ஆப்பிள் திறன்பேசிகளில் கூகுள் மொழிபெயர்ப்பு செயலியை இயல்புநிலை (Default) செயலியாக வைத்துக்கொள்ளும் வகையிலான பயன்பாடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஆப்பிள் தனது கருவிகளில் மூன்றாம் தரப்பு செயலிகளை இயல்புநிலைச் செயலிகளாக வைத்துக்கொள்ள அனுமதியை மறுத்து வந்தது. இது புதிதாக ஆண்டிராய்டிலிருந்து ஐஓஎஸ்க்கு மாறிய பயனர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. ஐஓஎஸ் 14 இயங்குதளத்தின் அறிமுகத்திற்குப் பிறகு இந்தச் சிக்கல் ஓரளவிற்குச் சரிசெய்யப்பட்டது. ஏனெனில் மின்னஞ்சல், தேடுதல் பொறிக்கான மூன்றாம் தரப்பு செயலிகளை இயல்புநிலைச் செயலியாகப் பயன்படுத்திக்கொள்ளும் அம்சம் அப்போது வழங்கப்பட்டிருந்தது.
அப்போதிலிருந்தே இந்த அம்சத்தை விரிவுபடுத்திப் பிற செயலிகளையும் முன்வைப்பாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டுமெனக் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தன. அதன்பிறகு ஐஓஎஸ் 18.2 இயங்குதளத்தில் குறுஞ்செய்தி செயலிக்கும் இந்த அம்சம் விரிவுபடுத்தப்பட்டது. பிற பயன்பாட்டிற்கான செயலிகள் எப்போது சேர்க்கப்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே பயனர்கள் இருந்தனர்.
கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐஓஎஸ் 18.4 இயங்குதளம் இதற்கு நல்லதொரு தீர்வைத் தந்திருக்கிறது. இதில் பல்வேறு பயன்பாடுகளுக்கான மூன்றாம் தரப்பு செயலிகளை இயல்புநிலைச் செயலிகளாகப் பயன்படுத்திக்கொள்ளும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. அழைப்புகள், அழைப்பு வடிகட்டி, கடவுச்சொல் செயலி, விசைப்பலகை செயலி என்ற பல்வேறு வகையான செயலிகளை இனி இயல்புநிலைச் செயலியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இப்படி மாற்றிக்கொள்வதும் எளிதான படிநிலைகளில் சாத்தியமாகிறது. அதற்கு முதலில் உங்கள் ஆப்பிள் திறன்பேசியில் அமைப்புகளுக்குள் செல்லுங்கள். அதில் உள்ள செயலிகள் என்ற பொத்தானைச் சொடுக்கி பின்னர் தோன்றும் திரையில் இயல்புநிலைச் செயலிகள் என்ற பக்கத்தைத் தொடுங்கள். அதில் உங்களுக்குத் தேவையான பயன்பாட்டிற்கான செயலியைச் சொடுக்கி இயல்புநிலைச் செயலியாக மாற்றி எளிதாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
இவையெல்லாம் ஒரு புறம் இருக்க நாம் எதிர்பார்க்காத விஷயமாகக் கூகுள் மொழிபெயர்ப்பு செயலிக்கும் இந்த அம்சம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆப்ஸ்டோர் செயலியில் கூகுள் மொழிபெயர்ப்பு செயலியைப் பதிவிறக்கும் பக்கத்திற்குள் சென்று, அதில் உள்ள வெளியீட்டுக் குறிப்புக்கான பக்கத்தைச் சொடுக்கினால் இந்த புதிய அம்சத்தை அறிந்துகொள்ள முடியும். அதில் நீங்கள் கூகுள் மொழிபெயர்ப்பு செயலியை இயல்புநிலைச் செயலியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்ற தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் கூகுள் மொழிபெயர்ப்பு செயலிக்கு மட்டுமே இத்தகைய அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனை இயல்புநிலைச் செயலியாக மாற்றிக்கொள்வதற்கும் முன்பு பார்த்த அதே வழிமுறைதான்.
ஐஓஎஸ் மற்றும் ஐபேட்ஓஎஸில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றம் பயனர்கள் மத்தியில் நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும்.
- மு. இசக்கிமுத்து
