மெக்கின்டாஷ் புன்னகை -3

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், தன் தயாரிப்பில் வெளிவரும் ஒவ்வொரு பொருளிலும் முழுமையை எதிர்பார்ப்பவர். திருகாணி முதற்கொண்டு எல்லாமே அழகாக இருக்கவேண்டும். சிறிய பாகம் என்றாலும் நுணுக்கமான விவரங்கள்கூடச் சரியாக இருக்கவேண்டும். சூசன், தன்னுடைய படவுருக்களில் அதிகப்படியான விவரங்களைத் தவிர்ப்பவர். இரண்டு புள்ளிகளும் கீழே ஒரு வளைந்த கோடும் போட்டால் சிரித்த முகம். அந்த முகத்தில் மீசை வரைந்தால் ஆண். பொட்டு வைத்தால் பெண். அதுவும் இந்து மத நம்பிக்கையுடைய பெண். இப்படியான மேலதிக விவரங்கள், படவுருவை, யார் வேண்டுமானாலும் தம்மோடு அடையாளப்படுத்தலாம் என்கிற பொதுத்தன்மையை நீக்கிவிடும் என்பது சூசன் வாதம்.

Windows1_Amigo_Mac

16×16 அல்லது 32×32 பிக்சல் இடத்துக்குள் ஒரு விஷயத்​தைப் புரியும்படி விளக்கிச் ​சொல்லும் படத்தை வரைவது நிச்சயம் சவாலான செயல்தான். ஆப்பிளின் முக்கியமான மென்பொறியாளரான ஆன்டி ஹெர்ட்ஸ்ஃபீல்ட், மெக் கணினியில் இதற்கென்றே ஐகான் எடிட்டரை உருவாக்கிக் கொடுத்தார். பெரிதாக்கிப் பார்க்கலாம். அழித்து வரையலாம். இன்றைக்கு இருக்கும் வானளாவிய சாத்தியங்கள் கொண்டிருக்காத அந்த அடிப்படை மென்பொருளைப் பயன்படுத்தத் தனக்குக் கிடைத்த வாய்ப்பை இன்றும் கொண்டாடுகிறார் சூசன். ஆரம்ப காலத்தில் அவர் வரைந்த படங்கள் பலவும், அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

1985ல் வந்த விண்டோஸ் முதல் பதிப்பில் இருந்த படவுருக்கள் புரிந்துகொள்ளக் கடினமாக இருந்தன. சூசன் செய்த கலைப்பணி ஆப்பிளுக்கு ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் பல மேம்பாடுகளைக் கொண்டுவந்தது ஆப்பிள். இதே காலக்கட்டத்தில் வந்த அட்டாரி (ATARI TOS), கோணங்களை அறிமுகப்படுத்தி முப்பரிமாணத் தோற்றத்தில் படவுருக்களை வரைந்தனர். அலுவலக அலமாரி பெட்டியில் கோப்புகளை அடுக்கி வைத்தது போன்ற படவுரு. அதிக கோப்புகள் இருப்பதைக் காட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட காகிதங்களின் தொகுப்பு. இப்படிப் பலவற்றைக் குறிப்பிடலாம்.

அமிகா ஒர்க்பென்ச் இன்னும் புதுமையாக யோசித்து, வாங்க சேர்ந்தே செய்வோம் எனப் பயனருக்கும் வாய்ப்பளித்தது. வேறுபட்ட வண்ணங்கள், அளவுகளில் இருந்து பயனர் விரும்பியதைத் தேர்ந்​தெடுத்துக்கொள்ள இயலும். நான்கே நான்கு வண்ணங்கள்தாம் என்றாலும்கூட, தனக்கேற்றவாறு படவுருக்களை அமைத்துக்கொள்வதை வாடிக்கையாளர்கள் விரும்பினர். பின்னர் வந்த இயங்குதளம் (GEOS – 1986) படவுருக்களின் ​கோடுகளை வண்ணமயமாக்கியது.

ஆப்பிள் இயங்குதளமும் (GS/OS – 1988) வண்ணம் பூசிக்​கொண்டது. பதினைந்து நிறங்களில் கோப்புறைகளை முக்கி மேசைக்கணினித் திரையில் ஓவியமே வரைந்தனர் பயனர்கள். கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் சேர்ந்து பென்சில் பிடித்திருப்பது போல ஒரு படவுரு நினைவிருக்கிறதல்லவா. முழுதாக வரையாமல் இரு விரல்கள்தாம் தெரியும். ஆனால் ஒரு கை பென்சிலைப் பிடித்திருக்கும் தோற்றம் தெளிவாகப் புரியும். அந்தப் படவுரு அப்போதுதான் அறிமுகமானது. நிறைய கோப்புகளை அழித்து குப்பைத்தொட்டியில் போட்டு வைத்தால் கணினியின் சேமிப்பை அடைத்துக்கொண்டு கணினியின் வேகத்தை பாதிக்கும். இதை நினைவூட்ட உப்பியிருக்கும் குப்பைத்தொட்டிப் படவுரு இதற்கு முன்பே வெளியாகிவிட்டது.

தொடரும்.

  • கோகிலா

​மெக்கின்டாஷ் புன்னகை -1

​மெக்கின்டாஷ் புன்னகை -2

மெக்கின்டாஷ் புன்னகை -4

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now