கணினியும் கைப்பேசியும்

இன்று நம்மில் பலர் திறன்பேசி, கணினி என்ற இரு கருவிகளையும் பயன்படுத்தி வருகிறோம். இவை இரண்டிலும் நமது பயன்பாட்டை எளிமையாக்கும் வகையில் பல செயலிகள் உள்ளன. அதில் சிலவற்றைத் தெரிந்துகொள்வோம். 

save_data

நமக்குள் அதிகரித்துள்ள கணிப்பொறி நுகர்ச்சி, ஒரே நேரத்தில் பல கருவிகளைப் பயன்படுத்தும் அவசியத்தை ஏற்படுத்துகிறது. திறன்பேசி, மடிக்கணினி, கணினி என ஒரே நேரத்தில் பல கருவிகளில் நமது தரவுகள், தனிப்பயன்பாடு செய்யப்பட்டுள்ள தேர்வுகள், இணைப்புகள் உள்ளிட்டவை சீராக இருக்க விரும்புகிறோம். அதற்குச் சில செயலிகள் சிறந்த முறையில் உதவி செய்கின்றன. இணையவழி சேமிப்பு, கோப்புகளைத் திருத்துத‌ல், செய்திகள் அனுப்புதல், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல வேலைகளை இந்த செயலிகள் நமக்குத் தடையற்ற முறையில் செய்து கொடுக்கின்றன. இவற்றைக் கொண்டு நாம் எந்த இடத்தில் இருந்தாலும் எந்த வேலையையும் எளிதில் செய்துவிட முடிகிறது. 

அவற்றில் சில… 

கூகுள் டிரைவ் 

கூகுள் டிரைவ், கருவிகளுக்கு இடையிலான தரவு சேமிப்பு வசதியை நமக்கு வழங்குகிறது. ஒவ்வொரு கூகுள் கணக்கு வைத்திருக்கும் (ஜி மெயில்) பயனருக்கும் கூகுள் நிறுவனம் கூகுள் டிரைவின் 15 ஜிபி சேமிப்பு வழங்குகிறது. விண்டோஸ், மெக் ஓஎஸ், ஐஓஎஸ், ஆண்டிராய்டு என எந்த இயங்குதளத்திலும் இதை நாம் பயன்படுத்த முடியும். நம் பிடிஎஃப், படங்கள், காணொளிகள், ஒலிப்பதிவுகள் என பலவிதமான தரவுகளை நாம் கூகுள் டிரைவில் தரவேற்றம் செய்து எளிதில் யாருடனும் பகிரலாம். 

ஒன் டிரைவ் 

கூகுளின் மேகக் கணிமை வசதி போலவே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மேகக் கணிமை அம்சம் ஒன் டிரைவ். இதிலும் கூகுள் டிரைவ் போலவே விண்டோஸ், மெக் ஓஎஸ், ஐஓஎஸ் போன்ற பல இயங்குதளங்களில் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஒன் டிரைவ் 5 ஜிபி மேகக் கணிமை தரவும், 15 ஜிபி மின்னஞ்சல்பெட்டி தரவும் வழங்குகிறது. மைக்ரோசாஃப்ட் 365 உடன் ஒன் டிரைவ் இணைவதால் நாம் எம்.எஸ் வோர்டில் தட்டெழுதும் எந்தத் தரவையும் கணினி, திறன்பேசி என இரு கருவிகளுக்கு இடையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

ஸ்லாக் 

குழுக்களுக்கு உள்ளான செய்திப் பகிர்வு மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயலி ஸ்லாக். இதுவும் ஐஓஎஸ், ஆண்டிராய்டு, விண்டோஸ், மெக் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் வெற்றிகரமாகச் செயல்படுகிறது. நேரடி செய்தி அனுப்புதல், குழுக்களுக்கு செய்தி பகிர்தல், கோப்புகளைப் பகிர்ந்து கொள்ளுதல் என பல செயலிகளுக்கு கணினி, திறன்பேசியில் ஸ்லாக் மிகச் சிறந்த பயனளிக்கிறது. மேலும் ஸூம் போன்ற காணொளி அழைப்பு செயலிகளுடன் இணைந்து குழுக்களிடையே தொடர்புகொள்ளும் வசதியும் ஸ்லாக் வழங்குகிறது. 

பிட்வார்டன் 

கணினி, திறன்பேசி இரண்டிலும் பல கணக்குகள், கடவுச் சொற்கள் வைத்திருப்போர்க்கு பிட்வார்டன் உதவுகிறது. இது விண்டோஸ், லினக்ஸ், மேக் என அனைத்து இயங்குதளங்களிலும் இயங்கும் கடவுச்சொல் மேலாண்மைச் செயலி ஆகும். உலவிகளுக்கு இடையே நாம் உள்ளிடும் கடவுச் சொற்களைப் பாதுகாப்பான முறையில் பிட்வார்டன் மேலாண்மை செய்கிறது. இதில், வரம்பில்லாச் சேமிப்பு, கருவிகளுக்கு இடையே ஒத்திசைவு, பாதுகாப்பான கடவுச்சொல் உருவாக்கும் வசதி, இரட்டை நிலை அங்கீகாரம், குறியாக்கம், பயோமெட்ரிக் உள்ளிட்ட பல அம்சங்கள் வழங்கப்படுகின்றன. 

மைக்ரோசாஃப்ட் லென்ஸ் 

திறன்பேசிகளை எளிமையான ஸ்கேன் இயந்திரம் போல் மைக்ரோசாஃப்ட் லென்ஸ் செயல்பட வைக்கிறது. இதன்மூலம் எந்த கோப்பையும் துல்லியமாக ஸ்கேன் செய்து, தொழில்முறை தரத்தில் சேமித்து வைக்க முடியும். எளிமையாக சேமிக்கவும் திருத்தங்கள் மேற்கொள்ளவும் ஒன் டிரைவ், ஒன் நோட் போன்ற செயலிகளின் அம்சங்கள் ஒருங்கிணைப்பட்டுள்ளன. ஸ்கேன் செய்ய வசதியாக கோணங்களைச் சரி செய்து படமெடுக்கும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளதால் பயன்படுத்த இலகுவாக அமைகிறது. இதில் கொடுக்கப்பட்டுள்ள வைட்போர்டு அமைப்பு, பின்புறம் உள்ள வெள்ளைத் தாள் இடங்களைச் சிறந்த தரத்தில் நீக்குகிறது. 

இவை தவிற நமக்கெல்லாம் மிகத் தெரிந்த வாட்ஸ்ஆப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக செயலிகளும் கணினி மற்றும் திறன்பேசிப் பதிப்புகளாக இரு கருவிகளுக்கும் இடையில் சீரான பயன்பாட்டைச் சாத்தியமாக்கி வருகின்றன.

  • விவேக்பாரதி
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now