கேன்வா தளமும் இந்தியர்களும்

கேன்வா தளத்தின் நான்காவது பெரிய சந்தையாக இந்தியா இருக்கிறது. 2024ஆம் ஆண்டில் மட்டும் அறுபத்தாறு கோடிக்கும் மேற்பட்ட வடிவமைப்புகளை இந்தியர்கள் கேன்வாவில் மேற்கொண்டுள்ளனர். அதாவது நாளொன்றுக்குச் சுமார் பதினெட்டு லட்சம் வடிவமைப்புகள். இத்தகவலை இந்தியா கேன்வாவின் படைப்பூக்கத் தலைவரான மேஹக் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

canva 2025

உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களுள் ஒன்றாக உருவெடுத்துள்ளது கேன்வா (Canva). ஆன்லைன் வடிவமைப்பு தளமான கேன்வாவின் இன்றைய மொத்த நிகர மதிப்பு 25 பில்லியன் டாலர். இந்திய மதிப்பில் 2 லட்சம் கோடிக்கும் மேல். 

தன் பத்தொன்பதாவது வயதில் சாதாரண மக்களும் வரைகலை வடிவமைப்பை எளிதாகப் பயன்படுத்த வேண்டும் என்ற கனவுடன் இந்தத் துறையில் கால்பதித்துள்ளார் மெலனி பெர்கின்ஸ். இன்று தன் முப்பத்தெட்டாவது வயதில் இருபத்தோராம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றை உருவாக்கி உலகளவில் இளம் பெண்களும் முதலாளியாகலாம் என்பதற்கு முன்மாதிரியாக உருவெடுத்துச் சிறகடிக்கிறார். 

தொடக்கத்தில் மெலனியும் அவரது நண்பர் கிளிஃப் ஆப்ரெச்டும் (இப்போது மெலனியின் கணவர்) இணைந்து ஆஸ்திரேலியாவில் ‘ஃப்யூஷன் புக்’ என்ற இணையத்தள வடிவமைப்பு தளத்தை உருவாக்கியுள்ளனர். இது பள்ளிகளுக்கு ஆண்டு புத்தகங்களை உருவாக்க உதவியுள்ளது. இத்தளத்தின் வெற்றிதான் பின்னாளில் கேன்வாவின் உலகளாவிய வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. 

போட்டோஷாப், இல்லுஸ்ட்ரேடர் போன்றவற்றிற்கு மாற்றாக எளிய, அனைவரும் எளிதில் அணுகக் கூடிய கருவியாக உருவாக்கப்பட்டதே கேன்வாவின் வேகமான வளர்ச்சிக்குக் காரணம். இன்று தனி நபர்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை 190 நாடுகளில் சுமார் 150 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளது கேன்வா. 

கேன்வாவில் அடிப்படை வசதிகள் இலவசம். ஆனால் தொழில்முறை வசதிகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கேன்வாவில் நிழற்படம், காணொளி, வரைகலை ஆகியவற்றை ஒரே இடத்தில் பெறமுடியும்.  மேலும் இந்த தளத்தில் வணிக அட்டை, சுவரொட்டி, செய்தி இதழ் போன்றவற்றை  எளிதாக வடிவமைக்கலாம். இதன் மூலம் பெரிய நிறுவனங்களுக்குக் குழு அடிப்படையிலான பணிச் சேவைகளையும் வழங்க முடியும். 

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தற்போது கேன்வா நிறுவனம், முழுமையாக மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புத் தளத்தை வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு அடங்கிய புதிய தளத்தில் கேன்வா செயற்கை நுண்ணறிவு, கேன்வா குறியீடு, கேன்வா ஷீட் போன்ற பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வரைகலை வடிவமைப்புத் துறையில் கேன்வா பெரும் பாய்ச்சலில் முன்னோக்கிச் சென்றுள்ளது. 

இந்திய கேன்வா அணியை வழிநடத்தும் மேஹக், இந்தியப் பண்பாட்டுப் பின்னணியைக் கவனத்தில் கொண்டே எங்கள் செயல்பாடுகளைத் தீர்மானிக்கிறோம் என்கிறார். கல்யாணப் பத்திரிகையை வடிவமைக்கும் இந்தியர், சென்னையில் இருந்தால் ஒரு விதத்திலும் ஷில்லாங்கிலும் ஜெய்ப்பூரிலும் முற்றிலும் வேறு விதத்திலும் வடிவமைக்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டு தனித்துவமான வடிவமைப்புகளை அறிமுகப்படுத்துகிறோம் என்கிறார்.

தமிழ், குஜராத்தி, கன்னடம். மலையாளம் முதலிய பதினொரு இந்திய மாநில மொழிகளில் கேன்வா தளத்தைப் பயன்படுத்த இயலும். 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தி மொழியில் கேன்வா தளம் அறிமுகமானது. இந்தியர்களின் பயன்பாடு திறன்பேசியில் அதிகம் இருப்பதால் குறுந்திரையில் பயன்படுத்த எளிதான வடிவமைப்பை உருவாக்கியுள்ளனர். 120 இந்திய வடிவமைப்பாளர்கள் இந்திய மக்களின் மதம், பண்பாடு உள்ளிட்ட கூறுகளை வெளிப்படுத்தும் வகையிலான புதுப்புது வடிவமைப்புகளை உருவாக்குகிறார்கள்.

இந்த ஆண்டில் கேன்வாவில் என்னவெல்லாம் புதிது என்பதை காட்டும் சுருக்கமான காணொளியைக் கீழே கொடுத்துள்ளோம்.

  • சத்யா கோபாலன்

கேன்வா 2025

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now