ஆண்டிராய்டு திறன்பேசிகளையும் விண்டோஸ் இயங்குதள கணினிகளையும் இணைக்கும் ‘விண்டோசுடன் இணைக’ (Link to Windows) அம்சம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தி, பயன்பாட்டை எளிமைப்படுத்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்றைய தொழில்நுட்ப உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் திறன்பேசிகளையும் கணினிகளையும் இணைக்கும் வழிகளை பல்வேறு செயலிகள் செய்து வருகின்றன. அதன் வரிசையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ‘விண்டோசுடன் இணைக’ என்ற அம்சத்தை சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது. அதாவது, விண்டோஸ் இயங்குதளம் உள்ள கணினியைத் திறன்பேசிகளால் இயக்கும் அம்சம் அது. அதன் மூலம் திறன்பேசியைக் கொண்டே விண்டோஸ் கணினியிலிருந்து செய்திகள் அனுப்புதல், அழைப்புகளை ஏற்றல், படங்களைப் பார்த்தல் போன்ற செயல்களைச் செய்ய முடிந்தது. இதை மேம்படுத்தி அந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட அம்சத்தில் ஆண்டிராய்டு திறன்பேசிகளைக் கொண்டு விண்டோஸ் 11 கணினிகளில் கூடுதலாகச் சில பணிகளைச் செய்துகொள்ளலாம்.
என்னென்ன பணிகள்?
- கணினியைப் பூட்டலாம் : நம் ஆண்டிராய்டு திறன்பேசியலிருந்து ஒரு தொடுதலில், விண்டோஸ் கணினியை பூட்டலாம். நம் கணினியை வேலை இடத்தில் விட்டுவிட்டு சென்றாலும், பாதுகாப்பாக பூட்டும் வழி இது.
- நகல்களை அணுகலாம் : கணினியில் நாம் அண்மையில் நகலெடுத்த உரைகள், படங்கள் போன்றவை திறன்பேசியில் தெரியும். அதிலிருந்து தேவையானதை அங்கிருந்து நேரடியாக வெட்டி ஒட்ட முடியும்.
- அண்மைக் கோப்புகளைப் பார்க்கலாம் : கணினியில் கடைசியாகப் பயன்படுத்திய 10 முக்கியமான கோப்புகளின் பட்டியலை திறன்பேசியில் முன்னோட்டமாகப் பார்க்கலாம். அவற்றைத் தட்டச்சு செய்யாமல் பார்த்துவிட்டு, மீண்டும் கணினியில் திறக்க முடியும்.
- கணினிக்கு கோப்புகள் அனுப்பலாம் : ஆண்டிராய்டு திறன்பேசியலிருந்து படம், காணொளி முதலிய எந்த வகைக் கோப்புகளையும் ஒரே தொடுதலில் கணினிக்கு அருகலை உதவியுடன் அனுப்பலாம். அதற்கு தனியாக இணைப்புக் கம்பிகள் தேவையில்லை.
- கருவியைக் கண்காணிக்கலாம் : புதிய பயனர் இடைமுகத்தின் செயற்பாட்டுடன் நமது கணினியின் அருகலை இணைப்புத் தகவல், மின்கல நல நிலை, ப்ளூடூத் இனைப்புகள் முதலானவற்றை நேரடியாக கண்காணித்துக் கொள்ளலாம்.
செயல்படுத்துவது எப்படி?
கணினியைக் கட்டுப்படுத்தும் இவ்வம்சத்தைப் பெற, விண்டோஸ் 11 இயங்குதளத்தின் புதிய மேம்பாடுகளைச் சோதிக்க வழங்கப்பட்டுள்ள இன்சைடர் ப்ரீவியோ பில்டு (Windows 11 Insider Preview Build) இயங்குதளம் நிறுவப்பட்டிருக்க வேண்டும். ஆண்டிராய்டு திறன்பேசியில் விண்டோஸ் செயலியின் சோதனைப் பதிப்பைத் தரவிறக்கிக் கொள்ள வேண்டும். இரு கருவிகளிலும் ஒரே மைக்ரோசாப்ட் கணக்கில் உள்நுழைய வேண்டும். புளூடூத்தும் அருகலையும் இயக்கத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். கணினியில், Settings > Bluetooth & devices > Mobile Devices → Manage Devices என்ற இடத்திற்குச் சென்று, “Remote PC Controls” மற்றும் “Access PC Clipboard” ஆகியவற்றை இயக்க வேண்டும். அதன்பின் கணினியையும் கைக்குள் இருக்கும் திறன்பேசியால் இயக்கலாம்.
இதன் நன்மைகள் என்ன?
மைக்ரோசாப்ட்டின் இந்த புதிய முயற்சி, ஆப்பிள் கருவிகளை இணைக்கும் கன்ட்டினியுட்டி அம்சத்தைப் போன்று செயல்படுகிறது. இது “தொழில்நுட்பத்தின் புதிய பரிமாண அனுபவத்தை தரும்” என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இதன்மூலம் கையடக்கமாக உள்ள திறன்பேசியின் நீட்டிக்கப்பட்ட வடிவமாக கணினி மாறும். கணினியை அடுத்தவர் அத்துமீறலின்றி பாதுகாப்பாக இயக்கலாம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர். இது இரண்டு கருவிகளையும் பயன்படுத்தும் தேவை இருப்பவர்களுக்கு பரிசாகத் திகழும் என்றும் கூறப்படுகிறது. சோதனை முறையில் பயனர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இவ்வம்சம் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது.
- விவேக்பாரதி
மேம்படுத்தல் பற்றிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அறிவிப்பு
கணினியைத் திறன்பேசி மூலம் இயக்கும் அம்சம் குறித்த செய்தி
