முரசு அஞ்சல் மறு உருவாக்கம் பெற்று மூன்று நாடுகளில் வெளியீடு காணும் கொண்டாட்டத்தில் முதல் நிகழ்ச்சி மலேசியாவில் இன்று (ஜூன் 27, 2025) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த பயனர்களே முரசு அஞ்சல் மறு உருவாக்கப் பதிப்பினை வெளியிட்டுப் புதிய வரலாற்றினைத் தொடங்கி வைத்தனர்.
திட்டமிட்டபடி நிகழ்ச்சி 3 மணிக்கு, தமிழ் வணக்கப் பாடலுடன் தொடங்கியது. முதல் புதுமையாக முரசு அஞ்சல் இயலி – Bot – தொகுப்பாளருடன் நிகழ்ச்சியை வழிநடத்துவதில் இணைந்துகொண்டது. நிகழ்ச்சி தொடங்கும் முன்பு உங்கள் திறன்பேசியைத் தலையைச் சுற்றி வீசி விட்டு வாருங்கள் என்றோ குறைந்தபட்சம் சத்தமிடாமல் பூட்டி வைத்திருங்கள் என்றோ சொல்வதுதான் வழக்கம். இங்கு அதற்கு மாற்றாக நிகழ்ச்சியில் காட்டப்படும் விளக்கக் காட்சிகளுடன் தொடர்புடைய குறியீட்டுச் சொற்களை உள்ளீடு செய்து உடனுக்குடன் பயனர்கள் இயலியுடன் உரையாடும் வகையில் அழைப்பு விடுக்கப்பட்டது. தகவல் பெறவும் கருத்துகளைத் தெரிவிக்கவும் இயலியை நிகழ்ச்சியின் இடையில் பயன்படுத்துபவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசும் கொடுப்பதாக அறிவித்தார்கள்.
அறிவார்ந்த உள்ளிடுமுறை
நிகழ்ச்சியின் முதல் பகுதியாக முரசு அஞ்சல் உள்ளிடுமுறையில் உள்ள புதிய அம்சங்களை முரசு அஞ்சல், செல்லினம் செயலிகளின் நிறுவனர் வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் எடுத்துரைத்தார். மெக், விண்டோஸ் உள்ளிட்ட இயங்குதளங்களில் இயல்புநிலை உள்ளிடுமுறையாக ஏற்கெனவே உள்ள நிலையில் மேலதிகமாக என்ன இருக்கிறது என்கிற எதிர்பார்ப்பு பயனர்களிடம் இருந்தது. நன்றாகத் தமிழ் எழுதக் கூடியவர்களுக்கு மேலும் உதவும் வகையிலும் சுமாராக தமிழ் எழுதத் தெரிந்தோர் மிக எளிதாகவும் ஆர்வத்தோடும் தமிழை எழுதும்படியும் இருக்கிறது புதிய முரசு அஞ்சல். சென்னையைச் சேர்ந்த தி.ந.ச. வெங்கடரங்கன், இலங்கையைச் சேர்ந்த தாரிஸ் அஸீஸ், மலேசியாவைச் சேர்ந்த ஷோபனா, மேகவர்ணன் ஆகியோர் முரசு அஞ்சல் முன்னோட்டப் பதிப்பினைப் பயன்படுத்தியது பற்றிய தங்கள் அனுபவத்தைக் காணொளி வாயிலாகப் பகிர்ந்துகொண்டனர்.
எழுத்துகளைப் பரிந்துரைப்பது பெரும்பாலும் பல எழுத்துச் செயலிகளில் உள்ளதுதான். ஆனால், முரசு அஞ்சல் நாம் திரும்பத்திரும்ப எழுதும் எழுத்துகளை மட்டுமின்றி ஏதேனும் குறிப்பிட்ட நபரின், செய்தி நிறுவனத்தின் எழுத்து நடையையும் பரிந்துரைக்கிறது. தனிப்பட்ட சொற்பட்டியல், பரிந்துரைச் சொற்களை வைத்துக்கொள்ளவும் வசதி இருக்கிறது. ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கும், ஆய்வாளர்கள் அத்துதுறை சார்ந்தோருக்கும், நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கும் தனித்துவமான சொற்பட்டியல்களைப் பராமரித்துப் பயன்படுத்த இயலும். எடுத்துக்காட்டாக செல்லினம் தளத்தில் பிரச்சினை, பிரத்தியேகம் போன்ற வடமொழிச் சொற்களைத் தவிர்க்க இடர், தனித்துவமான எனப் பரிந்துரைக்கும் சொற்பட்டியலை செல்லினம் எழுத்தாளர்களுக்கு மட்டும் வழங்கலாம்.
இணையத்தில் இருக்கும் ஒரு சொல்லுக்கு அகராதி வழியாகப் பொருள் விளக்கமும் கொடுக்கிறது. எழுதும் போதும் அகராதியைப் பயன்படுத்த முடியும். பனியா பணியா எனக் குழம்பும் பயனர் தட்டெழுதும்போதே கீழே வரும் பொருளை அறிந்து உரிய சொல்லைப் பயன்படுத்தலாம். எழுதும்போது மட்டுமின்றி வாட்சாப் வழியாகத் தேவைப்படும் நேரத்தில் பொருளறியும் வசதியும் இன்னும் பலவும் சேர்க்கப்பட்டுள்ளன. சொல்வன் செயலி முரசு அஞ்சல் செயலியிலும் வாட்சாப் இயலியிலும் கூடப் பயன்படுத்தலாம்.
