உலக உணர்ச்சிக்குறி நாள்

ஆப்பிள் நிறுவனம் உலக உணர்ச்சிக்குறி நாளை முன்னிட்டு ஒரு நவீன புதிர் விளையாட்டைப் பரிசாக வழங்கியுள்ளது.

உணர்ச்சிக்குறி விளையாட்டு (Emoji Game) எனப்படும் இது முதலில் செப்டம்பர் மாதம் வெளியாகவிருந்த ஐஓஎஸ் 26 வருவதாக கூறப்பட்டிருந்தது​. ஆனால் ஜூலை 17 ஆம் தேதி கொண்டாடப்படும் உலக உணர்ச்சிக்குறி தினத்தைக் கொண்டாடும் வகையில் இது எதிர்பாராதவிதமாக முன்கூட்டியே வெளி​யிட்டுள்ளது. உணர்ச்சிக்குறி தினத்தை 2017 ஆம் ஆண்டில் புதிய உணர்ச்சிக்குறிகளை அறிமுகப்படுத்தியும், 2018 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிர்வாகத்தின் சுயவிவர படங்களை உணர்ச்சிக்குறியாக மாற்றி கொண்டாடியதும் நினைவுகூரத்தக்கது. இ​ன்றைய காலத்தில் உணர்ச்சிக்குறிகள் நம் தகவல் பரிமாற்றத்தின் அவசியமான பகுதியாக மாறியுள்ளன. இப்போது ஒரு விளையாட்டையே அறிமுகப்படுத்துவதன் மூலம் ஆப்பிள் தன் கொண்டாட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

இந்த விளையாட்டு ஆப்பிள் நியூஸ்+ சேவையின் புதிய புதிர் விளையாட்டாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ​இந்த சேவையில் ஏற்கனவே பல புதிர் விளையாட்டுகள் உள்ளன. இந்த விளையாட்டின் செயல்முறை மிகவும் களிநயமானது. பிரபலமான வர்டில் விளையாட்டைப் போலவே, இதுவும் காலி இடங்களை நிரப்பும் வகையிலான விளையாட்டாகும். ஆனால் எழுத்துகளுக்குப் பதிலாக உணர்ச்சிக்குறிகளை பயன்படுத்துவதைத் தனித்துவமாகக் கொண்டுள்ளது.

ஆப்பிளின் விளையாட்டில் முழுமையடையாத சொற்கள் காட்டப்படும். பயனர்கள் சரியான உணர்ச்சிக்குறியை இழுத்து அந்த வார்த்தையின் காலி இடத்தில் போட்டு புதிரை முடிக்க வேண்டும். உதாரணமாக, disappear என்ற சொல்லில் pear எனும் உணர்ச்சிக்குறியைச் சரியான இடத்தில் வைக்க வேண்டும். ஆப்பிள் நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட ஜென்மோஜிகளும் இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படுகின்றன.

பிற ஆப்பிள் நியூஸ்+ புதிர்களைப் போலவே, உணர்ச்சிக்குறி விளையாட்டும் தினமும் புதுப்பிக்கப்படும். இது பயனர்களுக்குத் தொடர்ந்து புதிய சவால்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டைத் தொடங்க, ஆப்பிள் பயனர்கள் தங்கள் நியூஸ் செயலியைத் திறந்து Following என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் உணர்ச்சிக்குறி விளையாட்டைத் தேர்வு செய்ய வேண்டும்.

இது ஐஓஎஸ் 18.4, ஐபேட்ஓஎஸ் 18.4, மேக்ஓஎஸ்15.4 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்புகளில் இயங்கும் கருவிகளில் கிடைக்கிறது. மற்ற அனைத்து ஆப்பிள் நியூஸ்+ புதிர்களைப் போலவே, இந்த விளையாட்டும் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. தற்போதைக்கு அமெரிக்கா, கனடாவில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே இந்த விளையாட்டு கிடைத்திருக்கிறது. வெகு விரைவில் உலகம் முழுவதிலும் எதிர்பார்க்கலாம்.

இதைப்போலவே இன்னொரு சுவையான தகவலும் காத்திருக்கிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள உணர்ச்சிக்குறிகள் பற்றிய தகவல்தான் அது. புதிய உணர்ச்சிக்குறிகளை அறிமுகப்படுத்தும் யூனிகோடு கன்சோர்ஷியம் அமைப்பு, ஒன்பது உணர்ச்சிக்குறிகளை வெளியிட்டுள்ளது.

அவை கடிக்கப்பட்ட ஆப்பிள், பாலே நடனக் கலைஞர், பிக்ஃபுட் என்ற வட அமெரிக்க நாட்டார்கதைகளில் வரும் பெரிய குரங்கு, செய்வதறியாது திகைக்கும் முகம், சண்டையிடும் மேகம், ஆர்கா திமிங்கலம், புதையல் பெட்டி, டிரோம்போன் இசைக்கருவி, நிலச்சரிவு ஆகியவையாகும். இந்த புதிய உணர்ச்சிக்குறிகள் மரபான அடையாள குறியீடுகளைக் கொண்டிருக்கின்றன. அதோடு காட்சி ரீதியாகத் தனித்துவமானவையாகவும் இருக்கின்றன.

இந்த உணர்ச்சிக்குறிகளைக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட தரநிலையின் அதிகாரப்பூர்வ வெளியீட்டை வரும் செப்டம்பர் 9 அன்று எதிர்பார்க்கலாம். புதிய தரநிலை வெளியானதும், ஆப்பிள், கூகிள் போன்ற நிறுவனங்கள் அதை தங்கள் கருவிகளில் அமல்படுத்த சில காலம் ஆகலாம். 

  • மு. இசக்கிமுத்து
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now