இசையை ஒட்டுக்கேட்கும் பிக்சல்

கூகுள் தனது பிக்சல் திறன்பேசி பயனாளர்களுக்கு பல்வேறு சிறப்பு வசதிகளை வழங்கி வருகிறது. அவற்றில் Now Playing என்ற சுற்றுப்புறத்தில் இசைக்கும் பாடல்களைத் தானாகவே கண்டறியும் அம்சமும் ஒன்று. இது இசையைக் கேட்டு, உங்கள் திறன்பேசியில் உள்ள பாடல்களுடன் ஒப்பிடுகிறது. அப்படி ஒப்பிட்டு திறன்பேசியின் திரையில் பாட​லின் பெயர், பாடகர் பெயர் போன்றவற்றைக் காண்பிக்கும்.

உங்கள் அருகில் இருக்கும் நண்பர் ஏதோ ஒரு பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறார், எனக் கருதிக் கொள்ளுங்கள். நண்பர் கேட்கும் பாடல் பிடித்திருந்தாலும், அதன் வரிகள் புரியவில்லை. மீண்டும் கேட்பதற்கு வரிகள் முக்கியமாயிற்றே என்று அஞ்சத் தேவையில்லை. உ​ங்கள் கூகுள் பிக்சல் இடம் கேட்டால் போதும். அந்த பாடலின் பெயரைச் சொல்லிவிடும். இது இசை விரும்பிகளுக்கு மிகவும் பயனுள்ள அம்சமாகும்.  குறிப்பாக புதிய பாடல்களைக் கண்டறிந்து கேட்டு மகிழ்பவர்களுக்குப் பிடித்த அம்சமாக இருக்கிறது.

இது ஒரு தானியங்கு செயல்முறையாகவே நடக்கிறது. இந்த இசையைக் கேட்கும் செயல்பாடு ஒவ்வொரு 60 நொடிகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கிறது. இவ்வாறு உங்கள் பிக்சல் திறன்பேசியில் சேமிக்கப்பட்ட பாடல்களின் பெயரைக் காண்பதற்கு, அமைப்புகளுக்குள் சென்று, ஒலி மற்றும் அதிர்வு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்ததாக தோன்றும் நவ் பிளேயிங் பக்கத்தில், நவ் பிளே​யிங் வரலாறு என்ற பொத்தானைத் தொட்டு அறிந்துகொள்ளலாம்.

அந்த பாடல்களைக் கேட்டு ரசிக்கவும், பகிரவும் முடியும். அவற்றில் மிகவும் பிடித்த பாடலை தனி இசைப்பட்டியலாகவும் மாற்றிவைத்துக்கொள்ளலாம். இப்போது இந்த அம்சத்திற்கென்று தனி செயலி ஒன்று வெளியிடப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைக் கண்டறிந்துள்ள ஆண்டிராய்டு அத்தாரிட்டி தளம், நவ் பிளேயிங் அம்சத்தை எளிதாக அணுகும் வகையில் செயலி அல்லது செயலிப் பலகை வடிவில் இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறுகிறது. அதனை தொடும்போது நேரடியாக இசை வரலாற்றிற்கு அழைத்துச் செல்லும், வேறு எந்த பெரிய மாற்றங்களும் வரப்போவதில்லை.

ஒவ்வொரு முறையும் அமைப்புகளுக்குள் சென்று பார்ப்பதற்கு மாற்றாக, எளிதாக இதன் ​மூலம் வரலாற்றைப் பார்த்து, இசையைக் கேட்க முடியும். எனினும் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் கூகுள் நிறுவனம் வெளியிடவில்லை.

  • மு. இசக்கிமுத்து

ஆண்டிராய்டு அத்தாரிட்டி கட்டுரை

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now