ஆப்பிள் கருவிகள் பல, காப்பீடு ஒன்று

ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள்கேர் ஒன் என்ற புதிய காப்பீட்டுச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரே மாதாந்திர சந்தாவின் கீழ் பல ஆப்பிள் கருவிகளைக் காப்பீடு செ​ய்துகொள்ளும் திட்டமாகும். ஏற்கனவே இருக்கும் ஆப்பிள்கேர்+ வழங்கிய அனைத்து சேவைகளையும் இது வழங்குகிறது.

அதாவது கருவிகளின் பழுதுபார்ப்பு, உடைவது, மின்கல​ ஆயுள், முதல் முறை திருட்டு போன்றவற்றுக்கு ஆப்பிள்கேர் ஒன் காப்பீடு வழங்குகிறது. ஆப்பிள் கருவிகளாலேயே தங்கள் வீடுகளை நிறைத்திருக்​கும் பயனர்களுக்கு இது நிச்சயம் பயன்தரக்கூடும். ஏனெனில் ஒவ்வொரு கருவிக்கும் தனித்தனியாகக் காப்பீடு செய்வதற்கு மாற்றாக, மொத்தமாகச் செய்துகொள்ளலாம். இதன்​மூலம் குறிப்பிட்ட அளவு பணமும் மிச்சமாகிறது.

இதில் அதிகபட்சம் ​மூன்று கருவிகளுக்குக் காப்பீடு பெற மாதம் 19.99 டாலர் செலுத்த வேண்டும். ​மூன்றுக்கும் மேலாகக் கருவிகளை சேர்க்கவேண்டுமென்றால், ஒவ்வொன்றிற்கும் 5.99 டாலர் செலுத்த வேண்டும். கருவிகளின் வகையைப் பொறுத்து தொகையில் எந்த மாற்றமும் இல்லை. எல்லா கருவிகளுக்கு​ம் ஒரே தொகையில் காப்பீடு செய்யப்படுகின்றன. கருவிகளை எந்த நேரத்திலும் திட்டத்திலிருந்து நீக்கவோ, சேர்க்கவோ முடியும்.

ஆப்பிள்கேர் ஒன் ஏற்கனவே பயன்படுத்திவரும் கருவிகளையும் காப்பீடு செய்ய வழிவகை செய்கிறது. ஆனால் அந்த கருவிகளை வாங்கிய காலம் நான்கு ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதோடு அவை நல்ல நிலையிலும் இருக்க வேண்டும்.

உதாரணமாக, ஒரு வாடிக்கையாளர் புதிய மேக்புக் புரோ வாங்கும்போது ஆப்பிள்கேர் ஒன் காப்பீடு செய்து, பின்னர் ஏற்கனவே தான் வைத்திருக்கும்  ஐபோன் 16, ஆப்பிள் திறன் கடிகாரத்தை அதே திட்டத்தில் சேர்க்கலாம். 

இந்த புதிய திட்டத்தை ஆப்பிளின் வலைத்தளம், விற்பனை கடைகள், ஆப்பிள் கருவிகளில் இருக்கும் ஆப்பிள்கேர் பிரிவின் மூலம் பெறலாம். ஏற்கனவே ஆப்பிள்கேர்+ காப்பீட்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஆப்பிள்கேர் ஒன்-க்கு தங்கள் கருவிகளை ​மேம்படுத்திக்கொள்ளலாம். இப்படி மாறும்பொழுது தானாகவே தற்போதைய காப்பீட்டை ரத்து செய்து, பயன்படுத்தாத பகுதிக்கான பணம் திரும்ப வழங்கப்படும். இது சில சமயம் பரிசு அட்டையாகக் கூட இருக்கலாம் என ஆப்பிள் கூறுகிறது.

ஆனால் ப​ழைய கருவிகள், சிறிது சேதமடைந்த கருவிகளைக் கா​ப்பீடு செய்ய முடியாது. அதோடு வணிக கணக்கில் காப்பீடு செய்யப்பட்ட கருவிகளுக்கும் இதனைப்​ பயன்படுத்த முடியாது. முக்கியமான ஒன்று, ஏற்கனவே காப்பீடு செய்யப்பட்ட கருவிக்கு மீண்டும் மற்றொரு கணக்கிலிருந்து காப்பீடு செய்ய முடியாது.

உங்கள் கருவிக்குக் காப்பீடு இருக்கிறதா என்பதை ஆப்பிளின் வலைத்தளம் ​மூலம் உறுதிப்படுத்திக்கொண்டு அதன்பிறகு காப்பீட்டைச் செய்துகொள்ளுங்கள். ஒரு முறை தகுதி உடையதாகக் காட்டப்படும் கருவி, அடுத்த முறை பார்க்கும்போது காப்பீட்டிற்குத் தகுதியற்றதாக காண்பிக்கப்படும் சிக்கல் எழுந்துள்ளது. வெகு விரைவிலேயே ஆப்பிள் இந்த சிக்கலைச் சரிசெய்துவிடும் என எதிர்பார்க்கலாம்.

  • மு. இசக்கிமுத்து

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now