கலைதொழில்நுட்ப உலகில் ஒவ்வொரு நாளும் புதிய செயலிகள் அறிமுகமாகினாலும், எளிய, பயன்பாட்டுக்கு எளிதான கூகுள் கீப் நோட்ஸ் (Google Keep notes) இன்னும் பலரின் மனத்தில் இடம்பிடித்துக்கொண்டே இருக்கிறது. “குறிப்பு எழுத வேண்டும்” என்று நினைத்தாலே மக்கள் விரல் தானாகவே கூகுள் குறிப்பைத் திறக்கும் . ஆனால் காலப்போக்கில், அந்தச் சிறிய குறிப்புகள் ஆயிரக்கணக்கில் சேர்ந்து பழைய குறிப்புகளை கண்டுபிடிக்கமுடியாமல் போகிறது. இந்த பிரச்சினையைச் சரி செய்ய உதவும் சில பரிந்துரைகளைக் காணலாம்.

சிட்டைகள்
கூகுள் குறிப்புகளில் உள்ள சிட்டை (label) அம்சம், பயனர்களுக்கு ஒரு சிறந்த தேடல் வசதியைத் தருகிறது. இதன் மூலம் தனிப்பட்டது, வேலை, யோசனைகள் போன்ற பல பிரிவுகளை உருவாக்கி வைப்பதால் சில வினாடிகளில் குறிப்புகளைக் கண்டுபிடிக்க முடிகிறது. ஒரு பத்திரிகை எழுத்தாளர் தனது அனுபவத்தைப் பகிர்ந்தபோது, ‘சிட்டைகள் பயன்படுத்திய பிறகே கூகுள் குறிப்புகள் எனக்கு மீண்டும் கட்டுப்பாட்டில் வந்தது’ என்று குறிப்பிட்டார்.
குத்தூசி
முக்கியக் குறிப்புகள், சிக்கலான கூட்டுத் திட்டங்கள் அல்லது பரீட்சை குறிப்புகள் என்றால், அவற்றைத் தேடிக்கொண்டே காலம் கழிக்கத் தேவையில்லை. மாறாக அவற்றை குத்தூசியில் பின் செய்யும் வசதி மூலம் மேலே வைத்து, உடனடியாக அணுகலாம்.
நீக்கும் முறை
ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் திரைப்பிடிப்புகள், பழைய குறிப்பு விவரங்கள், காலாவதியான தகவல்கள் போன்றவை முகப்பு திரையைக் குழப்பமடையச் செய்கின்றன. அதற்கான எளிய வழி, நீக்குவது மட்டும்தான். இந்த சிறிய பழக்கம் கூகுள் குறிப்புகளைச் சுத்தமாக வைத்திருக்க பெரும் பங்கு வகிக்கிறது.
கூகுள் குறிப்புகள் காகித ஒட்டும் குறிப்புகள் போலவேதான் ஆனால் திறன்கருவியில் செய்ய இயலும். அதாவது உடனடியாக தோன்றும் யோசனைகளைப் பதிவு செய்யும் கருவி. அந்த யோசனைகளைத் திட்டமிட்ட முறையில் வளர்க்க, பிற கருவிகளைத் தேட வேண்டியிருக்கிறது.
அதேபோல் கூகுள் நோட்ஸ் சிறிய அளவிளான குறிப்புகளுக்குச் சிறந்தது. ஆனால் விபரமான திட்ட மேலாண்மை, அட்டவணைகள் போன்ற பணிகளில் அது போதுமானதாக இருப்பதில்லை. அதற்காக, சிலர் நோஷன் அல்லது எவர்நோட் போன்ற செயலிகளை இணைத்துப் பயன்படுத்துகிறார்கள். இவை கூகுள் குறிப்புகளின் குறைகளை நிரப்புகின்றன.
கூகுள் நோட்ஸ் பயனர்களின் அன்றாட வாழ்க்கையை எளிமைப்படுத்தும் ஒரு துணைக் கருவி. ஆனால் அதை முழுமையாகப் பயனுள்ளதாக மாற்றச் சிறிய நடைமுறைகளைப் பின்பற்றினால் அது வெறும் செயலியாக மட்டும் இல்லாமல் நமது அன்றாட சிந்தனைகளுக்கான தொழில்நுட்ப நினைவகமாக மாறும்.
- சத்யா கோபாலன்
