மலேசியாவைச் சேர்ந்த கணினியியலாளரும் எழுத்துருவியலாளருமான முத்து நெடுமாறனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய ‘உரு’ நூல் நேற்று (ஜூன் 27, 2025) முதல்கட்டமாக மலேசியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

கணினிகளில் தமிழ் எழுத உதவும் முரசு அஞ்சல், திறன்பேசிகளில் தமிழ் எழுத உதவும் செல்லினம் செயலிகளின் வடிவமைப்பாளர், நிறுவனர் முத்து நெடுமாறன். எழுத்துருப் பொறியாளராகக் கணினி, இணையம், திறன்பேசி போன்ற தொழில்நுட்பத்தில் தமிழைப் புகுத்தியவர். எழுத்துருவியல் கலைஞராகத் தமிழ் எழுத்துரு அழகியல் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு பல எழுத்துருக்களை உருவாக்கியவர். மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகள் அனைத்திலும் இவரது எழுத்துருக்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல் சிங்கப்பூர் அரசின் கல்வி மயமாக்க முயற்சியில் முரசு அஞ்சலை அதிகாரப்பூர்வமாக்கியுள்ளது. முரசு அஞ்சல், செல்லினம் தாண்டி செல்லியல் இணையத்தளம், சிறுவர்களுக்கான கனிமணி செயலி, சொல்வன் செயலி, எழுத்துரு உருவாக்க விரும்புபவர்களுக்கான ஹைபிஸ்கஸ் செயலி என இன்னும் பலவற்றை நிறுவியுள்ளார் முத்து நெடுமாறன்.
ஊடகவியலாளர், எழுத்தாளர் கோகிலாவின் எழுத்துக்களில், முத்து நெடுமாறனின் ஆரம்ப வாழ்க்கை தொடங்கி கணினித் துறையில் செய்த சாதனை என அவருடைய வாழ்க்கைப் பாதையில் நடந்த முக்கியமான, களிநயமான சம்பவங்களை விவரிக்கும் வகையில் மெட்ராஸ் பேப்பரில் ‘உரு’ என்ற தொடர் வெளியானது. அது நூல் வடிவம் பெற்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
விழாவில் அறிமுக உரையாற்றிய மலேசிய கல்வியாளரும், தேசியக் கல்வி அமைச்சின் தேர்வு வாரிய மேனாள் உதவி இயக்குநரும், பொதுத் தேர்வுகளில் தமிழ்மொழி படைப்பிலக்கியத்தை அறிமுகம் செய்தவருமான பி.எம். மூர்த்தி, விளக்கக்காட்சிகளுடன் பேசத் தொடங்கினார். “மலேசியாவில் எங்கள் தோட்டப்புற பள்ளியில் அலுவலகம் மற்றும் மாணவர்களுக்காக ஒரு கணினி வாங்க நினைத்தோம், அதை எங்கள் தலைமை ஆசிரியரிடம் சொல்லும் போது அவர் எதற்குமே மறுப்பு தெரிவிக்காதவர், அவரும் சரியென தலையசைத்து நிதிபெற்றுக் கொடுத்தார். முத்து நெடுமாறன் கணினியில் தமிழ் புகுத்துவதாகவும் அது நம் மாணவர்களுக்கு எளிமையாக இருக்கும் என்று எண்ணி நானும் தலைமை ஆசிரியரும் நேராக சென்று முத்து நெடுமாறனை அவரது வீட்டில் சந்தித்து தகவலை சொன்னதும், நல்ல விஷயமாச்சே செய்துவிடலாம் என்று சொல்லி உடனடியாக செய்துக்கொடுத்தார். அதுதான் முத்து நெடுமாறனுக்கும் எனக்குமான முதல் சந்திப்பு. அதன் பிறகு கணினி எழுத்துருவில் ஏதேனும் இடர் வந்தாலோ ஏதேனும் ஐயம் வந்தாலோ காரில் கணினியை தூக்கிக் கொண்டு அவரது வீட்டுக்கு சென்று கற்றுக்கொண்டு வருவோம். அப்படியெல்லாம் எங்கள் மாணவர்களுக்கு தமிழும் கணினியும் சொல்லிக்கொடுத்தோம்.





