நாம் பார்க்கும் திரைப்படங்கள், நாவல்களின் தலைப்புகளில் ஒரு தனித்துவம் இருக்கும். அதன் பெயர், அந்தப் படைப்பின் உணர்ச்சி, அதனால் ஏற்படும் விளைவு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் அவற்றின் தலைப்புகள் எழுதப்பட்டிருக்கும். இதே அம்சத்தை விளம்பரப் பலகையிலும், சுவர் எழுத்துகளிலும்கூட அடையாளம் காணலாம். எடுத்துக்காட்டாக, அண்மையில் வெளியான தக் லைஃப் படத்தின் தலைப்பைப் பார்த்தாலே, கதையின் பின்னணியில் உள்ள ஜப்பானியத்தாக்கம் தெரியும். ஜப்பானிய பாரம்பரிய எழுத்துகளை எழுதும் தூரிகை உண்டாக்கும் இழுப்புகள் (Strokes), வளைவுகள், மறை விளைவுகள் (Fading effect) போன்றவற்றுடன் அந்தத் தலைப்பை எழுதியிருக்கிறார்கள்.

இப்படி, எழுத்துகளையே ஓவியங்களாய் வரைந்து உணர்வுகளைக் கடத்தும் கலைக்கு வனப்பெழுத்துக் கலை என்று பெயர். ஆங்கிலத்தில் காலிகிராபி (Calligraphy) என்கிறார்கள். கிரேக்க மொழியின் மூலத்தில் இதற்கு ‘அழகான கையெழுத்து’ என்று பொருள். பள்ளிக் காலங்களில் செய்முறைத் தேர்வேடு, வினாத்தாள் போன்றவற்றை பல வண்ணத் தூவல்களால் அலங்கரித்து அழகு பார்ப்போமே, அதுவே தொழில்முறையாக, கலைப்படைப்பாக உருவெடுக்கும்போது வனப்பெழுத்துக்கலை ஆகிறது.
எழுத்துகளின் இயல்புகளின்படி வளைவு, இழுப்பு உள்ளிட்டவற்றில் கலைநயத்தைக் காட்ட, இதற்கென்று தனி தூவல், தூரிகைகள் உள்ளிட்ட கருவிகள் இருக்கின்றன. அதைத் தவிர கலைஞர்களின் கற்பனைக்கு ஏற்ப கருவிகளின் பயன்பாடு மாற்றம் கண்டும் வருகிறது.

உலக மொழிகளில் பண்டைய சீனம், அராபிக் ஆகிய இரண்டு மொழிகளும் தூரிகைகளைக் கொண்டு எழுதப்படும் இயல்புள்ளதால் அடிப்படையிலேயே வனப்பெழுத்துக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. முதலில் இவைதாம் வனப்பெழுத்துக்களாக அதிகம் எழுதப்பட்டன. பின்னாட்களில் பல்வேறு மொழிகளுக்கும் இக்கலைவடிவம் பரவியது. இந்தியாவில், சிந்து சமவெளி நாகரிகக் காலத்திலிருந்தே வனப்பெழுத்துக் கலையும் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நெதர்லாந்தின் ரிக்ஸ் அருங்காட்சியகத்தில் உள்ள 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவநாகிரி வனப்பெழுத்துப் பக்கம், இந்தியாவில் அக்கலை செழுமை அடைந்திருந்ததைக் காட்டுகிறது.
வனப்பெழுத்தின் வரலாற்றில் பெர்சியாவின் ரெசா அப்பாஸி, ஜப்பானின் அய்சூ யாய்ச்சி, சீனாவின் மீஃபூ, இந்தியாவின் ஆர்.கே. ஜோஷி போன்ற முன்னோடிகளைக் கலைஞர்கள் பின்பற்றி வருகின்றனர். இந்தியாவில் தொடக்க கால வரலாற்றில் செழுமையாக இருந்து, பின்னர் பல காரணங்களால் மறக்கப்பட்ட வனப்பெழுத்துக் கலை, தற்போது மீண்டும் உயிர்பெற்று வருகிறது. குறிப்பாக, கணினியின் பயன்பாடு வடிவமைப்புக் கலையில் கற்பனைக்கு எட்டா உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், வனப்பெழுத்தின் ஒவ்வொரு புதிய சிந்தனையும் அந்தந்த மொழிகளின் காட்சியெழுத்துகளாகப் பயன்பெறுகின்றன. புதிய கலைஞர்கள் உருவாகி, இந்தியாவின் பெரும்பான்மை மொழிகள் மட்டுமல்லாமல், அதிகம் பேசப்படாத மாநில மொழிகளிலும் வனப்பெழுத்துகளை உருவாக்கி, அவற்றையும் உலகிற்கு அடையாளப்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அத்தகைய இந்திய வனப்பெழுத்துக் கலைஞர்களில், பெரும் மாற்றங்களை உருவாக்கி வரும் சிலரை அறிமுகப்படுத்துவதே இந்தத் தொடரின் நோக்கம்.
வாருங்கள்! கலை எழுதும் தூரிகைகளின் கதைகளை அறியலாம்!
- விவேக்பாரதி
