செயற்கை நுண்ணறிவு உலாவி கோமட்

செயற்கை நுண்ணறிவு சார்ந்த தேடுபொறியான பெர்பிளெக்சிட்டி செயலியின், மற்றொரு தயாரிப்பான கோமட் செயலி விரைவில் வெளியாகும் என அதன் தலைமை செயல் அதிகாரி கூறியிருக்கிறார்.

தகவலைத் தேடுதல் என்பது நமது அன்றாட வாழ்வின் முக்கியமான அங்கமாக மாறியுள்ளது. சாதாரண ​தேடுபொறிகளில் தேடலை மேற்கொள்ளும்போது பல்வேறு பக்கங்களைப் பா​ர்த்து ஆராய்ந்து, அவற்றிலிருந்து ஒரு முடிவைப் பெறும் நிலை இருக்கிறது. இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த தேடுபொறிகள் வழக்கமான தேடுபொறிகளிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வேறுபடுகின்றன.

இவை பயனரின் தேடுதல் நோக்கத்தையும் அதன் சூழலையும் ஆழமாகப் புரிந்துகொள்கின்றன. இதன் விளைவாக, இந்த தேடுபொறிகள் மிகவும் துல்லியமான, தனிப்பயனாக்கப்பட்ட முடிவுகளை வழங்கும் திறமையைப் பெற்றுள்ளன.

பாரம்பரிய தேடுபொறிகள் நாம் வழங்கும் முக்கியச் சொற்களை (keywords) அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. அதாவது, பயனாளர் உள்ளிடும் சொற்களுக்குப் பொருந்தும் வலைப்பக்கங்களைக் கண்டறிந்து பட்டியலிடுகின்றன. மறுபுறம், செயற்கை நுண்ணறிவு தேடுபொறிகள் இயந்திரக் கற்றல் (machine learning), இயற்கை மொழி செயலாக்கம் (natural language processing) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன.

கூகுள் போன்ற பாரம்பரிய தேடுபொறிகள் கூட இப்போது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் செயற்கை நுண்ணறிவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தேடுபொறிகளி​ல் முக்கியமான ஒன்று பெர்பிளெக்சிட்டி தேடுபொறி. கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இது பயன​ர்கள் மத்தியில் நல்ல வரவேற்​பைப் பெற்று வருகிறது.

கூகுளின் செயற்கை நுண்ணறிவுடன் இதனை ஒப்பிட்டு, இதன் சிறப்புகளை விளக்கும் ஒப்பீடுகள் கூ​ட அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளன. இதன் தலைமை செயல் அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர். பெர்பிளெக்சிட்டி ​செயற்கை நுண்ணறிவு தேடுபொறிக்குக் கிடைத்த நல்ல வரவேற்பைக் கருத்தில் கொண்டு, கோமட் என்ற வலைஉலாவியை வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இதில் மேம்பட்ட தேடுபொறி வசதி இருக்கிறது.

இதனை முகவர் தேடலுக்கான உலாவி என மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கிறா​ர்கள். அதாவது ஆர்வமுள்ள பயனர்களுக்கு வலையுலகின் நுழைவாயிலாக இது இருக்கும் எனக் கூறுகிறார்கள். இதன் வெளியீட்டிற்கு இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்திருந்தால் போதும் என அதன் வெளியீடு பற்றிய தகவலை அதன் தலைமை செயல் அதிகாரி அரவிந்த் வெளியிட்டிருக்கிறார். அதில் நிறைய புது அம்சங்களையும் எதிர்பா​ர்க்கலாம் எனவும் கூறியிரு​க்​கிறார். இந்த தேடுதல் பொறியின் மெக், விண்டோ​ஸ் இயங்குதளத்திற்கான செயலிகளும் வெளியாகும். 

முன்னணி வலை உலாவிகளான கூகுள் குரோம், ​மொசில்லா பையர்பாக்​ஸ் உடனான போட்டியில் கோமட் செயலியும் இனிமேல் இணைந்துவிடும்.

  • மு. இசக்கிமுத்து

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now