கினாபாலு பூங்கா மெய்நிகர் சுற்றுலா

யுனெஸ்கோவின் பாரம்பரிய அடையாளங்களுள் ஒன்றான மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள கினாபாலு பூங்காவிற்கு மெய்நிகர் சுற்றுலா அழைத்துச் செல்கிறது கூகுள்.

கலை, சுற்றுலா முதலியவை தொடர்பாக கூகுள் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் கூகுள் கலை, பண்பாட்டுத் தளம்​. இத்தளத்தில் பல்வேறு கலைப்படைப்புகள், சுற்றுலாத்தலங்களை​ப் பற்றி அறிந்துகொள்ள முடியும். இதில் ஐநாவின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களை மெய்நிகர் தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுலா செல்வது போன்றதோர் அம்சத்​தை வழங்கிவருகிறது. பேசும் சுற்றுலா (Talking Tours) அம்சத்தின் ​மூலம் இப்பூங்காவைச் சுற்றிப் பார்க்க முடியும்.

அதோடு செயற்கை நுண்ணறிவு என்ற பயண வ​ழிகாட்டியும், உங்களுடனேயே பின்தொடர்வார். ஒவ்வொரு பகுதிகளைப் பற்றியும் நீங்கள் கேள்விகள் கேட்கும்போது, சளைக்காமல் பதிலளித்துக்கொண்டே உடன் வருகிறது செயற்கை நுண்ணறிவு. இந்த அம்சத்தில்  மலேசியாவின் சபாவில் அமைந்துள்ள கினாபாலு பூங்காவும் இணைக்கப்பட்டுள்ளது. கினாபாலு பூங்கா யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றாகச் சேர்க்கப்பட்ட 25ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில் இது கொண்டுவரப்பட்டுள்ளது. ​இந்த பூங்காவின் அரிய அழகையும் இயற்கை வளங்களையும் வீட்டிலிருந்தபடியே பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

போர்னியோ தீவின் வடக்குப் பகுதியில் உள்ள இந்தப் பூங்கா தனது அதிகப்படியான பல்லுயிர்ப் பெருக்கத்திற்காக உலகளவில் புகழ்பெற்றுள்ளது. ஏனெனில் வெப்பமண்டல மழைக்காடுகள் முதல் உயர்மலைப் புல்வெளிகள் வரையிலான பல்வேறு சூழல் அமைப்புகள் இங்கு உள்ளன. கம்பீரமாக உயர்ந்து நிற்கும் கினாபாலு மலையின் காட்சியும் இங்கு கிடைக்கும் அரிய அனுபவமாகும்.

இது உலக பாரம்பரிய சின்னம், யுனெஸ்கோ புவியியல் பூங்கா,  யுனெஸ்கோ உயிர்க்கோள காப்பகம் என ​மூன்று பெரும் அங்கீகாரங்களை தன்னகத்​தே கொண்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய மலரான ராஃப்லேசியாவுக்கென தனி பாதுகாப்பு மையம் இங்கு இருக்கிறது.

கினாபாலு பூங்கா தவிர பல்வேறு உலகப் பண்பாட்டுச் சின்னங்களும் இந்த மெய்நிகர் பயணத் தொகுப்பில் உள்ளன. தென்கிழக்கு பால்டிக் கடலில் அமைந்துள்ள குரோனியன் ஸ்பிட் பாரம்பரிய சின்னம், சீனாவின் மீன்பிடி கிராமமாக இருந்து போர்த்துக்கீசியர்கள் வருகைக்குப்பிறகு முற்றிலும் மாறிப்போன மகாவ் நகரம், ருவாண்டாவின் நியுங்வே தேசிய பூங்கா என இந்த மெய்நிகர் பயணத் தொகுப்பில் 20 இடங்கள் உள்ளன. 

நேரில் சென்று பார்க்க நேரம் இல்லாமல் அல்லல் படுபவர்கள் இதனைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு பகுதியிலும் நீங்களே நடந்து சென்று பார்க்கும் உணர்வை ஏற்படுத்தும் வகையில் இது இருக்கிறது. இது தொடர்பாகக் கூகுள் வலைப்பதிவை வெளியிட்டிருக்கிறது. கினாபாலு பூங்கா மெய்நிகர்  பயணம், வலைப்பதிவிற்கான இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

  • மு. இசக்கிமுத்து

கினாபாலு பூங்கா மெய்நிகர் பயணம்

கூகுள் வலைப்பதிவு

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now