முரசு அஞ்சல் செயலியின் மறு உருவாக்க வெளியீடு நடைபெற்று ஒரு மாதமாகியும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் முரசு அஞ்சல் பற்றிய பதிவுகள் வந்துகொண்டுள்ளன. எழுத்துருக்களையும் உள்ளிடுமுறைகளையும் பயன்படுத்தியோரும் உரு நூலை வாசித்தோரும் தங்கள் கருத்துகளை இயலி வழியாகவும் வலைத்தளங்களிலும் தெரிவிக்கின்றனர். மலேசிய வெளியீட்டுக்குப் பிறகு அவற்றில் சிலவற்றை செல்லினம் தளத்தில் வெளியிட்டிருந்தோம். சிங்கப்பூர், சென்னை வெளியீடுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட மேலும் சில பதிவுகளை இங்கே தொகுத்திருக்கிறோம்.

ஜான்சன் விக்டர்
முதன் முதலில் தோட்டப்புறப் பள்ளியில் பயன்படுத்தப்பட்ட முத்து நெடுமாறனின் எழுத்துரு பற்றிய தகவல்களும் வீனஸ் கலைமன்ற நாடகம் பற்றியும் உரு நூலில் இருக்கிறது. இந்நிகழ்வோடு தொடர்புடைய ஜான்சன் விக்டர் தான் வரலாற்று நிகழ்வொன்றின் வாழும் சான்றாக இருந்திருப்பதை நூலைப் படித்தே அறிந்து கொண்டேன் என நெகிழ்வுடன் பதிவிட்டுள்ளார்.
“குவாங் தமிழ்ப் பள்ளியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த தரப்பினர்களுக்கு தங்கவேலு, மூர்த்தி ஆகியோரிடம் இருந்த தொலைநோக்கு இல்லை. எனவே, வேறு வழி தெரியாமல் வெறும் 500 ரிங்கிட் வருமானத்தில் 5000 ரிங்கிட் மதிப்புடைய கணினியை வங்கியில் கடன் எடுத்து வாங்க வேண்டிய நிர்பந்தம்.
அப்போது, முரசு மென்பொருளைப் பயன்படுத்த கணினிப் பெட்டியின் பின் புறத்தில், அச்சுக் கருவியின் வடத்தைப் பொருத்தும் இடத்தில் முரசு நிறுவனம் தயாரித்த இன்னொரு வன்பொருளை இணைக்க வேண்டும். அதை வாங்குவதற்கு 1200 விலை கொடுத்தேன். அப்போது, முல்லை, அருவி, மாதவி என்ற மூன்றே மூன்று எழுத்துகள் மட்டுமே இருந்தன.
இந்த மூன்று எழுத்துகளுக்காக, சொற்ப வருமானத்தில் 5,000 ரிங்கிட் கடன் எடுத்து கணினி வாங்கியது குறித்து எனக்கு எரிச்சல் உண்டான காலங்கள் உண்டு. ஆனால், முத்து தனது பட்டப்படிப்புக்குப் பிறகும், பொறுத்தமான உத்தியோகம் கிடைக்காத நிலையில், தனது அன்றாடச் செலவுக்காக தாயாரிடம் ஒரு ரிங்கிட் வாங்கிய கதையை வாசித்த பிறகு, அந்த எரிச்சல் பனியைப் போல் மறைந்து போனது.” எனத் தன் பேஸ்புக் பதிவில் எழுதியுள்ளார்.
முழுப் பதிவையும் பேஸ்புக்கில் படிக்கலாம்.
மாலன் நாராயணன்
மூத்த பத்திரிகையாளரான மாலன் நாராயணன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் முரசு அஞ்சல் வெளியீட்டில் கலந்து கொண்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தி எழுதியிருந்தார். தன் நினைவுகளில் இருந்து பல்வேறு தகவல்களைத் திரட்டி எழுதியிருந்தார்.
