எழுத்துருவியல் வல்லுநர் முத்து நெடுமாறன் உருவாக்கிய முரசு அஞ்சல் மென்பொருளின் புதிய பதிப்பு வெளியீடு மலேசியாவைத் தொடர்ந்து சிங்கப்பூரிலும் கோலாகல வெளியீடு கண்டது. இந்த நிகழ்ச்சியில் முத்து நெடுமாறன் வாழ்க்கைப் பயணத்தையும் கணித்தமிழ் வரலாற்றையும் ஆவணப்படுத்தும் உரு நூல் வெளியீடும் நடந்தது.

கணித்தமிழ் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான முத்து நெடுமாறன் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்ச்சிகள், அவருடைய எழுத்துரு ஆர்வம், முரசு அஞ்சல் உருவான விதம், அவர் சந்தித்த தொழில்நுட்ப சவால்கள் ஆகியவற்றைத் தொகுத்து ‘மெட்ராஸ் பேப்பர்’ இணைய இதழ், உரு என்ற தலைப்பில் தொடராக வெளியிட்டு வந்தது. அந்த கட்டுரைத் தொடர்தான் தற்போது ‘உரு’ என்ற அதே பெயரில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த காலச்சுவடு பதிப்பகம் இந்த நூலைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறது.
வெளியீட்டு நிகழ்ச்சியில் சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவின் தலைமைப் பொறுப்பில் உள்ள எழுத்தாளர் அழகிய பாண்டியன் நூல் பற்றி உரையாற்றினார். செய்தி, கல்வி, நிர்வாகம், ஒலி/ஒளிபரப்பு, கணினி ஆகிய பல்வேறு துறைகளில் பல்லாண்டு காலம் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். ஒலி வானொலியை 24 மணிநேரம் ஒளிபரப்பச் செய்ததில் இவர் பங்கு முக்கியமானது.
உரு நூல் வெளியீட்டு விழாவில் அறிமுக உரை வழங்கிய தேசிய நூலக வாரியத்தின் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவின் தலைவர் அழகிய பாண்டியன், “புதிய வரலாற்றின் தொடக்கம் என்ற முழக்க வரியுடன் இன்றைய நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முத்து நெடுமாறனின் ஒவ்வொரு செயலும் வரலாறு படைக்கும் செயலாகவே இருந்து வந்திருக்கிறது. எனவே, புதிய வரலாற்றின் தொடக்கம் என்று சொல்வது எனக்குப் புதிதாகப் படவில்லை.
ஒருமுறை முத்து நெடுமாறன் தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் திட்டத்தைக் கொண்டு வந்தார். இதைச் செய்யத் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஒத்துழைப்பும் தேவைப்பட்டது. ஆனால் அது அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. அவர் அடிக்கடி கூறும் ஒரு வாசகம் உண்டு. ‘முகமதுவை மலைக்குக் கூட்டிப்போக முடியாதென்றால் மலையை முகமதுவிடம் கூட்டி வர வேண்டும்’ என்று சொல்வார். அவ்வாறே கூட்டியும் வருவார். அப்படி அவர் இழுத்து வந்த ஒரு மலைதான் செல்லினம்.
2005ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் நிரம்பிவழிந்த கூட்டத்திற்கிடையே செல்லினத்தை அறிமுகம் செய்தார் முத்து. உலகின் முதல் தமிழ்க் குறுஞ்செய்தி என்ற அறிவிப்புடன் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. திறன்பேசியில் வெற்றிகரமாக அனுப்பப்பட்டது. அந்தத் தருணம் அரங்கமே பெருமிதத்தில் அதிர்ந்தது. உலகின் முதல் தமிழ்க் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட அந்தத் தருணத்தை நினைத்தால் இன்றும் சிலிர்க்கிறது.
எனக்கு சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவே முத்துவைத் தெரியும். எனவே உரு என்ற இந்த நூலில் எனக்குத் தெரியாத விஷயம் அப்படி என்ன இருக்கப் போகிறது என்று நான் நினைத்தேன். ஆனால் அவரது தமிழ், தொழில்நுட்பப் பயணத்தில் நிகழ்ந்திருக்கும் பல சுவாரசியமான நிகழ்வுகள் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் தெரியாமல்தான் இருந்திருக்கும். அவற்றையெல்லாம் உரு நூலில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் எழுத்தாளர் கோகிலா.” என்று கூறிய அவர் அந்நூலில் இடம்பெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தையும் சுட்டிக்காட்டினார்.
