திறமைசாலி ஆண்டிராய்டு

நாம் அன்றாடம் பயன்படுத்தும் திறன்பேசியில், ஆண்டிராய்டு இயங்குதளம் வழங்கும் திறனம்சங்கள் பல கவனிக்கப்படாமலேயே உள்ளன. செயலிகளுக்கு இடையில் உலவுவதிலேயே அதிக நேரம் செலவாகும் நிலையில், திறன்பேசிகளில் இயல்புநிலை அம்சங்களாக வழங்கப்பட்டிருக்கும் இவற்றின் செயல்கள், பயனர்களுக்கு வியப்பூட்டுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம். 

நகராத் திரை

நம் திறன்பேசியை குழந்தைகளிடமோ மற்றவர்களிடமோ கொடுக்கும்போது, நாம் காட்ட விரும்பும் செயலியைத் தவிர, வேறு இடங்களுக்குச் சென்று உலவாமல் தடுக்கும் வழியை ஆண்டிராய்டு வழங்குகிறது. அதற்கு செயலியை ஒட்டுதல் (App pinning) என்று பெயர். திறன்பேசியில் Settings > Security & Privacy > More security & Privacy > App pinning என்ற இடத்திற்குச் சென்று இவ்வம்சத்தை நிறுவிக் கொள்ளலாம். பின்னர், திரையில் நிறுத்த நினைக்கும் செயலியை மேலே தள்ளி, அதில் காட்டும் மூன்று புள்ளிகளைத் தொட்டு திரையோடு ஒட்டி விடலாம். அதிலிருந்து திரையை விலக்க வேண்டுமானால் கடவுச்சொல் தேவை. இதன்மூலம் நமது தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது.

கடவுச்சொல் படம்  

நாம் இணைந்திருக்கும் அருகலையின் (WiFi) கடவுச்சொல்லை இனி ஒவ்வோர் எழுத்தாகச் சொல்லித்தான் பகிர வேண்டும் என்பதில்லை. நமது திறன்பேசியின் அமைப்புகள் (Settings) பக்கத்தில் உள்ள அருகலை அம்சத்திற்குள் சென்று, அதிலேயே கொடுக்கப்பட்டிருக்கும் பகிர் என்பதைத் தொட்டால் போதும். அருகலையின் கடவுச்சொல் இடப்பட்டு, உடனே உள் நுழையும் விதமாக கியூஆர் படம் ஒன்று காட்டப்படும். அதைக் கேமரா செயலி மூலம் படமெடுத்து, கடவுச்சொல்லை உள்ளிட வேண்டிய தேவை இன்றி எளிதில் அருகலையோடு இணைத்துக் கொள்ளலாம். கணினியில் தட்டச்சு செய்து உள்ளிட வசதியாக கியூஆர் படத்திற்குக் கீழே கடவுச்சொல்லும் எழுத்துகளாக தெரியும். அதையும் பயன்படுத்தலாம்.

அறிவிப்புகளின் நினைவேடு

திறன்பேசியின் தலை மீது அன்றாடம் வந்து கொட்டும் நூற்றுக் கணக்கான அறிவிப்புச் செய்திகளை, பல நேரங்களில் நாம் ஒரே தள்ளில் காணாமல் போகச் செய்வோம். ஆனால், அதற்குள் முக்கியமான செய்தியோ அறிவிப்போ இருந்திருந்தால் நமக்குத் தெரிந்திருக்காது. இந்தச் சிக்கலைக் கையாள அறிவிப்புகளை நினைவு வைத்துக் கொள்ளும் அம்சத்தை ஆண்டிராய்டு வழங்குகிறது. அமைப்புகள் பகுதியில் அறிவிப்புகள் என்ற இடத்திற்குள் Notification history என்ற அம்சத்தை நிறுவிக் கொள்வதன் மூலம் 24 மணி நேரத்திற்குள் நமக்கு வந்திருக்கும் அறிவிப்புகளைப் பார்த்துக் கொள்ள முடியும்.

நகலெடுக்கும் கேமரா 

முன்னர் ஏதேனும் ஒரு பக்கத்தை அச்செடுக்கவோ படமாக்கவோ வேண்டியிருந்தால் நகலெடுக்கும் செயலியில் அதைப் படமெடுக்க வேண்டியிருக்கும். ஆண்டிராய்டு அதையும் எளிமையாக்கி, இயல்புநிலையில் உள்ள கேமராவே நகலெடுக்கும் வகையில் மேம்படுத்தியுள்ளது. கியூஆர் படம், கோப்பு முதலியவற்றை கேமரா மூலமே நகலெடுத்துக் கொள்ளலாம். சில திறன்பேசிகளில் இயல்பு கேமராவுடன் கூகுள் லென்ஸ் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. இது கேமராவில் படமெடுத்து, அதைப் பற்றி இணையத்தில் எளிமையாகத் தேடும் வசதியை வழங்குகிறது. 

திறன்மிக்க வாசகத் தேர்வு

பொதுவாக திரையில் தெரியும் வாசகங்களில் குறிப்பிட்ட சொற்களையோ, வாக்கியத்தையோ நாம் தேர்வு செய்யும்போது ‘முழுமையாகத் தேர்வு செய்தல்’, ‘வெட்டுதல்’, ‘ஒட்டுதல்’ போன்ற அம்சங்கள் காட்டப்படும். இதையும் ஆண்டிராய்டு மேம்படுத்தியிருக்கிறது. அதன்படி, தேர்வு செய்யப்படும் சொல்லின் தன்மையைப் பொறுத்து ‘தேடுதல்’, ‘நாட்குறிப்பில் பதிவு செய்தல்’, ‘தொடர்பு கொள்ளுதல்’ போன்ற சேவைகளைச் சேர்த்து வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, தேர்வு செய்யும் வாசகத்தில் தேதி இருந்தால், உடனே ‘நாட்குறிப்பில் பதிவு செய்’ என்ற அம்சம் தானாக காட்டப்படும். எண்கள் இருந்தால், ‘தொடர்பு கொள்க’ என்று காட்டும். 

இப்படி இன்னும் ஒற்றைக் கை வசதி, இணை செயலிகள், ஒட்டிப்பலகை நினைவு முதலிய பல திறனம்சங்களை ஆண்டிராய்டு இயங்குதளம் வழங்கி வருகிறது. அடுத்தடுத்த புதுப்பிப்புகளில் கிடைக்கும் இவ்வசதிகள், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தி வருவதகச் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

  • விவேக்பாரதி

ஆண்டிராய்டு வழங்கும் திறனம்சங்களின் பட்டியல் குறித்த கட்டுரை

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now