முரசு அஞ்சல் நிறுவனர் முத்து நெடுமாறன், மலேசிய கல்வி அமைச்சின் முரசு அஞ்சல் திட்டம் ஒன்றுக்குக் கூடுதல் தமிழ் எழுத்துருக்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். உடனடியாகச் செய்து முடிக்கவேண்டி வந்ததால், உதவிக்கு இந்தியாவிலுள்ள அவரது நண்பரும், எழுத்துரு வடிவமைப்பாளருமான நாணா (எ) நாராயணனை நாடினார். ஒப்புக்கொண்ட நாணா, சில எழுத்துருக்களை வரைந்து அனுப்பினார். அதில் ஒன்றின் பெயர் சிந்து. நாணா தமது மகளின் பெயரை அந்த எழுத்துருவுக்கு வைத்திருந்தார்.

இது நடந்தது 2000-த்தின் தொடக்கத்தில். அதன் பின்னர் பல எழுத்துருக்களை உருவாக்கிய முத்து நெடுமாறன், இந்தச் சிந்து எழுத்துருவை மீண்டும் சந்தித்தார். அதைக் குறிப்பிடும்போது “இருபது ஆண்டுகளுக்குப்பின், சிந்துவை மேம்படுத்த இப்போதுள்ள எழுத்துருவாக்கச் செயலி ஒன்றில் அதனைத் திறந்து பார்த்தேன். அப்போது தென்படாத குறைபாடுகள் இப்போது பளிச்சென்று தெரிந்தன. அன்றாடப் பயன்பாட்டில் இந்தக் குறைகள் குறைகளாகவே தெரியா. ஆனால் இப்போது நான் ஒரு தொழில்முறை எழுத்துருவியலாளன். இவை மிகத் தெளிவாகவே எனக்குத் தெரிந்தன; கண்களை உறுத்தின. உடனே சீர்படுத்தும் வேலையில் இறங்கினேன்” என்கிறார்.
புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு சிந்து எழுத்துருவில் சில திருத்தங்களைச் செய்து கொண்டிருந்தார் முத்து நெடுமாறன். எழுத்துகளின் உயர அகலத்தை மாற்றுவது, உகர, ஊகாரச் சுழிகளின் அளவுகளை நீட்டிச் சுருக்குவது, எழுத்துகளின் இடைவெளியைச் சீராக்குவது போன்ற முயற்சிகளைச் செய்தார். அதனையும் அவர் “விளையாடிக் கொண்டிருந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிந்து எழுத்துருவின் தனித்தன்மை மிக்க இகரக் கொக்கிகளை முத்து நெடுமாறன் சரி செய்து கொண்டிருந்தார். அப்போது, இகர கொக்கியின் தனித்துவமான வளைவுகளை க, ப, த போன்ற அடிப்படை எழுத்துகளிலும் சேர்த்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை அவருக்குள் புறப்பட்டிருக்கிறது. உடனே சிந்து எழுத்துருவை அப்படியே நகலெடுத்துக் கொண்டு, அதன் அடிப்படை கோடுகள் இருந்த இடத்திலெல்லாம் மேலும் கீழும் வளைவுகளைச் சேர்த்து வரையத் தொடங்கினார்.
“சிந்துவின் மேம்பாட்டைச் சற்று நிறுத்திவிட்டு, புதிய விளையாட்டுப்பொருள் கிடைத்த குழந்தைபோல், புதிய எழுத்துருவை உருவாக்க, அவசர அவசரமாகத் தொடங்கினேன்” என்று அவர் கூறும் எழுத்துரு, முழு வேகத்தில் உருவானது. மூன்றே நாள்களில் 300 வடிவங்களை வரைந்து தள்ளினார். அப்படியே புதிய எழுத்துரு ஒன்றும் உருவானது.
தமது எழுத்துருக்களுக்கு தனித்தமிழில் பெயர் வைக்க விரும்பும் முத்து நெடுமாறன், சிந்து என்ற பெயரை மட்டும் அப்படியே வைத்திருந்தார். அதே நேரத்தில் தற்போது உருவான புதிய எழுத்துருவும் சிந்துவிலிருந்து கிளைத்ததால், அதையும் மறக்காத வகையில் புதுப்பெயர் அமைய வேண்டும் என்று சிந்தித்தார். அதனால் இப்புதிய எழுத்துருவுக்குச் ‘சிந்தாமணி’ என்று பெயரிட்டார். நாணா தந்த எழுத்துரு, அவரது மகள் சிந்துவின் பெயரில் இருக்க, சிந்து தந்த புதிய எழுத்துரு ‘மகளின் மகளாக’ சிந்தாமணியாக உருவானது.

இதோ இந்தப் படத்தில் உள்ள தனித்துவமான வளைவுகளைக் கொண்ட காட்சியெழுத்துருவான ‘சிந்தாமணி’, முரசு அஞ்சலின் புதிய பதிப்பில் கிடைக்கவுள்ளது.
முரசு அஞ்சலின் புதிய பதிப்பு, வெவ்வேறு நாள்களில் மூன்று நாடுகளில் வெளியாகிறது. ஜூன் 27-ம் தேதி மலேசியாவிலும், ஜூலை 5-ம் தேதி சிங்கப்பூரிலும், ஜூலை 12-ம் தேதி சென்னையிலும் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்போருக்கு விதவிதமான பரிசுகள் காத்திருக்கின்றன.
முரசு அஞ்சல் வெளியீடு குறித்த விரிவான செய்தி
சிந்து எழுத்துரு குறித்த முத்து நெடுமாறனின் விரிவான கட்டுரை
- விவேக்பாரதி
