கூகுள் மெசேஜஸ்: இது புதிது

கூகுள் மெசேஜஸ் செயலியில் அண்மையில் சில புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதையொட்டு கூகுளுக்குப் பாராட்டும் உண்டு. சிலவற்றில் குழப்பமும் உண்டு. 

Google Messages

கூகுள் பயனர்களின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல புதிய அறிமுகங்களைத்  தன் மென்பொறியில் செய்துகொண்டே இருக்கிறது. அப்படி இந்தமுறை கூகுள் நிறுவனம் தன் மெசேஜஸ் செயலியில் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. 

புதிய அறிமுகத்தால் பாராட்டு

கூகுள் மெசேஜஸ் செயலியில் குழு உரையாடல்களில் தனிப்பட்ட நபரைக் குறிக்கப் பயன்படும் ‘@மென்ஷன்ஸ்’ என்ற அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்திருக்கிறது. ஏற்கெனவே இந்த அம்சம் தொழில்முறையான கூகுள் சூட்ஸ், மற்ற உரையாடல் செயலிகளான வாட்சாப், பேஸ்புக் போன்றவற்றில் இருப்பதுதான். ஆனால் இயல்பான கூகுள் மெசேஜஸ் பயனர்களுக்கும் இவ்வசதியை வழங்க கூகுள் திட்டமிட்டுள்ளது. 

குழு உரையாடல்களில் @ என்ற குறியுடன் குறிப்பிட விரும்பும் நபரது பெயரைப் பதிவு செய்தால், அவருக்கு தனிப்பட்ட அறிவிப்பாக அந்தச் செய்தி சென்றடையும். இதன்மூலம் முக்கியத் தகவல்களைத் தவறவிடாமல் கவனிக்க முடியும். குழு உரையாடலில் குறிப்பிட்ட செய்தியை தனிப்பட்ட நபரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முடியும். செய்தி யாரைச் சென்றடைகிறது என்பதைத் தெளிவாக்க முடியும். தற்போது சில பயனர்களுக்கு மட்டும் பீட்டா வடிவத்தில் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருவதாகவும், விரைவில் ஆண்டிராய்டு பயனர்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது. 

பழைய மாற்றத்தால் குழப்பம் 

மென்ஷன்ஸ் அம்சத்தால் கூகுளைப் பாராட்டியுள்ள பயனர்களே, அதன் இன்னொரு புதிய மாறுதலால் சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, கூகுள் கான்டாக்ட்ஸ்-ல் பலர் தங்கள் தொடர்பில் இருக்கும் நபர்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட புகைப்படங்களை வைத்திருக்கிறோம். அதில் பெரும்பாலும் விருப்பமான புகைப்படங்களே வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அதில் திடீரென்று புகைப்படங்கள் அனைத்தும் மாறியதால் பயனர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. 

புதிய மாற்றமே பழைய குழப்பம் 

தொடர்புகளில் உள்ள புகைப்படங்கள் மாறியது மட்டுமன்றி, மீண்டும் மாற்ற முடியாமல் போனது. இதுகுறித்து கூகுள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது மெசேஜஸ் செயலியில் மாற்றங்களைக் கொண்டுவரும்போது ஏற்பட்ட பயனர் விவரத்தைக் கண்டறி (Profile Discovery) என்ற அம்சம் செயல்படுத்தப்பட்டது. அது, தொடர்பில் உள்ளவர்களின் ஜிமெயில் கணக்குகளைக் கண்டறிந்து அதிலுள்ள புகைப்படங்களை இயல்புநிலையாக மாற்றிவிட்டது. இதனால்தான் இக்குழப்பம் எழுந்திருப்பதாக கூகுள் தெரிவிக்கிறது. இதைச் சரி செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. 

தற்காலிக தீர்வு என்ன? 

தற்காலிகமாக புகைப்படங்களை நாமே மாற்றிக் கொள்ளத் திறன்கருவியில் உள்ள தற்காலிகச் சேமிப்பை (Cache) மொத்தமாக அழித்துவிடலாம். பயனர் விவரங்களைக் கண்டறியும் அம்சத்தை அணைத்து வைக்கலாம். பிளேஸ்டோரில் மெசேஜஸ் செயலியின் புதுப்பிப்பை நீக்குவது உள்ளிட்ட வழிகள் தீர்வாகலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆனாலும் விரைவில் நிரந்தரத் தீர்வுகளை கூகுள் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பயனர்கள் தரப்பிலிருந்து எழுந்துள்ளது. 

  • விவேக்பாரதி

கூகுள் மெசேஜஸ் கான்டாக்ட்ஸ் புகைப்பட கோளாறு

கூகுள் மெசேஜஸ்-ல் கொண்டு வரப்பட்டுள்ள புதிய அம்சம்

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now