மலேசியா, சிங்கப்பூரைத் தொடர்ந்து நிறைவு நிகழ்ச்சியாக சென்னையிலும் நேற்று முரசு அஞ்சல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது. ஜூலை 12ஆம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த முரசு அஞ்சல் வெளியீடு நிகழ்ச்சியின் மூன்றாவது அங்கமாக உரு நூல் வெளியீட்டுப் பகுதிக்கு நம்மை அழைத்துச் சென்றார் தொகுப்பாளர் வர்ஷா.

முதலில் அறிமுக உரை வழங்கினார் தொழில்நுட்ப வல்லுநர் தி.ந.ச. வெங்கடரங்கன். “என் பார்வையில் உரு புத்தகம் பற்றி இங்க பகிரலாமென்று நினைக்கிறேன். முத்துவை எனக்கு முப்பது வருடங்களாகத் தெரியும். ஆரம்பக்காலத்தில் நாங்கள் பேசிக்கொள்வதற்கென தனியாக மின் அஞ்சல் குழு இருந்தது. அதில் பல நாடுகளைச் சேர்ந்த பலர் தங்கள் கருத்துகள், தமிழ் பற்றிய விவாதம் ஆகியவற்றை நடத்துவார்கள். அனைவரும் பல வரிகளில் ஒரு கதையைக் கூறினால் ஒருவர் மட்டும் இரண்டே வரியில் அதைச் சொல்வார். அதன் பிறகு விவாதமே நடக்காது. மாற்றுக் கருத்து சொல்ல முடியாத அளவுக்கு வலுவான கருத்தாக அந்த இரண்டு வரிகள் இருக்கும். எனவே அந்த நபர் வயது முதிர்ந்தவராக இருப்பார் என்றுதான் நான் நீண்ட நாள்களாக நினைத்துக்கொண்டு இருந்தேன் பின்னர் முத்து நெடுமாறனை நேரில் சந்தித்த பிறகுதான் தெரிந்தது அவர் இளம் வயதுடையவர் என்று.
நமக்குக் கணினி அறிமுகமான சமயத்தில் அதில் தமிழ் எழுதுவது இவ்வளவு எளிமையானதாக இல்லை, நம் மொழியை அதில் கொண்டு வர எவ்வளவு போராட வேண்டி உள்ளது என்பதை அருகிலிருந்து பார்த்தவன் நான். இப்போது நாற்பது வருடங்களைக் கடந்து முரசு அஞ்சல் வந்து நிற்கும் இடத்தை பார்த்தால் மிகவும் மலைப்பாக உள்ளது. வெளிநாடுகளில் மென்பொருளை விலைகொடுத்து வாங்கி பயன்படுத்துவதற்குப் பலர் உள்ளனர். இந்தியாவில் அந்த நிலை இல்லை காரணம் பொருளாதாரம். ஆனால் நம்மை விட தமிழ் பேசும் மக்கள் குறைவான நாட்டிலிருந்து வந்த ஒருவர் தமிழுக்காகச் செய்துள்ள விஷயம் மிகவும் பெரியது. அவர் அதைச் செய்தது மட்டும் இல்லாமல் அதை இலவசமாகவும் வழங்கி இத்தனை வருடங்கள் தன் துறையில் சிறந்து விளங்குவதும் பாராட்டக்கூடிய ஒன்று.
இன்று வரை தமிழ் மீது அவருக்கு இருக்கும் ஆர்வம் குறையவில்லை ஒரு மென்பொருள் வேலை முடிந்தால் அடுத்து என்ன அடுத்து என்ன என்று தொடர் தேடுதலில் இருக்கிறார். ஏற்கனவே நாற்பது வருடங்கள் பணியாற்றிவிட்டு அடுத்த நாற்பது வருடங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் இப்போதே தீர்மானித்துவிட்டார். இந்த ஆர்வத்தைத்தான் அவரது புத்தகத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
முரசு அஞ்சலை பொதுவான பயனர்களைத் தாண்டி மைக்ரோசாஃப்ட், பெரிய திறன்பேசி நிறுவனங்கள், மலேசிய அரசாங்கம், சிங்கப்பூர் அரசாங்கம் எனப் பல இடங்களில் பயன்படுத்துகின்றனர். தான் தயாரித்த பொருளை எங்கு எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என முத்து நெடுமாறனுக்குத் தெரிந்துள்ளது. இதையும் நாம் உரு புத்தகத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்” எனப் பல தொழில்நுட்ப விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.
இவரைத்தொடர்ந்து பேசினார் காலச்சுவடு பதிப்பாசிரியர் அரவிந்தன். “முத்து நெடுமாறனைப் பற்றிப் பேச நினைக்கும்போது அவரை மூன்று பேருடன் ஒப்பிட நினைக்கிறேன். முதலில் பாரதியார். இவர் நாட்டுக்காகக் கவிதைகள் எழுதத்தொடங்கும் முன் ஒரு பத்திரிக்கையில் வேலைசெய்துகொண்டிருந்தார், அப்போது ஜப்பான் ஹைக்கூ, அவர்களின் சமூக அரசியல் மற்ற நாடுகளின் நிலை, உலகின் பல விஷயங்கள் என எழுதினார். வாசகர்களுக்குப் பல தகவல்களைக் கொடுப்பது தன் கடமையென வாழ்ந்தார். அவரிடம் வந்து யாரும் இதை எழுதுங்கள் எனச் சொல்லவில்லை ஆனால் அவர் அதைச் செய்தார்.
