வெள்ளத்தால் அழியாது! வெந்தழலால் வேகாது!

எவ்வளவு அடித்தாலும் தாங்கும் திறன்பேசிகள் நவீன தொழில்நுட்ப உலகின் கொடை. அண்மையில் சில திறன்பேசிகள் பனிக்கடலில் மூழ்கினாலும், கொதிநீரில் பல நாள்கள் இருந்தாலும், தங்கள் செயல்திறன் குன்றாமல் முந்தைய நிலைபோல் இயங்கியதன் மூலம் பயனர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

pixel 8

ஒரு காலத்தில் கைப்பேசியில் தண்ணீர் பட்டாலே அது பழுதடைந்துவிடும் என எண்ணி பயப்பட்டது வழக்கமாக இருந்தது. இன்றைய நவீன திறன்பேசிகள், வெறும் தகவல் தொடர்புக்கான கருவிகளாக இல்லாமல், கடுமையான சூழ்நிலைகளையும் தாண்டி தங்கள் செயல்திறனை நிரூபிக்கக்கூடிய பல்துறைக்கேற்ற பல்திறனுடைய கருவிகளாக மாறியுள்ளன.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஸ்வீடனில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இருக்கிறது. காட்டுப் பகுதியில் பணியாற்றும் மைக்கேல் கிரெகுலா என்பவர், பனியால் உறைந்த நதியில் சோனார் சோதனையின் போது தனது திறன்பேசியான காலக்சி எஸ்23 அல்டிராவை தவறவிட்டுவிட்டார். அது பனிக்குழியினூடாக சுமார் மூன்று மீட்டர் ஆழத்தில் உறைந்த நீரில் விழுந்தது. மரக்கிளைகள், நெகிழி பைகள், மீன்பிடி வலை போன்றவற்றைக் கொண்டு ஒரு கருவி உருவாக்கி, தனது திறன்பேசியை மீட்டார். அதற்குள் ஐந்து மணிநேரம் கடந்துவிட்டிருந்தது. அப்போதுதான் மைக்கேலுக்கு வியப்பு காத்திருந்தது. அந்த திறன்பேசி எதுவுமே நடக்காதது போல் உடனே இயங்கத் தொடங்கியது. மேலும் ஒரு சில  தவறவிடப்பட்ட அழைப்புகளையும் திரையில் காட்டியது.

இதேபோல், கூகுள் பிக்சல் 8 திறன்பேசியும், வெந்நீரில் நான்கு நாள்கள் கிடந்த பிறகும் இயங்கியது. இவை வழக்கமான நிகழ்வுகள் அல்ல. இவை வெறும் நல்வாய்ப்பாக நடைபெறும் சம்பவங்களா? இல்லையெனில் இதற்குப் பின்னால் உறுதியான தொழில்நுட்ப அறிவியல் ஆதாரமா உள்ளதா? அதற்கான பதில் – இரண்டும்.

பெரும்பாலான திறன்பேசிகள் தற்போது ஐபி68 (IP68) எனும் சர்வதேச நீர்ப்புகா தூசிப் பாதுகாப்புச் சான்றை பெற்று வருகின்றன. இதில் 6 என்பது தூசியை எதிர்க்கும் அளவைக் குறிக்கிறது; 8 என்பது 1.5 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் வரை நீரில் தங்கக்கூடிய சக்தியை குறிக்கிறது. ஆனால் காலக்சி எஸ்23 அல்டிரா ஆர்டிக் பனிக்கடலில் ஐந்து மணி நேரம் கடந்து மீண்டிருப்பதும், Pixel 8 சுடுநீரில் நான்கு நாள்கள் இருந்தும் இயங்கிருப்பதும் வியப்புக்குரிய ஒன்றாக உள்ளது.

இதற்கான காரணங்கள் பல. முக்கியமாக, உயர் தரத்துடன் சுருக்கிய மூடப்பட்ட உள் அமைப்புகள் (sealed enclosures), தண்ணீரையும் அழுத்தங்களையும் எதிர்க்கும் கட்டமைப்புகள், வெப்பநிலைக்கேற்ப தற்காலிக செயல்பாட்டை கட்டுப்படுத்தும் மென்பொருள் போன்றவை இதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

இக்காலத்தில் கைபேசிகள் கட்டடத் தொழில், ராணுவம், வனவாழ்வு, பயணம், மீட்புப்பணிகள் போன்ற பல துறைகளில் முக்கியமான கருவியாக மாறியுள்ளன. மைக்கேல் கிரெகுலா போன்ற பயனர்கள், இவற்றை ஜிபிஎஸ் வழிகாட்டி, மொழிபெயர்ப்பாளர், இரவு நேர புகைப்பட கருவி, அவசர உதவிக்கருவியாக பயன்படுத்துகிறார்கள். அவர் தற்போது தனது குளிர்கால பயணத் தேவைகளில் மீன்பிடி வலையையும் சேர்த்திருப்பது, நம்மை சிரிக்க வைக்கும், ஆனால் அதே நேரத்தில் இன்றைய கருவிகள் எவ்வளவு நம்பிக்கையளிக்கின்றன என்று சிந்திக்கவும் வைக்கும்.

  • நவீனா

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now