சிங்கப்பூரில் முரசு அஞ்சல் செயலி, உரு நூல் வெளியீடு சிறப்பாக நடந்தேறியது. சிங்கப்பூர் அரசு கல்வி அமைச்ச அலுவல்ரீதியாக முரசு அஞ்சல் செயலியின் உள்ளிடு முறை, எழுத்துருக்களைப் பயன்படுத்துவதால் நிகழச்சிக்குப் பெருமளவில் ஆசிரியர்கள் வந்திருந்தனர்.
சொன்னபடி சரியாக மூன்று மணிக்கு பாரதியின் வரிகள், தமிழ்மொழி வாழ்த்து பாடல் எனத் தொடக்கத்திலேயே தமிழ் மணம் காற்றில் பறக்கத் தொடங்கியது. புதுமையாக இயலி – bot – தொகுப்பாளருடன் இணைந்து நிகழ்ச்சியை வழிநடத்தியது. நிகழ்ச்சி முழுவதும் இந்த இயலி வழியாகப் பயனர்கள் பல செய்திகளை அனுப்பி அளவளாவி தகவல்களைக் கேட்டுப் பெற்றனர். ஜூம் மீட்டிங் நடக்கும்போது நாம் அதில் உணர்ச்சி குறியீடுகள், கருத்துகளைத் தெரிவிக்க முடியும் அல்லவா கிட்டத்தட்ட அதை ஒத்த செயல்தான் இந்நிகழ்ச்சியிலும் அரங்கேறியது. இறுதியில் இயலியுடன் அதிகம் உரையாடுபவர்களுக்குப் பரிசுகளும் அறிவிக்கப்பட்டன. சிங்கப்பூரைச் சேர்ந்த சகுந்தலா ஜெகதீசன், யூசுப் ரஜித், மொஹைதீன் பிச்சை ஆகியோர் அப்பரிசைப் பெற்றனர்.
மூன்று பகுதிகளாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதலில் அறிவார்ந்த உள்ளிடுகள் என்ற தலைப்பில் முத்து நெடுமாறன், முரசு அஞ்சல் மென்பொருளில் சேர்க்கப்பட்டுள்ள புதிய உள்ளீடுகள் பற்றிய விளக்கம் கொடுத்தார். சொற்களுக்கான விளக்கம் , சரியான சொற்களைத் தேர்வு செய்யும் பரிந்துரை, அகராதி மூலம் சொற்களுக்கான விளக்கங்கள், தட்டச்சு செய்யும் சொல்லுக்குப் பொருத்தமான அடுத்த சொல்லைத் தானாகப் பரிந்துரைப்பது போன்ற பல அம்சங்கள் புதிய பதிப்பில் இடம் பெற்றுள்ளன.
இரண்டாவது ‘அழகு தமிழ் எழுத்துருக்கள்’ என்ற பகுதியில் தமிழ் எழுத்துருக்களில் அத்தியாவசியத்தைப் பற்றிப் பேசிய முத்து நெடுமாறன், தான் புதிதாக உருவாக்கிய அழகான எழுத்துருக்கள் பற்றிய களிநயமான சம்பவங்களையும் பகிர்ந்துகொண்டார். கட்டெழுத்துரு, காணெழுத்துரு, கையெழுத்துரு – Body text, Title text, Scripted style text – ஆகிய மூன்று வகைப்பாட்டிலும் கணிசமான எழுத்துருக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பழைய எழுத்துருக்களை மேம்பாடு செய்திருப்பதைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார். புதிதாக அறிமுகமாகும் அம்சங்களில் பெரும்பாலானவை இலவசமாகவே கிடைக்கும் என்கிற மகிழ்ச்சியான செய்தியைப் பயனர்கள் வரவேற்று மகிழ்ந்தனர்.
முரசு அஞ்சல் பயனர்கள் தங்கள் முரசு அஞ்சல் செயலியை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம். புதிதாக முரசு அஞ்சல் வாங்கும் அனைவருக்கும் விலை சலுகையும் உண்டு. அகராதி, அனைத்துவித விசைப்பலகைகள், சொற்பரிந்துரைகள் உள்ளிட்ட பல புதிய அம்சங்கள் இலவசப் பதிப்பில் அனைவரும் பயன்படுத்தும்படி கிடைக்கும். தனி நபர், வணிகம் என இரு பிரிவுகளில் அதற்குரிய கட்டணங்களுடன் இந்த மென்பொருள் விற்பனைக்கு வருகிறது என்பதையும் முத்து நெடுமாறன் தன் உரையில் தெரிவித்தார்.
இறுதியாக எழுத்தாளர் கோகிலாவின் வரிகளில் எழுத்துருவியல் நிபுணரும் முரசு அஞ்சல், செல்லினம் செயலிகளின் நிறுவனருமான முத்து நெடுமாறனின் வாழ்க்கை பயணம் பற்றிச் சொல்லும் ‘உரு நூல்’ வெளியீடு நடைபெற்றது. சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவின் தலைமைப் பொறுப்பில் உள்ள எழுத்தாளர் அழகிய பாண்டியன் நூல் பற்றி உரையாற்றினார். செய்தி, கல்வி, நிர்வாகம், ஒலி/ஒளிபரப்பு, கணினி ஆகிய பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். ஒலி வானொலியை 24 மணிநேரம் ஒளிபரப்பச் செய்ததில் இவர் பங்கு முக்கியமானது.
தன் பேச்சில், செல்லினம் செயலி முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டபோது தான் அத்திட்டத்தில் இணைந்து செயல்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். சாதாரண மனிதர்கள் வாழ்வில் இச்செயலி ஏற்படுத்திய மாற்றத்தை நூலில் படித்துத் தெரிந்துகொண்டதைக் குறிப்பிடுகையில் சற்றே உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அதைக் கேட்டுப் பார்வையாளர்கள் கண்களிலும் நீர் துளிர்த்தது. அடுத்ததாக நூலாசிரியர் கோகிலா ஏற்புரையாற்றினார். பின்னர் சிங்கப்பூரில் தமிழ்க் கல்வி வளர்த்த முன்னோடி அறிஞர்களுள் ஒருவரான செம்மொழிச் செம்மல் முனைவர் சுப. திண்ணப்பன் ஐயா உரு நூலின் முதல் படியைப் பெற்றுக்கொண்டார்.
முரசு அஞ்சலின் இந்தப் புதிய பதிப்புக்கான வெளியீட்டு விழா அடுத்ததாக ஜூலை 12-ம் தேதி சென்னையிலும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்போருக்கு விதவிதமான பரிசுகள் காத்திருக்கின்றன. பதிவு செய்யாதவர்கள் உடனடியாக பதிவு செய்யுங்கள்.
- சத்யா கோபாலன்