“புதிய முரசு அஞ்சல் பல வசதிகளோடு வந்திருக்கிறது . ஓர் எழுத்தைத் தட்டி ஒரு சொல்லைத் தொடங்கும்போதே டேய் இதுதானே நீ நினைக்கிறே என்று அந்த வார்தையைக் கொடுத்து விடுகிறது . அதனால் எழுத்துப் பிழை இல்லாமல் எழுதலாம். என்னைப் போன்ற அப்பாவிகளுக்காக அகராதியும் அதில் உண்டு. அகராதி பேர்வழிகள் தங்களது அகராதிகளைத் தாங்களே கூட உருவாக்கிக் கொள்ளலாம் நாம் எழுதும் சொற்களைச் சேமித்துக் கொள்கிறது. எழுதுவதை வாழைப்பழம் சாப்பிடுவதைப் போல எளிதாக்கிய முத்து இப்போது அதை உரிக்கச் சோம்பல் படுகிற என்னைப் போன்றவர்களுக்காக உரித்து ஊட்டியும் விடுகிறார். தமிழர்களை முழுச் சோம்பேறிகளாக்குவதற்கு தமிழ் கூறும் நல்லுலகு முத்துவிற்கு கடமைப்பட்டிருக்கிறது!” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் பல பழைய நினைவுகளையும் அவர் பதிவு செய்துள்ளார்.
புதிய தலைமுறை நேர்காணல்
“நான் ஆரம்பக்காலத்தில் கிட்டத்தட்ட முப்பது எழுத்துருக்கள் வரை உருவாக்கியிருந்தேன். அவை அனைத்தும் அந்த காலகட்டத்திற்கு ஏற்ப இருந்தது. ஆனால் இப்போது அதனுடன் மேலும் சில எழுத்துருக்களையும் பழைய எழுத்துகளில் நிறைய மேம்பாடுகளும் செய்து வெளியிட்டுள்ளோம்” என புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்துள்ளார் செல்லினம், முரசு அஞ்சல் நிறுவனர் முத்து நெடுமாறன்.
முழு காணொளி புதிய தலைமுறை தளத்தில் இருக்கிறது,
புதிய தலைமுறை நேரலை
புதிய தலைமுறை செய்தி நிறுவனம் முரசு அஞ்சல் நிகழ்ச்சியை நேரலையாகவும் தங்கள் யூட்யூப் தளத்தில் வெளியிட்டிருந்தது.
மெட்ராஸ் பேப்பர்
“நமக்கு முன் எப்போதுமே வாய்ப்புகள் நிறைய இருக்கும். அவற்றிலிருந்து நாம் செய்யும் தேர்வுதான் நமது வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்கும்.
தமிழுக்காக ஒருவர் உழைக்கிறார், யோசிக்கிறார், நிறைய விஷயங்களைச் செய்கிறார். அவை பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றிகரமான செயல்களாக உருப்பெறுகின்றன. தமிழாலும் ஒருவர் வாழ்கிறார், பொருளாதாரத் தன்னிறைவுடன் இருக்கிறார் என்பதை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
இவருடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு நம்பிக்கையை விதைப்பதாக இருக்கும். இது ஒரு தனி நபரின் கதை என்பதோடு நில்லாமல் கணினித் தமிழின் வரலாற்றைப் பதிவு செய்வதாகவும் இருக்கும் என்பதால் இந்த புராஜெக்ட்டைத் தேர்வு செய்தேன்.’ என்று உரு எழுதியதற்கானக் காரணங்களை எழுத்தாளர் கோகிலா கூறியதாகக் குறிப்பிட்டு மெட்ராஸ் பேப்பர் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
காயத்ரி ஒய் எழுதியுள்ள இக்கட்டுரையை மெட்ராஸ் பேப்பர் இணையதளத்தில் வாசிக்கலாம்.
