அன்னப்பறவை ஃபீட்லி

பல தளங்களில் வெளியாகும் செய்திகளை ஒவ்வொரு தளமாகச் சென்று படிப்பது மிகவும் நீண்ட  நெடிய முறை. மேலும் அவை அனைத்திலும் பெரும்பாலும் ஒரே மாதிரியான செய்திகளே பகிரப்படுகின்றன. அன்னப்பறவை பாலையும் தண்ணீரையும் பிரிப்பது போலப் பல தளங்களிலிருந்து நீங்கள் விரும்பும் செய்திகளை மட்டும் தேர்ந்தெடுத்து வழங்கும் தொகுப்பான்தான் ஃபீட்லி. இச்சயெலி இலவசமாகவே கிடைக்கிறது. கட்டணம் செலுத்தினால் கூடுதல் வசதிகளும் உண்டு. இது வலை உலாவிகள், ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் செயல்படும். மேலும் இது முகில்தள சேவையாகவும் கிடைக்கிறது. 

Feedly

பல்வேறு இணையதளங்களிலிருந்து வரும் செய்திகளை ஒரே இடத்தில் தொகுத்து வழங்கும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களுக்குப் பிடித்த வலைத்தளங்கள், இணையத்தளங்கள், யூடியூப் சேனல்கள், பத்திரிகைகள் ஆகியவற்றை இங்கு சேகரித்தால் அன்றாடம் அவர்கள் வெளியிடும் செய்திகள் செயலியில் நமக்குக் காட்டும். மேலும்  இதில் செய்திகள், தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வசதியும் உள்ளது. மேலும் சில முக்கியமான அம்சங்கள், கூடுதல் தொழில்நுட்பங்களைக் கட்டண சேவையின் மூலம் பெறலாம்.

பத்திரிகையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், வலைப்பதிவர்கள், தொழில் நிபுணர்கள் ஆகியோருக்கு இந்த இணையத்தளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சுருக்கத்தைப் படித்த பிறகு, பயனர்கள் தாங்கள் விரும்பிய செய்திகளை மட்டும் தேர்ந்தெடுத்துப் படிப்பதால் தேவையில்லாதவை தவிர்க்கப்பட்டு நேரம் வீணாவது குறையும்.

எட்வின் கொடாபக்சியன் என்றவர் 2008-ம் ஆண்டு தேவ் ஹெச்டி என்ற நிறுவனத்தின் மூலம் ஃபீட்லியை உருவாக்கினார். எட்வின் தனது தொழில்நுட்ப பயணத்தை நெட்ஸ்கேப் (Netscape), ஏஓஎல் (AOL) போன்ற பெரிய நிறுவனங்களிலிருந்து ஆரம்பித்தார். பின்னர் சுயமாகத் தொழில் தொடங்க முடிவு செய்து கோலாக்ஸா (Collaxa) என்ற மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனம் பல காரணங்களால் கையை விட்டுச் சென்றதும் மீண்டும் தளராமல் புதுச் செயலியை உருவாக்கி அதில் மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளார். ஆரம்பத்தில் ஃபீட்டூ என அழைக்கப்பட்டது. பின்னர் திறன்பேசி பயனாளர்களுக்காக ஃபீட்லி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

2013-ல் கூகுள் படிப்பான் தங்கள் சேவையை நிறுத்தியபோது அப்போது அதற்கு மாற்றாக இருந்த ஃபீட்லி மிகவும் பிரபலமாக உருவெடுத்தது. அந்த சமயத்தில் வெறும் 48 மணி நேரத்தில் சுமார் ஐந்து லட்சம் புதிய பயனர்களைப் பெற்றது இச்செயலி. எட்வினால் 12 பேர் கொண்ட குழுவுடன் தொடங்கப்பட்ட இச்செயலி, இன்று உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு வெற்றிகரமான தனியார் தளமாக மாறியுள்ளது. மேலும் இந்த தளம் ஆயிரக்கணக்கான தொழில் முறை பயனாளர்களுக்கு தலையாயதொரு கருவியாக உருவெடுத்துள்ளது. 

  • சத்யா கோபாலான்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now