திறன்பேசிகளில் பல நேரங்களில் மின்கலத்தின் மின்சக்தி மிக விரைவாகத் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டிருக்கும். வாங்கியபோது இருந்த மின்கல ஆயுள் இது இல்லையே என யோசித்திருப்போம். அதன் காரணம், நமது செயலிகள் நமக்கே தெரியாமல் பின்புலத்தில் செய்யும் சில வேலைகளே ஆகும். அவற்றைக் கட்டுப்படுத்தவும் முடியும்.

நமது திறன்பேசிகளில் நாம் நிறுவியிருக்கும் சில ஆண்டிராய்டு செயலிகள், பின்னணி தரவுகளை (Background data) அதிகம் பயன்படுத்துகின்றன. பின்புலத்தில் அவை தடையற்ற தன்மையுடன் இயங்கப் பின்னணித் தரவுகளை பயன்படுத்த வேண்டிய தேவை உருவாகிறது. நாம் பயன்படுத்தாமலேயே நிகழும் இந்த செயலின் காரணமாக திறன்பேசியில் ஒரே நேரத்தில் மின்கலத் திறனும், இணையத் தரவும் வேகமாகத் தீர்கின்றன. ஆண்டிராய்டு செயலிகளில் பின்வரும் காரணங்களுக்காக பின்னணித் தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன.
தானாக ஒத்திசைவு (Auto Sync) செய்துகொள்ளுதல் – ஜிமெயில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள், புதிய தகவல்களைப் பெறுவதற்காகப் பின்னணியில் இணையத்தைத் தொடர்ந்து பயன்படுத்த நேர்கிறது.
உள்ளடக்கப் புதுப்பிப்புகள் (Content refresh) – செய்தி செயலிகள், வானிலை செயலிகள் போன்றவை, நொடிக்கு நொடி புதிய உள்ளடக்கங்களைப் பெறுகின்றன. அவற்றைக் கவனமாக வழங்குவதற்காக பின்னணித் தரவுகளைப் பயன்படுத்துகின்றன.
படம், காணொளிகள் பதிவிறக்கம் (Media Auto Download) – வாட்சாப், டெலிகிராம் போன்ற தகவற்செயலிகள், புகைப்படங்கள், காணொளிகளைப் பின்புலத்தில் தானியங்கியாகப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள பின்புலத்தில் இணையத்தில் பயன்படுத்துகிறது.
இடம் சார்ந்த சேவைகள் (GPS Services) – கூகுள் மேப்ஸ், ஊபர் போன்ற செயலிகள் உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பு (GPS) மூலம் இடம் சார்ந்த தரவுகளைத் தன்னிச்சையாகப் பின்புலத்தில் மேம்படுத்திக் கொண்டே இருக்கும்.
தானியங்கி மேம்பாடு (Automatic Update) – கூகுள் பிளே ஸ்டோர், ஆப் அப்டேட்ஸ் போன்ற செயலிகள் சில நேரக்களில் மற்ற செயலிகளின் புதிய மேம்பாடுகளை தன்னிச்சையாகப் பதிவிறக்கிக் கொள்ளும். அதன்மூலமும் பின்னணித் தரவிழப்பு நேர்கிறது.
இதை எப்படிக் கட்டுப்படுத்தலாம்?
திறன்பேசியில் அமைப்புகள் பகுதியில் உள்ள இணையத்தரவு சேமிப்பு (Data Saver) வசதியைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு செயலியின் அடிப்படை அமைப்புகளிலும் தானியங்கி புதிப்பிப்பு/மேம்பாடு அம்சத்தை நிறுத்தி வைப்பது பின்புலத் தரவுகள் பயன்படுத்துவதை நிறுத்தும். இடம் சார்ந்த சேவைகளிலும் நமது நிகழிடத்தை (Location) தானாக கவனிக்கும் அம்சத்தை நிறுத்தி வைப்பதும் பயனளிக்கும். இவற்றைச் செய்துகொள்வதன் மூலம் கண்ணுக்குத் தெரியாமல் பின்புலத்தில் மணல்போல் கரைந்தோடும் இணையத் தரவுகளைச் சேமிக்கலாம். மின்கல நலம் வாழ திறன்பேசியைப் பாதுகாக்கலாம்.
- விவேக்பாரதி
பின்புலத் தரவுகளைக் கட்டுப்படுத்துதல் குறித்த செய்தி