அழகுதமிழ் எழுத்துருக்கள்
புதிய எழுத்துருக்களுடன் பழைய எழுத்துருக்களையும் மேம்படுத்தி வெளியிட்டுள்ளனர். சீன வனப்பெழுத்தில் இருந்து உருவான கீற்று எழுத்துரு, குழந்தைகளைக் கவரும் ஆம்பல் எழுத்துரு, ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு எழுதப் பயிற்சியளிக்க உதவும்படியான புள்ளிவைத்த வடிவிலான எழுத்துருக்கள் முதலிய பல எழுத்துருக்கள் இந்த முரசு அஞ்சல் புதிய பதிப்பில் இடம்பெற்றுள்ளன. கட்டெழுத்துரு, காணெழுத்துரு, கையெழுத்துரு – Body text, Title text, Scripted style text – ஆகிய மூன்று வகைப்பாட்டிலும் கணிசமான எழுத்துருக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
நெகிழ்ச்சியான இடைவேளை
வழக்கமாக முரசு அஞ்சல் எழுத்துருக்களுக்குத் தமிழ்ப் பெயர்தான் வைக்கப்படும். இம்முறை அதிலிருந்து வேறுபட்டு பவானி என்கிற பெயரை ஒரு எழுத்துருவுக்கு வைப்பதாக முத்து நெடுமாறன் அறிவித்தார். தன்னுடைய மனைவியும் முரசு அஞ்சல் இயக்குநருமான பவானிக்காக இந்த தமிழ்ப்பெயர் விதியை மீறுவதாகத் தெரிவித்தார். தன்னுடைய 40 ஆண்டுகால தமிழ்கணிமைப் பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக இருந்தவர்களைப் பற்றிச் சில நிமிடங்கள் பேசினார் முத்து நெடுமாறன். பயிற்சிப் பொறியாளராக வேலையில் சேர்ந்த காலத்தில் தன்னுடைய தமிழ் ஆய்வுகளுக்கு ஆதரவளித்த ரிங்கோ லாவ், முரசு எனத் தன் எழுத்துருக்களுக்குப் பயெரிட்ட சரோஜினி சுந்தர்ராஜ் ஆகிய இருவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்குவதாகத் தெரிவித்தார். முரசு அஞ்சல் நிறுவனத்தில் பல ஆண்டுகளாகத் தன்னுடன் துணை நிற்கும் சேதுராமன், ஜெயந்திக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கினார். இவையனைத்தும் சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லாமல் திடீர் நிகழ்வாக அவர்களை வியப்பில் ஆழ்த்தும்படி நடந்தேறியதால் மகிழ்ச்சியும் நெகிழ்சியுமாக உணர்வுகள் மேடையை அலங்கரித்தன.
உரு நூல் வெளியீடு
முரசு அஞ்சல் நிறுவனர் முத்து நெடுமாறனின் கதையைச் சொல்லும் உரு நூல் வெளியீடும் நடந்தது. டத்தோ டாக்டர் என்.எஸ் ராஜேந்திரன், மலேசியக் கல்வி அமைச்சக தேர்வு வாரிய முன்னாள் அதிகாரி பி.எம்.மூர்த்தி ஆகியோர் நூலைப் பற்றிப் பேசினர். நூலாசிரியர் கோகிலா ஏற்புரையாற்றினார். சிலாங்கூர் மாநில சட்டப்பேரவையின் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் வி.எல். காந்தனும் சிலாங்கூர் மாநில கல்வித்துறையில் அமைப்பாளராகப் பணியாற்றிய ஆ.சோதிநாதனின் மகன் சிவபாலனும் உரு நூலின் முதல் படிகளைப் பெற்றுக் கொண்டனர்.
பரிசு கிடைத்தது
ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் எனப் பல தரப்பினர் ஆர்வமாக நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். முரசு அஞ்சல் இயலி மூலம் நிறைய உரையாடல் நடத்திய டாக்டர் தமிழ்முல்லை தண்ணீர்மலை, சாலினி பரமசிவன், சூரியா ஜேம்ஸ் மூன்று பேருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது. அதுவும் இயலி மூலமே தகவல் பெற்று மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டது.
அகராதி, அனைத்துவித விசைப்பலகைகள், சொற்பரிந்துரைகள் உள்ளிட்ட பல புதிய அம்சங்கள் இலவசப் பதிப்பில் அனைவரும் பயன்படுத்தும்படி கிடைக்கும். கட்டற்ற வகையில் பயன்படுத்த இயலாதவாறு சில கட்டுப்பாடுகள் மட்டும் உண்டு. நிகழ்ச்சிகள் அனைத்தும் திட்டமிட்டபடி 3 மணிக்குத் தொடங்கி சரியாக 6 மணிக்கு முடிந்தது. நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அதன் பின்னர் உரு நூல் வாங்கிக் கொண்டு முத்து நெடுமாறனிடமும் நூலாசிரியரிடமும் கையெழுத்துப் பெற்றுக்கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தேநீர், சிற்றுண்டியுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.
முரசு அஞ்சலின் இந்தப் புதிய பதிப்புக்கான வெளியீட்டு விழா அடுத்ததாக ஜூலை 5-ம் தேதி சிங்கப்பூரிலும், ஜூலை 12-ம் தேதி சென்னையிலும் நடைபெறுகிறது. பதிவு செய்யும் இணைப்பை கீழே கொடுத்திருக்கிறோம்.
- சத்யா கோபாலன்





















