நீண்ட நேரம் அமர்ந்திருந்தபடி வேலை செய்பவர்களுக்கு, “கொஞ்சம் எழுந்து நடந்துவிட்டு வாருங்களேன்” என்று மணிக்கட்டில் இருக்கும் கடிகாரம் விர்ரென்று அதிர்ந்து வேண்டுகோள் விடுத்தால் மறுக்க முடியுமா? நம் உடலுக்கு அன்றாடம் தேவைப்படும் சிறு உடற்பயிற்சி நலனை, வியர் ஓஎஸ் நிறுவப்பட்ட திறன் கடிகாரங்கள் இப்படி வழங்குகின்றன. மணிக்கட்டோடு இழையோடும் இந்த அக்கறை அதிர்வுக்குப் பயனர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு நமது வாழ்வியலில் உடற்பயிற்சியைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துவிட்டது. அன்றாட நடைப்பயிற்சியில் தொடங்கி உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சிகள் என உடலை நலத்துடன் வைத்துக்கொள்ளும் சிந்தனை மேலோங்கி வருகிறது. இதைக் கண்காணிக்க உடற்பயிற்சி செயலிகள் பல நம் திறன்பேசிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றையும் நிறுவிய புதிதில் பயன்படுத்துவதோடு சரி, தொடர்ந்து அதன் பேச்சைக் கேட்டு நடப்பது நடைமுறையில் பயனர்களுக்கு சிரமத்தையே கொடுக்கிறது. அதைக் கவனத்தில் கொண்டுதான் வியர் ஓஎஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
வியர் ஓஎஸ் என்பது, திறன்கடிகாரங்களுக்காகவே கூகுள் உருவாக்கிய தனித்துவமான இயங்குதளம். திறன்கடிகாரங்களில் இது எளிதான இடைமுகம், மேம்பட்ட உணரிகள், பயனரின் செயற்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் திறன்கள் ஆகியவற்றின் மூலம், தனியே உடற்பயிற்சி செயலிகள் தேவைப்படாமல், நம்மை அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறது.
இந்த வியர் ஓஎஸ் இயங்கும் திறன்கடிகாரம் மூலம், நடக்கும் காலடிகள் எண்ணிக்கை, உடல் இயக்கம், பயிற்சி நேரம், இதயத்துடிப்பு, தூக்க தரம் போன்றவற்றைத் தொடர்ச்சியாக கண்காணிக்க முடிகிறது. இதிலுள்ள இயக்கத்திற்கான அறிவிப்புகள் (Activity Rings), அசைவு இலக்குகள் (Move Goals), இதய நலப் பயிற்சிகள் (Heart Zone Training) போன்ற அம்சங்கள் பயனரைத் தொடர்ந்து சீரான பயிற்சிக்கு ஊக்குவிக்கின்றன.
திறன்கடிகாரங்களில் இதை நிறுவிய பல பயனர்கள், தனியாக ஓர் உடற்பயிற்சி செயலியைச் செயல்படுத்தாமல் திறன்கடிகாரம் தானாகவே தங்களது நடை, ஓட்டம், சைக்கிள் ஓட்டம், தூக்கம் போன்றவற்றைக் கணக்கெடுப்பது நம்மை அறியாமலேயே நம் உடலுக்குத் தேவையான உடற்பயிற்சியை நாம் கொடுத்துவிடுகிறோம் என்ற மகிழ்வை உருவாக்குவதாகக் குறிப்பிடுகின்றனர்.
மேலும் சில திறன்கடிகாரங்களில் மூச்சுப் பயிற்சி, மனத்தெளிவுக்கான பயிற்சிகளும் இடம்பெற்றுள்ளன. சில கடிகாரங்கள் தாமாகவே “நீங்கள் நீண்ட நேரமாக அமர்ந்திருக்கிறீர்கள், சிறிது நேரம் நடந்து வாருங்கள்” என நினைவூட்டுகின்றன. இது பயனரின் ஒருநாள் முழுவதும் ஓர் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்த உதவுகிறது. உடற்பயிற்சி செயலிகள் சில நேரங்களில் கட்டாயப் பாணியில் செயல்படுவதால், பயனர்களில் எதிர்மறையான மனநிலை உருவாகும் நிலை உள்ளது. ஆனால், வியர் ஓஎஸ் இயங்கும் திறன்கடிகாரம் மிகச் சாதாரணமாக, நம் இயல்பான வாழ்க்கையைச் சீரமைக்கும் அளவிற்கு மட்டுமே வேலை வாங்குகிறது. இதனால் அதன் வேண்டுகோளை ஏற்று சிறிது தூரம் நடந்து வருவது தங்களுக்கு நல்லது பயப்பதாக பயனர்கள் கருதுகின்றனர்.
‘காலம் பொன் போன்றது’ என்ற பழமொழியை கேட்டிருப்போம். அந்தக் காலத்தின் அளவுகோலான நேரத்தை நமக்குக் காட்டும் கடிகாரங்களே, உடல் நலத்தையும் பேணும் வழிகளைக் கொடுக்கும்போது ‘உடல் நலமும் பொன் போன்றது’ என்றே கருத வைக்கிறது.
- விவேக்பாரதி
திறன்கடிகார அனுபவம் பற்றி பயனர் எழுதிய கட்டுரை
சாம்சங் கேலஸ்கி திறன் கடிகாரம் பற்றிய திறனாய்வு
