தொலைபேசியில் இருந்து மடிக்கணினி வரை — இன்று நாம் எந்த கருவியிலும் உள்நுழைய கூகுள் கணக்கு தேவையாகிறது. ஜிமெயில், யூடியூப், கூகுள் டிரைவ் எனப் பல சேவைகளுக்கு நுழைவாயிலாக இருக்கும் இந்த கணக்கு, நம் அன்றாட வாழ்வின் முக்கியமான ஓர் அங்கமாகிவிட்டது. அதே நேரத்தில், இந்த கணக்கை குறிவைக்கும் பாதுகாப்பு மீறல்களும் அதிகரித்து வருவதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். நம்முடைய கூகுள் கணக்கின் பாதுகாப்பு மட்டுமல்ல, நம்மைப்பற்றிய தனிப்பட்ட தகவல்களும், ஆவணங்களும், நினைவுகளும், தொழில்சார்ந்த தரவுகளும் இதில் அடங்கியுள்ளன. எனவே, இந்த தகவல்கள் சிறிது நேரம் பிறர் கைக்கு சென்றால் கூட நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையே பாதிக்கப்படும். எனவே, நம்முடைய கூகுள் கணக்கை பாதுகாக்கும் சில முக்கியமான வழிகளை இங்கு பார்ப்போம்.

உங்கள் பிறந்த தேதி, பாஸ் வோர்ட்123 (password123) போன்ற எளிய கடவுச்சொற்கள் உங்கள் கணக்கை திறந்த வாசலாக மாற்றிவிடும். ஒரு வலிமையான கடவுச்சொல் என்பது குறைந்தபட்சம் 12 எழுத்துகள் கொண்டிருக்கவேண்டும், அதில் பெரிய எழுத்துகள், சிறிய எழுத்துகள், எண்கள் மற்றும் சிறப்புக் குறியீடுகள் கலந்திருக்க வேண்டும்.
நினைவில் வைத்திருக்க முடியவில்லையா? சிக்கல் இல்லை — கூகுள் கடவுச்சொல் நிர்வாகியில் (Google Password Manager) கூகுள் கணக்குக்கான கடவுச்சொல்லை சேமிப்பதை இதற்கான தீர்வாகச் சிலர் செய்கின்றனர். மாற்றாக, பிட்வார்டன் (Bitwarden), 1பாஸ்வோர்ட் (1Password), அல்லது கீபாஸ் (KeePass) போன்ற பாதுகாப்பான கடவுச்சொல் மேலாண்மைச் சேவைகளைப் பயன்படுத்தலாம்.
உங்கள் கடவுச்சொல்லை யாராவது அறிந்துவிட்டால்கூட, ஈரடுக்கு அங்கீகாரம் (Two-Factor Authentication – 2FA) இருந்தால் அவர்கள் உள்நுழைய முடியாது. இது ஒற்றைப் பயன்பாட்டுக் கடவுச்சொல் (OTP), கூகுள் அங்கீகரிக்கும் செயலி அல்லது உங்கள் திறன்பேசியில் ஆம்/இல்லை என்ற கேள்வியாக (prompt) இருக்கலாம். அதிகபட்ச பாதுகாப்புக்கு, யூபிகீ (Yubikey) போன்ற பிசிகல் செக்யூரிட்டி கீ (Physicalsecurity key) பயன்படுத்துவதன் மூலம் நிரலித்தாக்குதல் செய்வோரை வெகுதூரத்தில் வைக்கலாம்.
மாதம் ஒரு முறை, உங்கள் கூகுள் கணக்கில் உள்நுழைந்துள்ள கருவிகளைப் பார்வையிடுங்கள். தற்போது நீங்கள் பயன்படுத்தாத பழைய கைப்பேசிகள், பகிரப்பட்ட கணினிகள் இருந்தால், அவற்றில் இருந்து உடனே வெளியேறவும். இது தவறான அணுகல்களைத் தடுக்கும்.
விமான நிலையம், உணவகம் போன்ற இடங்களில் இலவசமாக வழங்கப்படும் கம்பியில்லா இணைய இணைப்புகள் (WiFi) பெரும்பாலும் பாதுகாப்பற்றவை. இவற்றின் மூலம் உங்கள் கணக்கின் தகவல்களை யாராவது ஊடுருவ வாய்ப்பு உள்ளது. இத்தகைய இடங்களில் இணையம் பயன்படுத்தும் போது புரோட்டான் விபிஎன், நோர்ட்விபிஎன் போன்ற நம்பகமான மறைமுக வலையமைப்பு சேவைகளை (விபிஎன்) பயன்படுத்த வேண்டும். உங்கள் இணையத்தை குறியாக்கம் (Encryption) செய்வதன் மூலம், விபிஎன் உங்கள் தகவல்களுக்கு ஒரு பாதுகாப்பு சுவராகச் செயல்படுகிறது.
“உங்கள் Google கணக்கு முடக்கப்பட்டுவிட்டது!” என்று வரும் மின்னஞ்சல்கள் உங்கள் கவனத்தை ஈர்க்கும். ஆனால் அவை போலி (phishing) முயற்சிகளாக இருக்கலாம். மின்னஞ்சலில் உள்ள இணைய முகவரிகளை சொடுக்காமல், நேரடியாக உலாவியில் “கூகுள்.காம்” எனத் தட்டச்சு செய்து உங்கள் கணக்கை பார்வையிடுங்கள். சந்தேகம் ஏற்பட்டால், அந்த மின்னஞ்சலை புகார் செய்யுங்கள்.
கூகுள் தானாகவே வழங்கும் பாதுகாப்பு பரிசோதனை வசதி மூலம், உள்நுழைந்துள்ள சாதனங்கள், பயன்பாட்டில் உள்ள செயலிகள், இரட்டைப் படிநிலை பாதுகாப்பு இயக்கப்பட்டுள்ளதா என்பதனை சரிபார்க்கலாம். இது மாதம் ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியமான நடைமுறையாகும். இந்த நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம், உங்கள் கூகுள் கணக்கை மேலும் பாதுகாக்க முடியும்.
- நவீனா
