மெக் மறந்த கோப்புகள்

ஆப்பிள் மெக் கணினியில் மறைக்கப்பட்ட கோப்புகள் (Hidden files) சில நேரம் அதிகப்படியான சேமிப்பிடத்தை அடைத்துக் கொள்கின்றன. இவற்றைப் பாதுகாப்பாக நீக்குவதன் மூலம் சேமிப்பிடத்தை மீட்டெடுத்து, கணினியின் செயல்திறனை அதிகரிக்கலாம். 

Mac storage

மெக் கணினியில் காணப்படும்,  மறைக்கப்பட்ட கோப்புகள் என்பது பல்வேறு பயன்பாடுகளின்போது நமக்குத் தெரியாமல் பின்புலத்தில் சேமிக்கப்படும் தற்காலிகத் தரவுகளாகும். பொதுவாக ஏதேனும் ஒரு செயலாக்கத்திற்குத் துணை நிற்கும் இந்தத் தரவுகள், சேமிப்பிடங்களை அதிகப்படியாகக் கைப்பற்றிக்கொள்ளும். இதனால் சேமிப்பிடப் பற்றாக்குறை ஏற்பட்டுவிடுகிறது. மறைக்கப்பட்ட கோப்புகளைத் துல்லியமாகக் கண்டறிந்து நாமே நீக்கிவிடலாம். ஆனால், எதை நீக்க வேண்டும், எதை நீக்கிவிடக் கூடாது என்பதில் தெளிவு இருக்க வேண்டியது அவசியம்.  

நீக்க வேண்டியவை

மெக் கணினியில் உள்ள தேடும் வசதியில் (Finder) ஏதேனும் கோப்பு ஒன்றைத் திறந்து,  அதில் கமாண்ட் + ஷிப்ட் + புள்ளி (Command + Shift + .) அழுத்தினால் மறைக்கப்பட்ட கோப்புகள் காட்டப்படும். நேரடியாக அமைப்புகளுக்குள் நுழைந்து மெக்கின்டோஷ் (Macintosh) வழியாகவும் மறைக்கப்பட்ட கோப்புகளைக் காணலாம். அதற்குள் நுழைந்து மறைக்கப்பட்ட கோப்புகளில் தற்காலிகச் சேமிப்புத் தரவுகளை (Cache) அழிக்கலாம். இணையதள பயன்பாட்டின் போது, வெவ்வேறு வலைத்தளங்களில் இருந்து சேமிக்கப்படும் இந்த தற்காலிக தரவுகளே Cache எனப்படுகிறது. 

அதேபோல், பதிவு கோப்புகள் எனப்படும் Login files ஐ  நீக்கலாம்.  ஒரு வலைத்தளத்திலோ, செயலியிலோ நமது  கணக்கு விவரங்களை உள்ளிட்டு நுழையும் போது பதிவாகும் தகவல்களைப் பதிவு கோப்புகள் என்கிறார்கள்.  பயனர் பெயர், கடவுச்சொல் சேமிப்பு உள்ளிட்டவை இதற்குள் அடங்கும்.  இதை நீக்குவதும் சேமிப்பிடத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். 

தற்காலிக கோப்புகள் (Temporary Files),  நாம் கணினியை இயக்கிக் கொண்டிருக்கும்போதே பின்புலத்தில்  சேமிப்பாகும் தரவுகள் ஆகும்.  இவற்றை அவ்வப்போது நீக்கிக் கொள்வது கணினியின் வேகத்தையும் திறனையும் அதிகப்படுத்தும். அதேபோல் செயலி பயன்பாடுகளின் ஆதரவு கோப்புகள் (App Support Files),  ஒவ்வொரு செயலியாலும் தானாக சேமிக்கப்படும் பின்புல தரவுகள் ஆகும்.  இவற்றையும் கண்டறிந்து நீக்கலாம். 

சில நேரங்களில் பெரிய அளவிலான கோப்புகள் தேவையற்றவையாக சேமிப்பிடங்களில் தூங்கிக் கொண்டிருக்கும். அவற்றைக் கண்டறிந்து நீக்குவதும் சேமிப்பிடத்தையும் கணினியின் திறத்தையும் மேம்படுத்தும். இவற்றை சரியாக கண்டறிந்து  அவ்வப்போது நீக்கி வந்தாலே மெக் கணினியின் சேமிப்பிடத்தை நாம்  சிறப்பாக  மேலாண்மை செய்யலாம். 

எதை நீக்கி விடக்கூடாது? 

நம்மால் அடையாளம் காணப்பட முடியாத அனைத்து தரவுகளும் தேவையற்றவை என்பதாகிவிடாது.  அதனால் தற்காலிக கோப்புகளை நீக்கும் போது கவனம் கொள்ள வேண்டும்.  குறிப்பாக கணினியின் மென்பொறிக் கோப்புகளை (system files) நீக்கிவிடக்கூடாது. அவை,  மெக் இயங்குவதற்கான முக்கியத் தரவுகள் ஆகும்.  அதேபோல், Preferences  என்ற பெயரில்  நமது தனிப்பயனாக்க தேர்வுகள் சேமிக்கப்பட்டு இருக்கும்.  அதையும் கவனமின்றி நீக்கிவிடக்கூடாது. 

தற்காலிகக் கோப்புகளை எப்படிக் கண்டறிவது? 

பொதுவாக  தற்காலிக கோப்புகள் .  என புள்ளியைத் தொடக்கமாகக் கொண்டிருக்கும்.  இதன் மூலம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.  மேலும்,  மெக் கருவிகளில் அதிக சேமிப்பிடங்களை பிடித்து இருக்கும் கோப்புகளை சில உதவி கருவிகளைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். டெய்சி டிஸ்க், க்ளீன் மை மேக்  எக்ஸ், ஒன்லி எக்ஸ் போன்ற கருவிகள் வல்லுனர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. அவற்றை அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். 

மெக் கணினியில் மறைக்கப்பட்ட கோப்புகளை அவ்வப்போது நீக்கி சுத்தம் செய்து கொள்வது, கணினியின் சேமிப்பிடத்தை தக்க வைப்பது மட்டுமின்றி திறனை மேம்படுத்தும்.  மேலும் கணினியின் பாதுகாப்பு அம்சத்திற்கு எவ்வித களங்கமும் இல்லாமல் நம்மால் நீண்ட காலத்திற்கு  பயன்படுத்த முடியும். 

  • விவேக்பாரதி

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now