கணினிப் பயன்பாடு ஆரம்பிக்கும்போதே படவுரு, வரைகலைப் பயனர் இடைமுகம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நாம் யூகிக்கமுடியும். எப்போது, எப்படி வந்தன என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் இந்தக் குறுந்தொடர்.

கணினி பயன்படுத்த ஆரம்பித்துச் சுமார் முப்பதாண்டுகளுக்குப் பிறகே கணினியில் குறிப்பிட்ட ஒன்றை அடையாளப்படுத்த உதவும் படங்கள் புகழடைந்தன. இந்தப் படவுரு (icon), திருக்குறள் மாதிரி. விரிந்த பொருளைச் சுருங்கத் தரும். அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் பொருள்களோடு இணைத்துப் பொருள் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். விளக்கம்கூடத் தேவைப்படாது.
வரைகலைப் பயனர் இடைமுகத்துடன் (Graphical User Interface – GUI) வந்த முதல் வணிகக் கணினி, ஜெராக்ஸ் ஸ்டார் 8010. ஏப்ரல் 1981ஆம் ஆண்டு அறிமுகமானது இக்கணினி. தனிப்பட்ட மேசைக் கணிப்பொறியில் இருக்கும் எல்லாமும் கிட்டத்தட்ட இதில் இருந்தன. பிட்மேப் டிஸ்பிளே, படவுரு, கோப்பு, கோப்புறை (folder), அச்சுப்பதிப்பு அம்சம், மென்பொருள் தொகுப்பு, கணினிச் சுட்டி போன்றவற்றைச் சொல்லலாம். எனினும் தனி மனிதர்களைக் கருத்தில் வைத்து உருவாக்கப்படவில்லை. இது, பெரு நிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்ட கணினிப் பணிமனை (Workstation). எனவே விலை அதிகம். தோராயமாக இருபத்தைந்தாயிரம் உருப்படிகள் விற்பனையாயின என்கிறார்கள். வணிக ரீதியில் பெருவெற்றி எனச் சொல்லமுடியாதெனினும் வரைகலை பயனர் இடைமுகக் கணினிகளில் முதல் முயற்சி இதுதான்.
இதற்கு முன்பு ஜெராக்ஸ் ஆல்டோ (Xerox Alto) கணினி எழுபதுகளில் அறிமுகமாகியது. அதிலும் மேற்சொன்ன அம்சங்கள் இருந்தன. ஆனால் அது பரிசோதனை முயற்சியாக உருவாக்கப்பட்ட ஆய்வுக் கணினி மட்டுமே. டேவிட் கான்பீல்டு ஸ்மித் ஒரு கணிதவியலாளர். கணிப்பொறி அறிவியலில் முனைவர் பட்ட ஆய்வுக்காக தேர்ந்தெடுத்த தலைப்பே இந்த வரைகலை படவுரு கருத்தாக்கம். வடிவமைப்பாளர் நார்ம் காக்ஸ் உடன் இணைந்து படவுருக்களை உருவாக்கினார். பழனி கோவிலில் போடும் பட்டை மாதிரி மூன்று படுக்கைவசக் கோடுகளை கட்டளைப் பட்டியல் வருமிடங்களில் எல்லாம் காண்கிறோமல்லவா. அதன் பெயர் ஹாம்பர்கர் படவுரு. திறன்பேசிக் காலத்தில் திரை சுருங்கியதும் அது மூன்று புள்ளிகளாகிவிட்டது. அந்தப் புகழ்பெற்ற படவுருவை நார்ம் காக்ஸ்தான் உருவாக்கினார்.
அந்த ஜெராக்ஸ் கணினியில். கோப்பு, கோப்புறை, குப்பைத்தொட்டி போன்ற பலவற்றுக்கு படவுரு பயன்படுத்தியிருந்தனர். File என்ற ஆங்கிலச் சொல்லை கோப்பு என்றெழுதுவது எத்தனை பேருக்கு விளங்கும் என்று நம்மால் அறுதியிட்டுச் சொல்ல இயலாது. முதல்முறை இச்சொல்லை வாசிப்பவர் நவீன உலகில் வாழும் தமிழரே எனினும், கோப்பெருந்தேவியைச் செல்லமாகச் சுருக்கி அழைப்பதாக எண்ணவே சாத்தியங்கள் அதிகம். அச்சொல்லின் அருகில் கத்தையான காகிதப் படவுரு இருந்தால் யாரும் விளக்காமலே எதைக் குறிக்கிறது என விளங்கும்.
புதிய நுட்பத்தில் உருவாகும் கலைச்சொற்களை எந்த மொழியாக இருந்தாலும் மக்களிடம் எளிதில் கொண்டுசேர்க்க படவுரு புத்திசாலித்தனமான தீர்வு. தேவையற்ற கோப்புகளை நீக்குவதற்கு – அழி – delete – என்கிற மிக எளிமையான சொல்லைக் காட்டிலும் குப்பைத்தொட்டிப் படம் மேலும் எளிதாகப் புரியுமென்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மனித மூளை அப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
கணிப்பொறியை அரசு, பெருநிறுவனங்கள் தாண்டி பொதுமக்களும் பயன்படுத்தலாம் என்பதை ஆரம்பத்தில் யாரும் யோசிக்கவில்லை. 1983ஆம் ஆண்டு அறிமுகமான ஆப்பிள் லிசா அதை மாற்றியது. வரைகலை பயனர் இடைமுகத்துடன் வந்த முதல் தனிப்பட்ட மேசைக் கணினி இதுதான். பின்னர் வந்த மெக்கின்டாஷ், விண்டோஸ், தனி மனிதர்களைக் குறிவைத்து தனிப்பட்ட மேசைக் கணினிகளை வடிவமைக்கையில் படவுருக்களுக்குத் தனிக்கவனம் செலுத்தின. அதிலும் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் அடிப்படையில் ஒரு வரைகலைஞர். எனவே தன் எல்லா உருவாக்கங்களிலும் அழகியல் முக்கியமான கூறு என்பதில் தெளிவாக இருந்தார். கலைத்துறையைச் சேர்ந்த சூசன் கரே ஆப்பிள் நிறுவனத்தில் 1984ஆம் ஆண்டில் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டது அதன் பொருட்டே.
தொடரும்.
- கோகிலா
