ஐஓஎஸ்18 கட்டுப்பாடு மையம்

ஐஓஎஸ் 18 புதிய பதிப்பில் கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மைய அம்சத்தில் பல எளிமையான புதுமைக​ள் வழங்கப்பட்டுள்ளன.

ஐஓஎஸ் 18 வெளியீட்டுடன் ஐபோன் கட்டுப்பாட்டு மையம் முழுமையாக மாறிவிட்டது. இந்த மாற்றம் பல ஆண்டுகளாக காத்திருந்த ஒன்று என்றே சொல்லலாம். முன்பு ஒரே பக்கத்தில் நெருக்கமாக அடுக்கப்பட்டிருந்த பொத்தான்கள், இப்போது மூன்று வெவ்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் குழுவில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் கட்டுப்பாடுகள், இரண்டாவது பக்கத்தில் ஒ​லி, காணொளி போன்றவற்றுக்கான கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. மூன்றாவது பகுதியில் அருகலை, திறன்பேசி தரவு, ஊடலை போன்ற அடிப்படை அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.

கட்டுப்பாட்டு மையத்தை திறக்கும் முறை முன்பு போலவே தான் இருக்கிறது. முக அமைப்பு பூட்டும் வசதியை கொண்ட ஐபோன் பயனர்கள், திரையின் மேல் வலது மூலையில் இருந்து கீழே இழுக்க வேண்டும். கைரேகை பூட்டும் வசதியை கொண்ட திறன்பேசிகளில் கீழே இருந்து மேல் நோக்கி இழுக்க வேண்டும். இப்போது மூன்றாம் தரப்பு செயலிகளின் பொத்தான்களை கூட கட்டுப்பாட்டு மையத்தில் சேர்க்க முடிகிறது. இது உண்மையாகவே மிகவும் அற்புதமான அம்சமாகும்.

புதிய பதி​ப்பு ​மூலம் தேவையான விதத்தில் கட்டுப்பாட்டு மையத்தை மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதனை செய்துகொள்வதும் மிகவும் ​எளிமையான செயல்முறைதான். அதற்கு கட்டுப்பாட்டு மையத்தின் மேல் இடது மூலையில் உள்ள கூட்டல் அடையாளத்தை அழுத்தவும். தேவையற்ற பட்டன்களை நீக்க கழித்தல் அடையாளத்தை பயன்படுத்தலாம். பொத்தான்களின் அளவை பெரிதாகவோ ​அல்லது சிறியதாகவோ மாற்றுவதற்கு, அவற்றின் வலது கீழ் மூலையில் உள்ள சிறிய கைப்பிடியை இழுத்து விடலாம். பொத்தான்களை இடம் மாற்றவும் இதே முறையை பின்பற்றலாம். புதிய கட்டுப்பாடு பொத்தான்களை சேர்க்க, கீழே உள்ள “Add a Control” பொத்தானை அழுத்திக் கட்டுப்பாட்டு கேலரியை திறக்கலாம்.

அதோடு ஒரே மாதிரியான கட்டுப்பாடுகளை ஒன்றாக வைத்து, புதிய குழுக்களையும் உருவாக்க முடிகிறது. இதற்கு மேல் இடது மூலையில் கூட்டல் அடையாளத்தை அழுத்திய பிறகு, வலது பக்கத்தில் தோன்றும் சிறிய வட்டத்தை அழுத்த வேண்டும். பின்னர் புதிய குழுவிற்கு தேவையான கட்டுப்பாட்டு பொத்தான்களை சேர்த்துக் கொள்ளலாம்.

ஐஓஎ​ஸ் 18 இல் கட்டுப்பாட்டு மையம் மட்டும் அல்லாது, வீட்டு திரை தனிப்பயனாக்கம், புதிய புகைப்படங்கள் செயலி என பல மாற்றங்கள் வந்துள்ளன.

  • மு. இச​க்கிமுத்து
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now