அதில் படித்த சுகுமாரன், நடராஜன் என்ற இரு மாணவர்கள் கணினி மேல் ஆர்வம் கொண்டு பின்னாளில் அதே துறையை தேர்வு செய்து இப்போது சுகுமாரன் கணினி பொறியாளராகவும், நடராஜன் பட்டயக் கணக்காளராகவும் உள்ளனர். சமீபத்தில் அவர்கள் என்னை வந்து சந்தித்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. நான் சொல்லிக்கொடுத்த குழந்தைகள் மிகப் பெரிய ஆளாக வந்து நிற்பதுதானே ஓர் ஆசிரியருக்கு பெருமை. இவை அனைத்திலும் முத்து நெடுமாறனுக்கும் பெரும் பங்கு உள்ளது, அவரின் தமிழ் கணினி முயற்சி இவர்களை போல பல மாணவர்களை கணினி பக்கம் திருப்பி தற்போது பலரும் பல துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். அவரை பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துக்கொள்வது இரட்டிப்பு மகிழ்ச்சி” என பேசினார். அவர் விளக்காட்சிகளில் காண்பித்த புகைப்படங்கள் மூலம் சில நொடிகள் நம்மை எண்பதுகளின் மலேசியாவுக்கு அழைத்து சென்றதைப் போன்ற உணர்வு இருந்தது.
இவரைத் தொடர்ந்து பேசிய கல்வியாளர், பேராசிரியர், நூல்களை திறனாய்வு செய்வதில் நிறைய அனுபவம் கொண்டவர் முனைவர் டத்தோ என். எஸ். ராஜேந்திரன், நெல்சன் மண்டேலா, எட்மன் ஹிலரி, பில்கேட்ஸ் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றையும் குறிப்பிட்டு பேசினார். ‘ஒருமுறை முத்து நெடுமாறனுக்கு மலாய் மொழி தெரியாமல் அவரது தோழி ஒருவர் அவர் பெயருக்கு பதிலாக முத்து நெடுமாறனின் சகோதரி பெயரை மலாய் பொழியில் எழுதித் தர , அதை நாள் முழுவதும் தன் சட்டையில் ஒட்டிக்கொண்டு பள்ளியில் சுற்றிவந்துள்ளார்’ இதே போன்று முத்து நெடுமாறனின் வாழ்வில் நடந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பல சுவையான சம்பவங்களை நினைவுக்கூர்ந்தார். பொருளாதாரச் சிக்கல்களைப் பொருட்படுத்தாது, முத்து நெடுமாறன் தன் உணவையும் விட்டுக்கொடுத்து தமிழுக்காக பல ஆய்வுள் மேற்கொண்டது பற்றியும் நூலில் குறிப்பிட்டுள்ளதை விவரித்தார்.
ஏற்புரை வழங்கிய உரு நூலாசிரியர், எழுத்தாளர் கோகிலா தன் ஆசிரியர் எழுத்தாளர் பாராவுக்கு நன்றி தெரிவித்துத் தன் உரையைத் தொடங்கினார். உரு உருப்பெற காரணமாக இருந்த பாரா, நூலாசிரியருக்கு பல வழிகளில் செய்த உதவிகளை குறிப்பிட்ட அவர், உரு உருவான விதம் பற்றி தொடர்ந்தார். “தமிழ் எனக்கு சோறு போட்டது என்று சொல்பவர்கள் மிகச் சொற்பம். ஆனால் முத்து நெடுமாறனுடைய என் முதல் சந்திப்பில் அவர் வார்த்தைகளில் இருந்து என்னால் அதை உணர முடிந்தது. நாற்பதாண்டு காலமாக ஒருவர் தமிழோடும் தொழில்நுட்பத்தோடும் இணைந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார் என்று அவரைப் பற்றிய சில தகவல்களை அறிந்த பிறகு இவரது கதை நிச்சயம் இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். அதனால் அதை பதிவு செய்ய வேண்டும் என நினைத்தேன்.
புத்தகம் உருவாக நான் அவருக்கு எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் அவரது அதீத வேலைப்பளுவிலும் என் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் கூறினார். நான் கேட்கும் கேள்விகளுக்கு பெருமளவு ஆதாரங்களோடு பதிலும் கொடுத்தது மட்டுமில்லாமல் தேவையான நூல்கள், இணையத்தளங்கள், மின்னஞ்சல்கள், புகைப்பட ஆதாரங்கள் என அவரே நிறைய தகவல்களைக் கொடுத்து உதவினார். நானும் நம்பகமான பல நண்பர்களிடம், துறை வல்லுநர்களிடம் தகவல்கள் சேகரித்து எழுதினேன். இந்த நூல் தனிநபர் பற்றியதாக இல்லாமல் தன் வேலையைப் பற்றியாகவே இருக்க வேண்டும் என்பதில் ஆரம்பத்தில் இருந்தே முத்து நெடுமாறன் மிகத் தெளிவாக இருந்தார். நம்முடைய செயல்களே காலம் கடந்து நிற்பவை. எனவே அவர் கணித்தமிழுக்குச் செய்த செயல்களை முன்னிலைப்படுத்தி இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
தரவுகள், ஆதாரங்கள் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ள தகவல்கள் இந்நூலில் உள்ளன. கணித்தமிழ் வரலாற்றில் பெரும்பகுதியை இந்நூல் ஆவணப்படுத்துகிறது. மேலும், இந்நூல் நிச்சயம் யூனிகோடு, எழுத்துரு அழகியல் தொடர்பான பல அடிப்படையான கேள்விகளுக்கான விடை கொடுக்கும்.” நன்றியுடன் தொடங்கி இறுதியில் முத்து நெடுமாறனுக்கு நன்றிகள் என்பதோடு தன் உரையை முடித்தார் நூலாசிரியர் கோகிலா.
இதனைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநில சட்டப்பேரவையின் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வி. எல். காந்தன் உரு நூலின் படியைப் பெற்றுக் கொண்டார். அடுத்து, மலேசியத் தமிழ்க்கல்வித் துறை வரலாற்றில் ஓர் அழுத்தமான முத்திரையைப் பதித்தவரும் சிலாங்கூர் மாநில கல்வித்துறையில் அமைப்பாளராகவும் தொண்டாற்றிய டத்தோ சோதிநாதன் சார்பில் அவருடைய மகன் சிவபாலன் சோதிநாதன் உரு நூலின் படியைப் பெற்றுக்கொண்டார்.







உரு புத்தகத்தின் அடுத்த வெளியீடு ஜூலை 7-ம் தேதி சிங்கப்பூரிலும், ஜூலை 12-ம் தேதி சென்னையிலும் நடைபெறவுள்ளது. மறக்காமல் வந்து விடுங்கள் மக்களே பரிசுகளுடன் அழகு தமிழ் எழுத்துருக்களையும் அதை உருவாக்கியவரையும் கொண்டாடலாம்.
- சத்யா கோபாலன்
