திறன்கருவிகள், இன்றைய வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டன. ஆனால் அவையெல்லாம் கண்களுக்கு அழுத்தம் தருவதாலும், கவனச் சிதறலாலும் மின் தேவையாலும் பயனாளர்களை எப்போதும் கட்டுப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. இதற்கு மாற்றுத் தீர்வாகப் பரிந்துரைக்கப்படுகிறது மின் மை கொண்ட கைக்கணினி (E ink Tablet). காகிதம் பயன்படுத்தும் போது உண்டாகும் அனுபவத்தைக் கிட்டத்தட்ட தொண்ணூறு விழுக்காடு வரை இவை நிறைவு செய்யுமாம். அதே நேரம் கண்ணுக்கு ஓய்வாகவும் பளிச்சென்று ஒளிவீசும் திரைகள் இல்லாமல் மின்னணு மை என்ற தனித்துவமான தொழில்நுட்பத்தில் இதன் திரை உருவாக்கப்பட்டுள்ளது.

இக்கருவிகளின் திரை சிறிய மைபொதிகளால் (Microcapsules) நிரப்பப்பட்டிருக்கும். ஒவ்வொரு புள்ளியும் கறுப்பாகவோ வெள்ளையாகவோ மாறும். திரைத் தானாக ஒளிராது. மாறாகப் புத்தகங்களைப் போல வெளிச்சத்தில் பயன்படுத்த வேண்டும். இதுவே இதன் முதன்மையான பார்வை பாதுகாப்பு அம்சமாக உள்ளது. பார்வையைப் பழுதாக்காமல், பழைய புத்தக பக்கங்களைப் போலவே தெரியும். நீண்ட நேர வாசிப்புக்கு உகந்தது. குறிப்பாக ஒரு முறை மின்னேற்றம் செய்தால் வாரக்கணக்கில் பயன்படுத்தலாம்.
அமேசான் கிண்டில் கருவி போன்ற பல படிப்பான்கள் இத்தத்துவத்தில்தான் வேலை செய்கின்றன. வாசிப்பதற்கு உதவுவது மட்டுமே மின் படிப்பான்களின் வேலை. கைக்கணினிகள் அதற்கும் ஒரு படி மேலே. புத்தகத்தைப் படிப்பதைப் போலவே உருவாக்கவும் முடியும். எழுதுகோல்களுடன் வருவதால் குறிப்பெடுத்தல், வரைதல், எழுதுதல் போன்ற பல்வேறு வேலைகளைச் செய்யமுடியும்.
இக்கருவியில் பிடிஎஃப் போன்ற கோப்புகளைப் பயன்படுத்தலாம், உங்கள் கையெழுத்தை நேரடியாகத் திரையில் எழுதலாம் அதேபோல் உங்கள் கையெழுத்தைத் தட்டச்சு எழுத்தாக மாற்றும் வசதியும் உள்ளது. கூகுள் டிரைவ், டிராப் பாக்ஸ் போன்ற சேமிப்பிடங்களும் உள்ளன. எழுத்தாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், புத்தகக் காதலர்கள் ஆகியோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஐந்தாயிரம் ரூபாய் முதல் அறுபதாயிரம் ரூபாய் வரை பல விலைகளில் பல மாதிரிகளில் இந்த கைக்கணினிகள் கிடைக்கின்றன.
மின்னிலக்க உலகத்தில் சீரான வாசிப்பு, எழுத்து அனுபவத்தை வழங்கும் ஓர் அழகான, அமைதியான நவீன கருவி இது. உங்களுக்கு எழுதப் பிடிக்குமா, புத்தகம் வாசிக்க விருப்பமா, கண்களுக்குப் பாதுகாப்பான திரை வேண்டுமா அப்படியானால் இ இங்க் டேப்லெட் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
- சத்யா கோபாலன்
சில மின் மை வகைக் கைக்கணினிகளின் பட்டியல்
