ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் உலகளாவிய உருவாக்குநர் மாநாடு (Worldwide Developers Conference) வந்தாலே, ஆப்பிள் பயனர்களுக்குக் கொண்டாட்டம்தான். தனது புதிய அறிமுகங்களை உலகுக்குக் காட்டவே ஆண்டுதோறும் அந்நிறுவனம் இம்மாநாட்டை நடத்துகிறது. இந்த ஆண்டும் ஜூன் 9-ம் தேதி தொடங்கி, 5 நாள்கள் உலகளாவிய உருவாக்குநர் மாநாடு நடந்து முடிந்தது. அதில் புத்துணர்வூட்டும் அம்சங்கள் பலவற்றை ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆப்பிளின் இந்தாண்டு தொழில்நுட்ப மாநாட்டில் ஐஓஎஸ் 26, ஐபேட்ஓஎஸ் 26, வாட்ச் ஓஎஸ் 26 மற்றும் விஷன் ஓஎஸ் 26 போன்றவை வெளியிடப்பட்டன. அத்துடன், ஆப்பிள் நுண்ணறிவு என்ற பெயர்கொண்ட ஆப்பிளின் தனித்துவ செயற்கை நுண்ணறிவின் வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களும் அறிமுகமாயின. அதில் சிலவற்றைக் காணலாம்.
ஐஓஎஸ் 26-ன் திரவக் கண்ணாடி
ஐபோன்களுக்கான ஐஓஎஸ் 26 மென்பொருள், திரவக் கண்ணாடி (Liquid Glass) என்ற புதிய பயனர் இயங்குதள வடிவமைப்புடன் வரவுள்ளது. திரவக் கண்ணாடி என்பது திரையில் உள்ள படவரிகளும் எழுத்துகளும் ஒளிரும்படியும் ஊடுருவும்படியும் தோற்றத்தைக் கொண்டிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. வடிவமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ள ஆப்பிள் நிறுவனம், அறிவிப்புப் பலகை, பூட்டுத்திரை, விட்ஜெட்டுகள், கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றின் தோற்றங்களை அழகாக்கியுள்ளதாகத் தெரிகிறது. ஐஓஎஸ் 7-க்குப் பிறகு இது குறிப்பிடத்தக்க மாற்றம் என்று கருதப்படுகிறது.
ஆப்பிள் நுண்ணறிவு
இந்தாண்டு உலகளாவிய உருவாக்குநர்கள் மாநாட்டில் சிறப்பிடத்தைப் பிடித்தது ஆப்பிள் நுண்ணறிவு. ஏற்கெனவே சிரி என்ற உதவியாளர் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு உலகளவில் பிரபலமான நிலையில், அதன் அடுத்த பரிமாணமாக ஆப்பிள் முழுமையான செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தியது. இந்த ஆப்பிள் நுண்ணறிவு, அழைப்புகளை நேரிடையாக உடனுக்குடன் மொழிபெயர்க்கும் என்று கூறப்படுகிறது. ஜென்மோஜி (Genmoji) என்ற வசதியின் மூலம் நாம் எழுதும் கட்டளைக்குத் தகுந்த உணர்சித்திரத்தை வரைந்துகொள்ள முடியும். மின்னஞ்சல், செய்திகள் போன்றவற்றை எளிமையாக எழுதிக்கொள்ள முடியும். செயற்கை நுண்ணறிவு மூலம் சிரியை மேம்படுத்தும் பணிகளும் நடந்து வருவதாக அறிவிக்கப்பட்டது.
மெக் திறனில் ஐபேட்
ஐபேட்களின் புதிய ஐஓஎஸ் 26 இயங்குதளத்தின் செயல்பாடு தரமுயர்த்தப்பட்டுள்ளது. மெக் கணினியைப் போலவே ஐபேடிலும் திரையின் அளவில் மாற்றங்கள் செய்யப்படும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் திரையில் இரண்டுக்கும் மேற்பட்ட செயலிகளைச் சுருக்கி, விரித்து வைத்து, இயக்கும் பல்பணி வசதி, இந்தாண்டின் முக்கியமான சிறப்பம்சமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஐபேடை மெக் கணினிகளைப் போல் பயன்படுத்த முடியும்.
அசையும் கையும் பார்க்கும் காதும்
மென் கணினிகளுக்கான இயங்குதளமான மெக் ஓஎஸ் தாஹோ 26 மேம்படுத்தலில் தேடல் அம்சம், விளையாட்டுகள், கணினி அமைப்புகள், மின்னஞ்சல் மேலாண்மை போன்றவை புதிய மேம்படுத்தல்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆப்பிள் திறன் கடிகாரங்களுக்கான இயங்குதளம் வாட்ச்ஓஎஸ் 26-ல் கை அசைவுகள் மூலம் அழைப்புகளை எடுத்தல், நிராகரித்தல், மற்றும் பாடல் பெட்டியைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றைச் செய்ய முடியும். ஆப்பிள் நிறுவனத்தின் புகழ்பெற்ற ஏர்பாட்ஸ்-ல் ஒரே தொடுதலில் படமெடுக்கும் கேமரா வசதியும் பொருத்தப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான செய்தி, நமது செல்லினம் தளத்தில் வெளியாகியுள்ளது. (இணைப்பு கீழே)
இன்னும் பாதுகாப்பு வசதிகள், செய்திகள் செயலியின் படத்தை உணர்ந்தறியும் அம்சம் உள்ளிட்ட பல அம்சங்கள் புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ளன. பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்புதிய அம்சங்கள், பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
பார்க்கும் காதுகள் : ஆப்பிள் ஏர்பாட்ஸ்
ஆப்பிள் உலகளாவிய உருவாக்குநர் மாநாடு குறித்த செய்தி
- விவேக்பாரதி