அடுத்தவர் பண்டிதர் சுவாமிநாத ஐயர். அவருக்குத் தமிழ் மீது இருந்த ஆர்வத்தால் பல புத்தகங்களைப் படித்தார் ஒரு கட்டத்தில் படிக்கப் புத்தகம் இல்லாதபோது ஊர் ஊராக, தெரு தெருவாகத் தேடிச் சென்று புத்தகங்களை வாங்கி படித்தார். ஓலைச்சுவடிகளைப் பார்த்து அவை அழிந்து வருவதை அறிந்து அனைத்தையும் புத்தகங்களில் அச்சிட்டார். இதைச் செய்யச் சொல்லியும் யாரும் அவரிடம் கேட்கவில்லை தமிழ் மீது இருக்கும் பற்றால் நம்முடன் இவை மறைந்துவிடக் கூடாது பிறரும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இதைச் செய்தார்.
இறுதியாக ராமானுஜ ஆச்சாரியார். மகாபாரதத்தைச் சமஸ்கிருத மொழியில் படித்துவிட்டு அந்த கருத்துகள் தமிழ் மக்களுக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக அவற்றைத் தமிழில் மொழி பெயர்த்தார். இதைச் செய்ய இவருக்கு 21 வருடம் ஆகியுள்ளது. மொழிபெயர்ப்பு வேலைகள் முடிந்தவுடன் அதை வெளியிடப் பணம் இல்லாமல் தன் வீட்டை விற்று அதில் வந்த பணத்தை வைத்து நாளிதழில் தொடராக வெளியிட்டார். இதைச் செய்யச் சொல்லியும் இவரை யாரும் கேட்கவில்லை ஆனாலும் செய்தார்.
இவர்களை போலதான் முத்து நெடுமாறனும் அவருக்குத் தமிழ் மேல் இருந்த காதலால் அதையே வாழ்க்கை பணியாக எடுத்துக்கொண்டு தொழில்நுட்பத்தில் தமிழைப் புகுத்தி அவர் செய்த அற்புதங்கள் உண்மையில் மிகப்பெரியது. இவருடைய வாழ்க்கை பக்கங்களைப் பற்றிய உரு புத்தகம் பலருக்கும் உந்துதலைக் கொடுக்கும். இந்த புத்தகத்தைக் காலச்சுவடு பதிப்பகத்தில் வெளியிட வாய்ப்புக்கொடுத்த முத்து நெடுமாறன், நூலாசிரியர் கோகிலா மற்றும் அவர்களது குழுவினருக்கு நன்றி’ என தன் உரையை முடித்தார்.
இறுதியாக நூலாசிரியர் கோகிலா நன்றிகளோடு உரையைத் தொடங்கினார். முதல் நன்றி முத்து நெடுமாறனுக்கு அவர் கொடுத்த வாய்ப்புக்காக இல்லை உரு நூலை நான் எழுத அவர் கொடுத்த முழு ஒத்துழைப்புக்காக நன்றி எனப் பேசத்தொடங்கினார்.
தமிழ் என்னை வாழ வைத்தது தமிழ்தான் எனக்குச் சோறு போடுகிறது என்கிறார் முத்து நெடுமாறன். இப்படிப் பேசுபவர்களைப் பார்ப்பது அரிது. அதைப் பதிவு செய்யும் ஆவலே இந்நூலின் தொடக்கப்புள்ளி என்றார்.
உருவுக்காக தொழில்நுட்ப விஷயங்களைப் பற்றி நிறைய ஆய்வு மேற்கொண்டிருந்தாலும் நூலில் பதிவு செய்துள்ளது கொஞ்சம்தான். எல்லா தரப்பு வாசகர்களையும் கருத்தில் கொண்டு நிறைய முத்து நெடுமாறன் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களைக் கொண்டு நூல் எழுதப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
அடுத்ததாக தன் ஆசிரியர் பா. ராகவனுக்கு நன்றி கூறியதோடு உரு நூல் எழுதும்போது தான் சந்தித்த சவால்களையும் முத்து நெடுமாறனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களையும் சுவையுடன் பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து காலச்சுவடு பதிப்பாசிரியர் அரவிந்தன் உரு நூலின் முதல் படியை வழங்கத் தொழில்நுட்ப வல்லுநர் தி.ந.ச. வெங்கடரங்கன் பெற்றுக்கொண்டார். புகைப்படங்கள் எடுத்தல், உரு நூலில் கையெழுத்து பெறுதல், மகிழ்ச்சி, அரவணைப்புகள், சிற்றுண்டி என நிறைவடைந்த நிகழ்ச்சியில் முத்து நெடுமாறனும் நூலாசிரியர் கோகிலாவும் பாராட்டு மழையில் நனைந்தனர். உண்மையிலேயே மழையும் பெய்து தன் வாழ்த்துகளைக் கொட்டியது.
- சத்யா கோபாலன்
உரு வாங்குவதற்கான தளங்கள் கீழே உள்ளன.
- மலேசியா : https://tinyurl.com/urubuykl
- சிங்கப்பூர் : https://tinyurl.com/urubuysg
- இந்தியா உள்பட மற்ற அனைத்து நாடுகளில் உள்ளவர்கள் : https://tinyurl.com/urubuyin














