மெக்கின்டாஷ் புன்னகை -4

எண்பதுகளின் பிற்பகுதியில் தொடங்கி தொண்ணூறுகளின் நடுப்பகுதி வரைக்கும் ஆப்பிள் நிறுவனத்தைவிட்டு ஸ்டீவ் ஜாப்ஸ் வெளி​யேற நேர்ந்தது நாம் அறிந்த​தே. அப்போது அவர் தொடங்கிய நெக்ஸ்ட் நிறுவனத்துக்குச் சூசனைக் கூட்டிப்போகத் தவறவில்லை. படைப்புத்துறை இயக்குநராகத் தலைமைப் பொறுப்பில் இருந்தார் சூசன். படவுரு வரைகலைத் துறையில் ஒரு புரட்சியே நடந்தது. பல்வேறு நிறச் சாயல்களைப் புதுமையாக யோசித்துப் பயன்படுத்தியிருந்தனர். வித்தியாசமான கோணங்களில் தோற்றமளிக்கும், உண்மைக்கு நெருக்கமான, பழைய படவுருக்களில் இருந்து முற்றிலும் வேறானதாக புதிய படவுருக்கள் இருந்தன. ஆனால் எளி​மையை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டார்கள். 

GeoWorks_BeOS_Solitaire

1989ஆம் ஆண்டு சொந்தமாகவே வரைகலை வடிவமைப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் சூசன். ஆட்டோடெஸ்க், ஃபாஸில், ஜெனரல் மேஜிக், ஐபிஎம், பேபால் முதலான பல புகழ்பெற்ற நிறுவனங்களுக்குப் படைப்புகளை உருவாக்கினார். விண்டோஸ் இம்முறை சுதாரித்துக் கொண்டது என்றே சொல்லாம். கூப்பிடு சூசனை என்று அள்ளிக்கொண்டது. வண்ணமயமான அழகான படவுருக்கள் 1990ஆம் ஆண்டு வெளியான விண்டோஸ் 3ஐ அலங்கரித்தன. விண்டோஸ் கணினியில் உள்ள சாலிட்டேர் சீட்டுக்கட்டு விளையாட்டு சூசன் உருவாக்கியதே. 

நிறச் சாயல்களைக் கொண்டு முப்பரிமாணத் தோற்றத்தில் உருவாக்கப்பட்ட படவுருக்களை ஐசோமேட்ரிக் என்பர். ஆப்பிள் எளிமைவாதத் தோற்றத்தைப் பின்பற்றியதால் மற்ற நிறுவனங்களும் பயனர்களும் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகே தானும் மாறியது. 

விண்டோஸ் ஆதிக்கம் செலுத்தாத சந்தையை நிரப்ப வந்தது ஜியோஒர்க்ஸ் என்செம்பிள். வணிக ரீதியான வெற்றி எப்படியிருந்தாலும் வரைகலை பயனர் இடைமுக வரலாற்றில் அழுத்தமாகத் தங்கள் தடத்தைப் பதித்தனர். 1993ஆம் ஆண்டு வெளியான என்செம்பிள் 2, முதன்மையாக நீல வண்ணத்தையும் மற்ற வண்ணங்களைக் குறைவாகவும் வைத்து உருவாக்கிய படவுருக்கள் தனித்துவமாக இருந்தன. 

இன்று இல்லாமல் போய்விட்ட பி இன்க் நிறுவனம் வெக்டர் அடிப்படையிலான படவுருக்களை உருவாக்கியது (Be Inc. – BeOS). இத்துறையில் இது முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியது. IRIX படவுருக்கள் வெக்டர் உருவங்களில் துக்குணியளவு நிழலைச் சேர்த்து ஏற்படுத்திய தோற்றமயக்கமும் அத்தகைய ஒன்றே. மேசைக் கணினித் திரையில் இருக்கும் எல்லா படவுருக்களும் பறந்து கொண்டிருப்பது போலவே இருக்கும். 

நெக்ஸ்ட், மெக் ஓஎஸ் இடையே இணைப்புப் பாலம் மாதிரி வந்தன ராப்சோடி படவுருக்கள். நிறச்சாயல் வழியாக மேம்பட்ட உருவம் ஆனால் கிளாஸிக் எளிமை அப்படியே இருந்தது. பழைய எளிமையான வடிவங்கள், ஆனால் புதுமையான வரைகலை நுட்பம் என்கிற வரிசையில் வந்த மற்றொரு படவுருத் தொகுப்பு அமிகோ 3.5 உடையது. 256 நிறங்களையும் எண்ணிலடங்கா நிறச்சாயல்களையும் கொண்ட இந்த படவுருக்கள் இன்றும் கூட ரெட்ரோ எனக் கொண்டாடப்படுகின்றன. இவை தொண்ணூறுகளின் பிற்பகுதியில் வந்த தலையாய மாற்றங்கள்.

தொடரும்.

மெக்கின்டாஷ் புன்னகை -1

மெக்கின்டாஷ் புன்னகை -2

மெக்கின்டாஷ் புன்னகை -3

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now