இசைப்புயலை ஈர்த்த எழுத்துகள்
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஜனவரி 6-ம் தேதி பிறந்தநாள். 2019-ம் ஆண்டு, அந்நாளில் ரஹ்மானுக்குக் கலை மூலம் வாழ்த்துச் சொல்ல நினைத்தார் இலங்கையைச் சேர்ந்த வனப்பெழுத்துக் கலைஞர் ஒருவர். உடனே குரு திரைப்படத்தில் ரஹ்மான் பாடிய ‘ஒரே கனா’ பாடலின் வரிகளைக் கொண்டு, ரஹ்மானின் முகத்தை வரைந்த கலைஞர், இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வாழ்த்து தெரிவித்தார். அதைக் கண்டு மகிழ்ந்த ரஹ்மான், அந்தக் கலைஞரைப் பாராட்டி, அந்தப் படத்தைத் தமது பக்கத்தில் மறுபகிர்வும் செய்தார்.

அதற்கு முன்பு வரை வனப்பெழுத்துத் துறையில் பல அழகான படைப்புகளை வழங்கி, பல தமிழ் எழுத்துருக்களையும் உருவாக்கிக் கொண்டிருந்த அந்தக் கலைஞருக்கு அதன் பின்னர் பாராட்டுகளும் அங்கீகாரங்களும் குவிந்தன. அவர்தான் இலங்கைத் தமிழரான தாரிக் அஜீஸ். தம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடல் வரிகளை அடிக்கடி வனப்பெழுத்தில் எழுதி வெளியிட்டு வந்த தாரிக்கின் படைப்புகள் பலவற்றை ஏ.ஆர் ரஹ்மான் அடுத்தடுத்து அங்கீகரித்து மகிழ்ச்சியோடு மறுபகிர்வு செய்தார். மேலும், தம்முடன் ஒரு பணியில் எழுத்துரு பணிக்காக இணைத்துக் கொண்டார். இப்படித்தான் தாரிக் என்ற கலைஞருக்கு ரசிகரானது இசைப்புயல்.
இசைப்புயல் மட்டுமா? இணையப் பெரும்புள்ளிகளான கூகுள், ஆப்பிள், கேன்வா போன்ற நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு தாரிக் வடிவமைத்த கட்டெழுத்துருக்களைத் தங்கள் கருவிகளில் நிறுவியுள்ளன. கூகுளின் செயலிகளில் இயல்பாகக் கிடைக்கும் பவனம், கவிவாணர், நெய்தல் ஆகிய எழுத்துருக்கள் தாரிக் அஜீஸ் உருவாக்கியவை.
அதிலும் நெய்தல் எழுத்துரு, தமிழ் திரைப்படப் பாடல் ஒன்றின் பாடல் வரிகளாக ஒளிர்ந்தது. எழுத்துரு உருவாக்குநராக தமிழுக்கு தாரிக் கொடுத்துள்ள கட்டெழுத்துரு வடிவங்கள் இணையத்தில் தமிழ் எழுதும், வடிவமைக்கும் பலருக்கு உதவிகரமானது. அதேபோல், தம் தனித்துவமான வனப்பெழுத்துத் திறன் மூலம், தமிழுக்கு நிறைய காட்சியெழுத்துகளையும் கொடுத்துள்ளார் தாரிக் அஜீஸ். இணையத்தில் ‘வரைதமிழ்’ என்ற பெயரில் வனப்பெழுத்து வரையும் ஆர்வம் உள்ளவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார் தாரிக். தமிழ்த் திரைப்படப் பாடல் வரிகளை இவர் வனப்பெழுத்தாக எழுதி, இன்ஸ்டாகிராமில் பதிவிடும் படைப்புகளுக்குத் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
ஓவியரின் வனப்பெழுத்து
மும்பையைச் சேர்ந்த ஓவியரான ரூபாலி, வனப்பெழுத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார். புள்ளியிலிருந்து புள்ளிவரை (Dot to Dot) என்ற இவரது ஓவியம், கலைஞர்கள் மத்தியில் பல அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது.

பண்டைய ஜப்பான் பாணியில், ஓவியங்களுக்குள் இடம்பெற வேண்டிய எழுத்துகளை இவர் வனப்பெழுத்தால் எழுதுகிறார். எழுத்தாளராகவும் கவிஞராகவும் உள்ள ரூபாலி, தமது வலைப்பூவில் தொடர்ந்து ஓவியங்கள், வனப்பெழுத்துகள், கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார்.
இவர்களைப் போல இன்னும் நிக்கில் அபாலே, ஹரிக்குமார், பரமேஷ்வர ராஜூ, அக்ஷயா டோம்பரே, அஷோக் ஹிஞ்சே, அஷோக் பரப், மனோஹர் தேசாய், ராஜீவ் பிரகாஷ் முதலிய பலரும் உலக அரங்குகளில் இந்திய வனப்பெழுத்துகளை முன்னிறுத்தி வருகின்றனர்.
நீங்களும் அழகாக எழுதுவீர்களா? கையெழுத்தில் அழகியல் செய்ய முடியும் என்று நம்புகிறீர்களா? சிறுவயதில் உங்கள் கையெழுத்து அழகாக இருப்பதாக யாரேனும் சொல்லி நினைவிருக்கிறதா?? நீங்களும் முயலலாம்.
- விவேக்பாரதி
ரூபாலி டோம்பரேவின் இன்ஸ்டாகிராம் பக்கம்
