ஆப்பிள் கை விட்ட கூகுள் கீப்

கூகுளில் குறிப்பெடுக்கும் ‘கூகுள் கீப்’ செயலி, பல ஆண்டுகளாக ஆண்டிராய்டு, ஐஓஎஸ் இரு தரப்புப் பயனர்கள் இடையிலும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. அண்மையில் இச்செயலியில் கூகுள் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. ஆண்டிராய்டு பயனர்களுக்கான கூகுள் கீப்பில் நவீன வடிவமைப்புடன் செயலி புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆப்பிள் திறன் கடிகாரத்தில் கூகுள் கீப் செயலியின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன? 

குறிப்பெடுக்கும் கூகுள் கீப்

கூகுள் நிறுவனத்தின் குறிப்பெடுக்கும் செயலியான கூகுள் கீப், பயனர்கள் விரைவாக குறிப்பெழுத, பணிப்பட்டியல் (to-do list) உருவாக்க, நினைவூட்டல்கள் (reminders) அமைக்க, படங்கள், குரல்வழிப் பதிவுகளைச் சேர்க்க எனப் பல வசதிகளை உள்ளடக்கியது ஆகும். ஆண்டிராய்டு, ஐஓஎஸ் என இரு இயங்குதளங்களிலும் கூகுள் கீப் செயலியை எளிதாகப் பயன்படுத்தலாம். ஆண்டிராய்டில் கூகுள் மென்னுதவி (Google Assistance) வாயிலாக குரல் மூலம் குறிப்பு இடுவது, முகப்புத் திரையில் தனிக் கருவியாக நிறுவி நேரடியாக செயலியை பயன்படுத்துவது போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன. ஐஓஎஸ் பயனர்களுக்கு கூகுள் கீப் செயலி தனிப்பயனாக்க வடிவமைப்போடு, ஐபோன், ஐபேட், மெக் கணினி என எந்தக் கருவியிலும் குறிப்பெழுதும் வசதியை வழங்குகிறது. இதன் மூலம் இருதரப்புப் பயனர்களுக்கும் தனித்துவமான பயன்பாட்டு அனுபவத்தை வழங்கி வரும் கூகுள் கீப் செயலியில் புதிய மாற்றங்கள் வந்துள்ளன.

ஆண்டிராய்டுக்கு வடிவமைப்பு மாற்றங்கள் 

கூகுள் தனது பொருள் வடிவமைப்புக் கொள்கையில் அண்மையில் அறிமுகப்படுத்திய மெட்டீரியல் 3 எக்ஸ்பிரஸிவ் வடிவமைப்பு, கூகுள் கூகுள் கீப் செயலிக்கும் வந்தடைந்துள்ளது. இது பயனர் இடைமுகத்தைச் சீராக்கும் விதத்தில் கூடுதல் தெளிவாகவும், அழகாகவும் செயலியை மாற்றியிருக்கிறது. புதிய தேடல் பட்டி, வட்டமான பொத்தான் அமைப்புகள், குறிப்புகளில் உள்ள படங்களுக்கான மேம்பட்ட முன்னோட்டம் ஆகியவை இந்த வடிவமைப்பின் முக்கியமான அம்சங்களாகக் கருதப்படுகின்றன. “இந்த மாற்றம், குறிப்பெழுதும் அனுபவத்தைப் பார்வைக்கும் செயல்பாடுக்கும் ஏற்ற வகையில் மேம்படுத்தும்” என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. பயன்படுத்தும் கருவிகளின் ஒளி அமைப்புக்கும் நிறத்திற்கும் ஏற்றாற்போல் செயலியின் அமைப்புகள் நிறங்கள் தன்னிச்சையாக மாறும் தன்மையும் மேம்படுத்தப்பட்டுள்ளது. 

ஆப்பிள் திறன்கடிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டது ஏன்?   

மறுபுறம் ஆப்பிள் திறன்கடிகாரங்களிலிருந்து கூகுள் கீப் செயலி முற்றிலுமாக நீக்கப்பட்டது. புதிதாக தரவிறக்கவும் முடியாமல், ஏற்கெனவே பயன்படுத்தி வந்தவர்களும் திறக்க முடியாமல் நின்றுபோனது. இதற்கு இரு தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வ விளக்கம் வழங்கப்படவில்லை. ஆனாலும், கூகுள் நிறுவனம், தன் சொந்த தளங்களை (திறன் கடிகாரங்களில் வியர் ஒஎஸ்) முன்னிறுத்துதல், வருமானம் ஈட்டும் தளங்களுக்கு முக்கியத்துவம் அளித்தல் ஆகிய புதிய கொள்கையின் அடிப்படையில் ஆப்பிள் திறன் கடிகாரங்களில் இருந்து கூகுள் கீப் செயலியை நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இதுவரை இலவசமாக வழங்கப்பட்டு வந்த கூகுள் கீப் செயலியைச் சந்தா அடிப்படையில் மாற்றும் திட்டமும் கூகுள் வசம் இருப்பதாகக் கருத்துகள் எழுந்துள்ளன. 

ஆப்பிள் தரப்பிலோ, 2019-ல் கூகுள் கீப் அறிமுகமானது முதல், ஆப்பிள் கருவிகளில் பல சமயங்களில் மெதுவாக இயங்கி வந்ததாகவும், முக்கியமான மேம்பாடுகள் ஏதும் இல்லாததாலும் நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆப்பிள் தனது குறிப்பெடுக்கும் செயலியான நோட்ஸை முன்னிலைப்படுத்த திட்டமிட்டுள்ளதால், விரைவில் கூகுள் கீப்பின் இடத்தை முற்றிலுமாக நோட்ஸ் பிடிக்கும் என்றும், அதன் முன்னோட்டமாகவே திறன் கடிகாரத்திலிருந்து செயலி நீக்கப்பட்டது என்றும் தெரிய வருகிறது. 

  • விவேக்பாரதி

ஆப்பிள் திறன் கடிகாரத்தில் கூகுள் கீப் நீக்கம் பற்றிய செய்தி

கூகுள் கீப் செயலியின் புதிய மேம்பாடுகள் குறித்த செய்தி

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now