனப்படும் புதிய திரைப்பட, தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது கூகுள். இந்நிறுவனம் சாதாரண விளம்பர முயற்சியாக அல்லாமல் ஆண்டிராய்டு கருவிகள் சிறப்பாகவும் பண்பாட்டுடன் இணைந்தும் இருப்பதை நிரூபிக்க விரும்புகிறது.
கூகுளின் இந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றும் புதிதல்ல, ஏற்கெனவே 2023-ல் வெளியான ‘குக்கூ’ என்ற ஒரு திகில் படத்தில் 100 சுழியங்கள் என்ற தயாரிப்பு நிறுவனமும் அங்கம் வகித்துள்ளது. அந்த நேரத்தில் கூகுள் இதைப் பற்றி மிகவும் வெளிப்படையாகப் பேசவில்லை. ஆனால் இப்போது ஓர் ஆண்டு கழித்து, தன் தயாரிப்பு நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்காகப் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
“ரேன்ஞ் உடனான கூட்டுறவின் மூலம் ஹாலிவுட் படைப்பாளிகளுடன் அறிவார்ந்த மற்றும் சிறந்த ஒத்துழைப்பை உருவாக்க விரும்புகிறோம். கலைத்திறனுக்கு ஆதரவளிக்கும் எங்கள் பணி மேலும் தொடரும் அதே நேரத்தில் தொழில்நுட்பத்தின் வாயிலாக புதிய கதை சொல்வதற்கான வழிகளை ஆராயவும் விரும்புகிறோம்” என்று கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அழகாக வடிவமைக்கப்பட்ட ஆண்டிராய்டு கருவிகளைச் இயல்பாகத் திரையில் காட்டி அதன் மூலம் ஆண்டிட்ராய்டு கருவிகள் பண்பாட்டுப் பரிணாமத்தில் முன்னணியில் உள்ளன என்ற எண்ணத்தைப் பயனர்கள் மத்தியில் வலுப்படுத்துவதே இந்த 100 சுழியங்கள் நிறுவனத்தின் முக்கியமான இலக்காகக் கூறப்படுகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் ஆண்டிராய்டு கருவிகளைப் பயன்படுத்துவார்கள். கூகுளின் மற்ற தொழில்நுட்பங்கள் பயன்பாடும் கதைப்போக்கில் உள்ளே இருக்கும். இதன் வழியாக ஆண்டிராய்டு கருவிகள் பற்றிய மதிப்பான எண்ணத்தை உருவாக்க முயல்வதாகச் சொல்லப்படுகிறது.
மேலும் கூகுள் மற்றும் ரேன்ஞ் மீடியா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து ‘திரையில் செயற்கை நுண்ணறிவு’ எனப்படும் ஒரு குறுந்தொடரையும் தயாரிக்கவுள்ளனர். செயற்கை நுண்ணறிவு சேவைகளில் தன்னை முன்னிலைப்படுத்துவதும் இந்த படத்தின் நோக்கமாக உள்ளது.
வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு அமெரிக்கா சுங்க வரி விதிக்கும் அபாயம் உள்ளது, இந்த சூழலில் கூகுள் தன் முக்கியமான முதலீடுகளை விரிவுபடுத்தவும் ஆண்டிட்ராய்டு கருவிகள், தங்களின் புதிய தொழில்நுட்பங்களை ஹாலிவுட்டில் பிரபலப்படுத்தவுமே இந்த துறையைத் தேர்ந்தெடுத்துள்ளது. விரைவில் கூகுளின் 100 சுழியங்கள் தயாரிப்பு நிறுவனம் பல படங்களைத் தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சத்யா கோபாலன்.