தி.ந.ச. வெங்கடரங்கன்
“பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கணினிகளுக்குக்கான முரசு அஞ்சல் செயலியை முற்றிலுமாக மேம்படுத்தியுள்ளார் முத்து. அதோடு பல்வேறு புதிய அழகான எழுத்துருக்களையும் பல ஆண்டுகளாக உழைத்து உருவாக்கி வெளியிட்டுள்ளார். எல்லோரும் செல்பேசி செயலிகளை மட்டுமே கவனம் செலுத்தும் இந்தக் காலத்தில் இந்த முயற்சி கணினி பயனர் என்கிற முறையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார் தொழில்நுட்ப வல்லுநர் தி.ந.ச. வெங்கடரங்கன்.
முழு பதிவைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.
சிலம்பரசன் என்.ஆர்
சென்னை அண்ணா நூலகத்தில் நடைபெற்ற முரசு அஞ்சல் வெளியீட்டு விழாவில், தமிழ் டிஜிட்டல் உலகின் முன்னோடி, முரசு அஞ்சல் நிறுவனர் முத்து நெடுமாறன் அய்யா அவர்களுடன் ஒரு சிறப்பான சந்திப்பு. அவர் என் பெயருடன் “உரு” புத்தகத்தில் கையெழுத்திட்ட நொடி… சொல்ல வார்த்தைகளே இல்லை. அது ஒரு சாதாரண கையெழுத்தல்ல அது வரலாறு, அது தூண்டுதல், அது ஒரு ஆசி! தமிழ் டிஜிட்டல் உள்ளீட்டு முறையையும் தட்டச்சு நுட்பங்களையும் எளிமையாக்கி, உலகத்தரத்திற்குக் கொண்டு சென்ற வரலாற்றுப் பரிணாமத்தை உருவாக்கியவரை நேரில் சந்தித்த அந்த நிமிடம் என் வாழ்க்கையின் ஆகச் சிறந்த தருணங்களில் ஒன்று என லிங்ட்இன் தளத்தில் குறிப்பிட்டுள்ளார் சேலம் சோனா கல்லூரியின் துணைப் பேராசிரியர் சிலம்பரசன்.
அவருடைய லிங்ட்இன் பக்கத்தில் இன்னும் விரிவாக எழுதியுள்ளார்.
சிலம்பரசன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்திலும் மற்றொரு உருக்கமான பதிவை எழுதியிருக்கிறார். “தமிழுக்கு இடமில்லாத டிஜிட்டல் தளங்களிலும், மொழி தவிர்க்கப்படும் சூழல்களிலும் ஒரு டிஜிட்டல் புரட்சியை நிகழ்த்தினார்.” எனக் குறிப்பிட்டு வெளியீடு நிகழ்ச்சியில் முத்து நெடுமாறன் பேசும் காணொளித் துணுக்கு ஒன்றினை இணைத்துள்ளார். இதில் முத்து நெடுமாறன் தன்னுடைய மென்பொருள் தமிழுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது, ஆங்கிலத்தை ஆதரிக்காது எனச் சொல்ல நிகழ்ச்சிக்கு வந்திருந்தோர் கரவொலி எழுப்பும் காட்சி இருக்கிறது.
சிலம்பரசனின் இன்ஸ்டா பக்கம் இதை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்கிறது.
ஜெய் சக்திவேல் தங்கவேல்
‘உரு’ புத்தக வெளியீட்டில் கலந்துகொண்டது மகிழ்வைத் தரக்கூடியதாக இருந்தது. திரு.முத்து நெடுமாறன் அவ்வளவு அழகாகத் தனது உரையை அனைவருக்கும் புரியும் வண்ணம் வழங்கிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்புப் பரிசு ஆச்சரியம் தருவதாய் இருந்தது. கூடவே அந்த புத்தகம் ஒரு போனஸ். மிக நேர்த்தியாகத் தொகுத்துள்ளார் கோகிலா என ஜெய் சக்திவேல் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவருடைய பேஸ்புக் பக்கத்திற்கான இணைப்பைக் கொடுத்திருக்கிறோம்.
