தொழில்நுட்பம் – இளைஞர்களின் பார்​வை

இளைஞர்களின் தொழில்நுட்பம் பற்றிய பார்வை எப்படி இருக்கிறது? எந்த அளவிற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றி கூகுள் நடத்திய ஆய்வில் பல ஆச்சரியப்படுத்தும் தகவல்கள் வெளியாகி​யிருக்கின்றன.

இந்த ஆய்வை கூகுள், இளைஞர்கள் பற்றி பல்வேறு ஆய்வுகளைச் செய்துவரும் லிவிட்டி நிறுவனத்துடன் சேர்ந்து நடத்தியிருக்கிறது. ஐரோப்பா முழுவதிலும் உள்ள 13 முதல் 18 வயதுடைய 7,000 இளைஞர்களிடம் கருத்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதி தற்போது வெளியாகியிருக்கிறது, முழுமையான தரவுகள் வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் எனவும் கூகுள் தனது வலைப்பதிவில் கூறியிருக்கிறது. இதில் மொ​த்தம் ​மூன்று முக்கிய கருத்துகள் இருக்கின்றன.

முதலாவதாக இணையத்தைப் பயன்படுத்துவது, பயன்படுத்தாதது இரண்டிற்குமான நேரத்தைச் சமநிலைப்படுத்த இளைஞர்கள் விரும்புகிறார்கள். அதிகப்படியான திரை பயன்பாட்டு நேரம் தங்கள் மன நலத்தில் உணர்வுப்பூர்வ நலத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை இளைஞர்கள் அறிந்திருக்கின்றனர்.

57 விழுக்காடு இளைஞர்கள் இணையம், சாதாரண வாழ்க்கையில் சமநிலையான உறவைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். இந்த நேரத்தைப் பராமரிக்க, மன மகிழ்ச்சியை நிர்வகிக்க அவர்கள் எளிமையான சிலவற்றைச் செய்கிறார்கள் எனக் கூறியிருக்கிறார்கள். அவர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பது இறுதி அறிக்கையில்தான் தெரியவரும்.

80 விழுக்காடு இளைஞர்கள் இணையத்தில் எதை, யாருடன் பகிர்வது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். 43 விழுக்காடு இளைஞர்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் அதிக நேரம் செலவிடுவதாகவும், 31 விழுக்காடு இளைஞர்கள் இணையத்தில் பொழுதுபோக்குவதில் கவனம் செலுத்துவதாகவும், 30 விழுக்காடு இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதாகவும், 25 விழுக்காடு இளைஞர்கள் தங்கள் திரை பயன்பாட்டில் நேர வரம்புகளை வைத்திருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

இதன்​மூலம் நான்கில் மூன்று இளைஞர்கள் தங்கள் மனம், உடல் நலனுக்கு ஏற்றார்போல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர் என்பதை அறியமுடிகிறது. இத்தாலியைச் சேர்ந்த 15 வயதுடைய அனிதா கருத்தாய்வில், “நான் நண்பர்களுடன் இருக்கவும், நேரத்தைக் கழிக்கவும், நகைச்சுவையாகப் பேசவும், ஒன்றாக விளையாடவும் வெளியே செல்கிறேன், எனது திறன்பேசியைப் பயன்படுத்துவதற்கு அல்ல” என கூறியிருக்கிறார்.

இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்பத்திலேயே ​ பிறந்து வளர்ந்திருந்தாலும், அதில் சவால்களைச் சந்திக்கும்போது பெற்றோர், பாதுகாவலர்களையே முதலில் நாடுகிறார்கள். ஏறக்குறைய 68 விழுக்காடு இளைஞர்கள் தொழில்நுட்ப மோசடி அல்லது ஏமாற்று வேலைகளில் சிக்கினால் பெற்றோரிடம் செல்வதாகக் கூறியிருக்கின்றனர்.

ஆனால் 31 விழுக்காடு இளைஞர்கள் மட்டுமே தங்கள் பெற்றோர்கள் இணையம் பற்றி நன்கு அறிந்திருப்பதாகக் கரு​துகிறார்கள். அவர்கள் இணையத்தைப் பற்றி அறிந்திருந்தால் மட்டுமே, பிரச்சினைகளுக்குத் தீர்வை காண முடியும் என்பதும் அவர்களது கருத்தாக இருக்கிறது. போலந்தைச் சேர்ந்த 17 வயதுடைய சைமன், “இணைய வாழ்க்கை எனக்கு ஒரு குரலை தருகிறது, இணையம் இல்லாத வாழ்க்கை ஒரு நோக்கத்தை தருகிறது. இணையம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும், எனவே நாங்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டு, கேட்டுக்கொண்டு, பாதுகாப்பாக இருப்போம்.”  எனப் பேசியிருக்கிறார்.

இதன் ​மூலம் பெரும்பாலான இளைஞர்கள் தொழில்நுட்பத்தைப் பற்றி விழிப்புணர்வோடு இருப்பதை அறிய முடிகிறது. செப்டம்பரில் வெளியாகப்போகும் இறுதி அறிக்கைக்குக் காத்திருப்போம். அதில் இன்னும் சுவையான தகவல்கள் வெளியாகக்கூடும்.

  • மு. இசக்கிமுத்து

கூகுள் வலைப்பதி​வு

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now