ஒரு முறை ஒரு பயனரைச் சந்தித்த முத்து நெடுமாறன் அவரது திறன்பேசியில் செல்லினம் செயலியை தரவிறக்கம் செய்ய உதவினார். அப்போது கப்பல் ஊழியரான ஆசைத்தம்பி முத்துவிடம், எனக்கு மிகப்பெரிய உதவி செய்திருக்கிறீர்கள். பெரிய சாதனை இது. உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன், என்று பலவாறு நன்றி தெரிவித்தார். அவரிடம், “இந்தியாவில் இருக்கும் உங்கள் குடும்பத்துடன் பேச இப்போதுதான் நிறைய காலிங் கார்ட் வசதிகள் வந்துவிட்டதே, அப்படியிருக்க உங்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்புவது ஏன் அவ்வளவு அவசியமான ஒன்றாக இருக்கிறது,” என்று கேட்கிறார் முத்து.
ஆசைத்தம்பி தந்த பதிலில் நாங்கள் வாயடைத்துப் போனோம். அவர் சொன்னது இதுதான். “என் மனைவி வாய் பேச முடியாதவர். ஆங்கிலமும் தெரியாது. எனவே இந்தியாவில் இருக்கும் அவருடன் பேச நீங்கள் உருவாக்கியிருக்கும் தமிழ்க் குறுஞ்செய்தி சேவை எனக்கு உதவுகிறது. எனவே, என் வாழ்நாள் முழுக்க உங்களை மறக்கமாட்டேன்!”.
ஆசைத்தம்பி மட்டுமா? தமிழையும் தொழில்நுட்பத்தையும் நேசிக்கும் எவரும் இந்த முத்து நெடுமாறனை வாழ்நாள் முழுக்க மறந்துவிட முடியுமா? தகவல் தொழில்நுட்ப உலகில் தமிழை அரியணையில் ஏற்றி வைக்க வேண்டும் என்பதுதான் அவரது இலக்கு. அந்த இலக்கை நோக்கிய அவரது பயணத்தில் ஆயிரமாயிரம் ஆசைத் தம்பிகள் பலன் அடைகிறார்கள்” என முத்து நெடுமாறன் வாழ்க்கை பக்கத்தை நெகிழ்வுடன் நினைவுகூர்ந்தார். பார்வையாளர்களும் இதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டுக் கண்கள் கலங்கினர்.
இவரைத் தொடர்ந்து ஏற்புரை வழங்கிய ‘உரு’ நூலாசிரியர் கோகிலா. உரு நூலில் உள்ள தகவல்கள் திரட்டப்பட்ட விதத்தை எடுத்துரைத்தார். தமிழ் மொழி சார்ந்து செயல்படும் ஒருவருடைய வாழ்க்கையை அவருடைய வெற்றிகரமான பாதையை எழுதியதன் நோக்கத்தைப் பற்றிப் பேசினார். இப்படியான நபர்களை முன்மாதிரியாகக் கொள்வதன் வழியாக தமிழ்ச் சமூகத்தும் தமிழுக்கும் சேர்ந்தே நன்மை உண்டாகும் என்றார். இந்நூலில் தொழில்நுட்பத் தகவல்கள் இருப்பினும் நிறைய சுவையான சம்பங்களுடன் கதை போல எழுதப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் தமிழ்க் கல்வி வளர்த்த முன்னோடி அறிஞர்களுள் ஒருவரான செம்மொழிச் செம்மல் முனைவர் சுப. திண்ணப்பன் ஐயா உரு நூலின் முதல் படியைப் பெற்றுக்கொண்டார். சிங்கப்பூரில் நடந்த ஆசிரியர்கள் கருத்தரங்கில் முத்து நெடுமாறன் வந்து உரையாற்ற வேண்டும் என்று முதன் முதலில் அழைத்தவர் இவர்தான் என்பதைக் குறிப்பிட்டு எல்லாம் தொடங்கியது அங்கிருந்தான் என்றும் நெறியாளர் குறிப்பிட்டார்.
சூடான சிற்றுண்டி, படம் எடுத்தல் , நூலில் கையெழுத்திடல், மகிழ்ச்சி, ஆரவாரம் என இனிதே நிறைவடைந்தது உரு நூல் வெளியீட்டு விழா.
அடுத்ததாக ஜூலை 12-ம் தேதி சென்னையில் இந்த நூலின் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
- சத்யா கோபாலன்