விவேக் பாரதி
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அறிவார்ந்த உள்ளிடு முறைகள், அழகு தமிழ் எழுத்துருக்கள், எழுத்தாளர் கோகிலா எழுதிய ‘உரு’ வெளியீட்டு விழா என நிகழ்ந்த மூன்று முத்தான நிகழ்ச்சிகளும், தமிழ்ச்சமூகம் கொண்டாட வேண்டிய வரலாறு என்பது மிகையல்ல. கணினியில் தமிழை உள்ளிடும் முறையில் பெரும் புரட்சியைச் சத்தமின்றி செய்திருக்கிறார் முத்து நெடுமாறன் என்று விவரித்துள்ளார் ஊடகவியலாளர் விவேக் பாரதி.
முழு முகநூல் பதிவைக் காண இங்கே சொடுக்கவும்.
புனிதா சுப்ரமணியம்
கன்னித் தமிழின் கணினிப் பயணம் எனத் தலைப்பிட்டு புனிதா எழுதியுள்ள பதிவு “40 ஆண்டுகளாக முத்து நெடுமாறன் ஐயா, தமிழை கணினி உலகில் வியக்கத் தக்க வகையில் எடுத்துச் சென்றுள்ளார். அவரது “உரு” நூல் இந்த பயணத்தின் உணர்வையும் உறுதியையும் அழகாகச் சொல்கிறது.” என்றும் இன்னும் பல தருணங்களையும் தெரிவிக்கிறது.
nadanitha என்கிற இன்ஸ்டா பக்கத்தில் இவர் பதிவு இருக்கிறது.
பிரபஞ்சா அனந்தகுமார்
எழுத்துருவியல் துறையில் பணியாற்றும் பிரபஞ்சா அனந்தகுமார் முத்து நெடுமாறனுடனும் எழுத்தாளர் கோகிலாவுடனும் எடுத்துக்கொண்ட படங்களைப் பதிவிட்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
பிரபஞ்சாவின் பேஸ்புக் பக்கத்தில் ஆங்கிலத்தில் இப்பதிவு உள்ளது.
நானா ஷாம் மரினா
புகைப்படக் கலைஞரும் எழுத்துரு ஆர்வலருமான நானா கையோடு தன் படக்கருவியையும் கொண்டு வந்திருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரையும் படம் பிடித்து அவற்றைத் தன் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
பேஸ்புக் தளத்தில் அவர் பதிவு இருக்கிறது.
மகேஷ் குமார்
சிராங்கூன் டைம்ஸ் இதழ் ஆசிரியரான மகேஷ் குமார் சிங்கப்பூர் வெளியீடு நிகழச்சிக்கு வந்திருந்ததைப் பதிவு செய்திருந்தார். உரு படித்துவிட்டு தன் எதிர்பார்ப்புகளைப் பட்டியலிட்டு பேஸ்புக்கில் எழுதியிருந்தார். படங்கள் சேர்த்திருந்தால் இளைய தலைமுறை படிக்கும்போது இன்னும் தெளிவாக இருக்கும் என்கிற தனது கருத்தைப் பதிவிட்டிருந்தார்.
அவர் பேஸ்புக் பக்கத்தில் இவ்விரு பதிவுகளும் உள்ளன.
மோனிஷா செல்வராஜ்
எழுத்தாளர் மோனிஷா செல்வராஜ் உரு நூலாசிரியர் உடனான தன்னுடைய நட்பினைப் பற்றி குறிப்பிட்டு முரசு அஞ்சல், உரு வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைப் பற்றி விரிவாக பேஸ்புக்கில் எழுதியிருந்தார்.
முரசு அஞ்சல், உரு சொற்களை இணைக்காமல் மேலும் பலரும் நிகழ்ச்சிக்கு வந்ததைப் பதிவு செய்திருந்தனர். இணைத்திருந்த பதிவுகளில் சிலவற்றை மட்டும் இங்கே கொடுத்துள்ளோம்.
முந்தைய பதிவுகளின் தொகுப்பும் செல்லினம் தளத்தில் இருக்கிறது.
- சத்யா கோபாலன்
