மீன் அல்ல, உளவுக் கருவி -ஸ்டிங்‌ரே

தொலைப்பேசி பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், கூகுள் நிறுவனமானது ஆண்டிராய்டு 16 பதிப்பில் “திறன்பேசி வலையமைப்பு பாதுகாப்பு” என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வலையமைப்பு அறிவிப்புகள் (Network Notification) எனும் புதிய விருப்பத்தேர்வு இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், உங்கள் தொலைபேசி பாதுகாப்பற்ற வலையமைப்புடன் இணைந்தாலோ அல்லது உங்கள் தொலைபேசி அடையாள எண்கள் கோரப்பட்டாலோ உடனடியாக அறிவிப்பு கிடைக்கும். இந்த அறிவிப்புகள், பயனாளருக்கு நடக்கும் தாக்குதல்களை உணரவும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் உதவுகின்றன.

cell phone tower

இத்தகைய பாதுகாப்பு மாற்றங்கள் முக்கியமானதொரு தாக்குதலை எதிர்கொள்வதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளன — அதுவே “ஸ்டிங்‌ரே தாக்குதல்”. இது கடல் வாழ்வி அல்ல;  போலியான திறன்பேசி  கோபுரம் போல வேலை செய்யும் ஓர் உளவுக்கருவி. பொதுவாக ஐஎம்எஸ்ஐ கேச்சர் (IMSI Catcher) அல்லது போலி தொலைபேசி கோபுரம் (Cell-site Simulator) என அழைக்கப்படும் இந்த கருவியை காவல்துறையினரும், உளவுத்துறையினரும், சில சமயம் குற்றவாளிகளும் பயன்படுத்துகின்றனர்.

இந்த கருவி ஒரு வலிமையான சைகையை வெளியிட்டு, அந்த பகுதியில் உள்ள திறன்பேசிகளை உண்மையான கோபுரம் என நம்பச் செய்து தன்னுடன் இணைய வைக்கிறது. ஒரு முறை இணைந்த பிறகு, பயனாளரின் இடம், அழைப்புகள், குறுஞ்செய்திகள், மற்றும் தொடர்பு விவரங்கள் என பல தகவல்களை எளிதில் சேகரிக்க முடிகிறது. சில சமயங்களில் தொலைபேசிக்கு தீய மென்பொருள்கள் அனுப்பி, கூடுதல் தகவல்கள் திருடவும் வாய்ப்புண்டு.

இத்தகைய தாக்குதல்களில் சிக்குவதால் ஆபத்து என்னவென்றால் – இது நடக்கிறது என்பதை நம்மால் உணரக்கூட முடியாது. ஸ்டிங்‌ரே கருவி ஒரு பகுதியை குறிவைத்து செயல்படும் போதும், அந்த இடத்தில் உள்ள அனைத்து தொலைபேசிகளும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும், இது சில சமயங்களில் தொலைபேசி சேவை நிறுவனங்களின் பாதுகாப்பு முறைகளையும் மீறி செயல்படக்கூடியதாக இருக்கும்.

இவ்வாறான தாக்குதல்களிலிருந்து ந்ம்மைப் பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். வாட்ஸ்அப் போன்ற குறியாக்கத்துடன் உள்ள அரட்டை செயலிகள் பயன்படுத்துவதன் மூலம் இதிலிருந்து தப்பலாம். அதே போல, திறன்பேசி மென்பொருளை இயல்பாக மேம்படுத்தி வைத்திருப்பது பாதுகாப்பை உறுதி செய்கிறது. சந்தேகத்திற்கிடமான இடங்களில்  திறன் பேசியின் இணையத்தொடர்பை அணைத்து விடுதல் அல்லது ஏர்பிளேன் முறையில் வைத்தல் நல்லது. மேலும், விபிஎன் பயன்படுத்துவது கூடுதல் பாதுகாப்பை தரலாம், இருப்பினும் அழைப்புகள், குறுஞ்செய்தி பாதுகாப்பு இதில் இல்லை என்பதும் நினைவில் கொள்ள வேண்டியது.

கூகுளின் புதிய பாதுகாப்பு அம்சங்கள், ஸ்டிங்‌ரே போன்ற உளவுத்தொழில்நுட்பங்களை எதிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த அம்சங்கள் அனைத்தும் உங்கள் தொலைபேசியில்  செயல்பட, அது தேவையான உள்கட்டமைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய கருவிகளில் சில அம்சங்கள் இல்லாமல் இருந்தாலும் இனி வரும் காலங்களில் அவை அறிமுகப்படுத்தப்படும் என்று நம்பலாம்.

  • நவீனா
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now